அபி சேத் ஸு-துராசாரோ
பஜதே மாம் அனன்ய-பாக்
ஸாதுர் ஏவ ஸ மந்தவ்ய:
ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ:
Synonyms:
அபி — இருந்தும்; சேத் — கூட; ஸு-துராசார: — மிகவும் மோசமான செயல்களைச் செய்பவன்; பஜதே — பக்தித் தொண்டில் ஈடுபட்டு; மாம் — எனக்கு; அனன்ய-பாக் — பிறழாமல்; ஸாது: — சாது; ஏவ — நிச்சயமாக; ஸ: — அவன்; மந்தவ்ய: — கருதப்பட வேண்டும்; ஸம்யக் — முழுமையாக; வ்யவஸித: — தீர்மானத்தில் திடமாக; ஹி — நிச்சயமாக; ஸ: — அவன்.
Translation:
ஒருவன் மிகவும் மோசமான செயலைச் செய்தாலும், அவன் பக்தித் தொண்டில் பிறழாது ஈடுபட்டிருந்தால், அவனை சாதுவாகவே கருத வேண்டும்; ஏனெனில், அவன் தனது தீர்மானத்தில் திடமாக உள்ளான்.
Purport:
இப்பதத்திலுள்ள ஸு-துராசார என்னும் சொல் மிகவும் முக்கியமானதாகும், இச்சொல்லை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். உயிர்வாழி கட்டுண்ட நிலையில் இருக்கும்போது, அவனுக்கு இரண்டு விதமான செயல்கள் உண்டு: ஒன்று கட்டுண்ட செயல்கள், மற்றது திவ்யமான செயல்கள். கட்டுண்ட வாழ்வின் காரணத்தினால், இந்த உடலைப் பாதுகாப்பதற்காகவும், சமூகம் மற்றும் நாட்டின் சட்டங்களைப் பின்பற்றுவதற்காகவும் பக்தர்கள்கூட பல்வேறு பௌதிகச் செயல்களில் ஈடுபட வேண்டியுள்ளது, அத்தகுச் செயல்கள் கட்டுண்ட செயல்கள் எனப்படுகின்றன. இதைத் தவிர, தனது ஆன்மீக இயற்கையை முற்றிலுலும் உணர்ந்து, கிருஷ்ண உணர்வில் (பவானின் பக்தித் தொண்டில்) ஈடுபடும் போது, உயிர்வாழிகளுக்குச் செயல்கள் உண்டு, அச்செயல்கள் திவ்யமானச் செயல்கள் எனப்படும். ஸ்வரூப நிலையில் ஆற்றப்படும் இச்செயல்கள் பக்தித்ததொண்டு என்று அழைக்கப்படுகின்றன. தற்போதைய கட்டுண்ட நிலையில், உடலைச் சார்ந்த கட்டுண்ட செயல்களும் பக்தித் தொண்டும், சில சமயங்களில் ஒன்றையொன்று ஒத்துப் போகும். ஆனால், சில நேரங்களில் இச்செயல்கள் ஒன்றுக்கொன்று எதிராகவும் அமையலாம். தனக்கு நன்மை பயக்கும் சூழ்நிலையை சிதைக்கக்கூடிய எந்த செயலையும் செய்யாமல் இருப்பதில், பக்தன் இயன்றவரை எச்சரிக்கையுடன் உள்ளான். தனது செயல்களின் பக்குவநிலை, கிருஷ்ண பக்தியின் முன்னேற்றத்தை அடிப்படையாக் கொண்டது என்பதை அவன் அறிவான். இருப்பினும், சமூகம் மற்றும் அரசியலின் பார்வையில் மிகவும் மோசமானதாகக் கருதப்படும் சில செயல்களை கிருஷ்ண பக்தன் சில சமயங்களில் செய்யக் கூடும். ஆனால் அத்தகு தற்காலிகமான வீழ்ச்சி அவனை தகுதியற்றவனாக்கி விடுவதில்லை. பரம புருஷருடைய திவ்யமான தொண்டில் மனப்பூர்வமாக ஈடுபட்டுள்ளவன். வீழ்ச்சியடைய நேரிட்டால், அவனது இதயத்திலேயே வீற்றுள்ள இறைவன், அவனைத் தூய்மைப்படுத்தி மோசமான செயலை மன்னிக்கிறார் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. . பகவானின் தொண்டில் முழுமையாக ஈடுபட்டுள்ள யோகியும் சில நேரங்களில் அகப்பட்டுக் கொள்ளுமளவிற்கு, ஜட சக்தி பலமுடையதாகும். ஆனால் கிருஷ்ண உணர்வோ, எப்போதாவது நிகழும் அத்தகு வீழ்ச்சியினை உடனடியாக சீர்திருத்துமளவிற்கு பலமுடையதாகும். எனவே. பக்தித் தொண்டு என்னும் வழிமுறை எப்போதும் வெற்றியைக் கொடுக்கும். சீரான பாதையிலிருந்து எதிர்பாராமல் நிகழும் வீழ்ச்சிக்காக யாரும் ஒருபோதும் பக்தனை ஏளனம் செய்யக் கூடாது. ஏனெனில், அடுத்த பதத்தில் விளக்கப்பட்டுள்ளதுபோல, எப்போதாவது நிகழும் இத்தகு வீழ்ச்சிகள் காலப்போக்கில், அதாவது பக்தன் கிருஷ்ண உணர்வில் முழுமையாக நிலைபெற்றவுடன், நிறுத்தப்பட்டு விடும்.
எனவே கிருஷ்ண உணர்வைப் பயிற்சி செய்து, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரிப்பதில் மனவுறுதியுடன் ஈடுபட்டுள்ளவன், சில சந்தர்பம் அல்லது விபத்தினால் வீழ்ச்சியுற்றவனாகத் தோன்றினாலும், திவ்யநிலையில் உள்ளவனாகவே கருதப்பட வேண்டும். ஸாதுர் ஏவ, “அவன் ஒரு சாது” என்னும் சொற்கள், மிகவும் வலியுறுத்திப் பேசப்பட்டுள்ளன. எதிர்பாராத வீழ்ச்சிக்காக பக்தனை ஏளனம் செய்யக்கூடாது. அவன் வீழ்ச்சியுற்றிருந்தாலும் சாதுவாகவே கருதப்பட வேண்டும்—இது பக்தரல்லாதவர்களுக்கு அளிக்கப்படும் எச்சரிக்கையாகும். மேலும் மந்தவ்ய: எனும் சொல், அதைவிட அதிகமாக வலியுத்தப்பட்டுள்ளது. இவ்விதியை பின்பற்றாமல், பக்தனது எதிர்பாராத வீழ்ச்சிக்காக அவனை நிந்திப்பன், பரம புருஷரின் கட்டளையை மீறுகிறான். பக்தனுடைய ஒரே தகுதி, உறுதியுடனும் பிரத்தியேகமாகவும் பக்தித் தொண்டில் ஈடுபடுவது மட்டுமே.
நரசிம்ம புராணத்தில் பின்வரும் செய்யுள் கொடுக்கப்பட்டுள்ளது:
பகவதி ச ஹராவ் அனன்ய-சேதா
ப்ருஷ-மலினோ (அ)பி விராஜதே மனுஷ்ய:
ந ஹி ஷ ஷ-கலுஷ-ச்சபி: கதாசித்
திமிர-பராபவதாம் உபைதி சந்த்ர:
இதன் அர்த்தம் என்னவெனில், பகவானின் பக்தித் தொண்டில் முழுமையாக ஈடுபட்டுள்ளவன், சில நேரங்களில் மிக மோசமான செயல்களில் ஈடுபடுவது போலத் தோன்றினாலும், அவனது செயல்கள், முயலின் உருவில் சந்திரனில் காணப்படும் களங்கத்தைப் போன்று கருதப்பட வேண்டும். அத்தகு களங்கங்கள் நிலவின் ஒளிக்குத் தடையாக அமைவதில்லை. அதுபோலவே, தனது நற்குணத்தின் பாதையிலிருந்து எதிர்பாராமல் வீழ்ச்சியடையும் பக்தன், மோசமானவனாக் கருதப்படுவதில்லை.
அதே சமயத்தில், திவ்யமான பக்தித் தொண்டில் இருக்கும் பக்தன் எல்லாவிதமான மோசமான வழிகளிலும் செயல்படலாம் என்று தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது; பலம் வாய்ந்த ஜடத் தொடர்பின் சக்தியினால் நிகழும் விபத்தினை மட்டுமே இப்பதம் குறிக்கின்றது. பக்தித் தொண்டு என்பது ஏறக்குறைய மாயைக்கு எதிரான போராகும். மாயையிடம் போரிடுவதற்கு போதிய வலிமை ஒருவனிடம் இல்லாதவரை, எதிர்பாராத வீழ்ச்சிகள் நிகழலாம். ஆனால் அவன் போதிய வலிமையை பெறும்போது, முன்னரே விளக்கப்பட்டதுபோல, அவன் வீழ்ச்சிகளுக்கு உட்படுவதில்லை. இந்த பதத்தை சாதகமாக ஏற்றுக்கொண்டு, அபத்தங்களைச் செய்பவன் தன்னை ஒரு பக்தனாக எண்ணிக் கொள்ளக்கூடாது. ஒருவன் பக்தித் தொண்டின் மூலம் தனது நடத்தையை அபிவிருத்தி செய்யவில்லையெனில், அவன் ஓர் உயர்ந்த பக்தனல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.