ப்ரஹ்மண்-யாதாய கர்மாணி
ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:
லிப்யதே ந ஸ பாபேன
பத்ம-பத்ரம் இவாம்பஸா
Synonyms:
ப்ரஹ்மணி — பரம புருஷ பகவானுக்கு; ஆதாய — சார்ந்து; கர்மாணி — எல்லாச் செயல்களும்; ஸங்கம் — பற்றுதல்; த்யக்த்வா — துறந்து; கரோதி — செய்கிறான்; ய: — எவன்; லிப்யதே — பாதிக்கப்படுதல்; ந — என்றுமில்லை; ஸ — அவன்; பாபேன — பாவத்தால்; பத்ம-பத்ரம் — தாமரை இலை; இவ — போல; அம்பஸா — நீரினால்.
Translation:
பற்றின்றி தனது கடமைகளைச் செய்து, பலன்களை பரம புருஷ பகவானுக்கு அர்ப்பணிப்பவன், தாமரை இலை எவ்வாறு நீரால் தீண்டப்படுவதில்லையோ, அதுபோல அவன் பாவ விளைவுகளால் தீண்டப்படுவதில்லை.
Purport:
இங்கே ப்ரஹ்மணி என்றால் கிருஷ்ண உணர்வில் என்று பொருள். முக்குணங்களின் மொத்தக் கலவை ப்ரதான என்று அழைக்கப்படுகிறது. அதன் வெளிப்பாடே இந்த ஜடவுலகம். ஸர்வம் ஹ்யேகத் ப்ரஹ்ம (மாண்டூக்ய உபநிஷத் 2), தஸ்மாத் ஏதத் ப்ரஹ்ம நாம ரூபம் அன்னம் ச ஜாயதே (முண்டக உபநிஷத் 1.1.9). எனும் வேத வாக்கியங்களும், மம யோனிர் மஹத் ப்ரஹ்ம எனும் பகவத் கீதையின் (14.3) வாக்கியமும் இவ்வுலகில் இருப்பவை அனைத்தும் பிரம்மனின் புறத் தோற்றங்களே என்று குறிப்பிடுகின்றன. மேலும், விளைவுகள் வெவ்வேறு விதத்தில் தோன்றியுள்ள போதிலும், அவை காரணத்திலிருந்து வேறுபடாதவை. அனைத்தும் பரபிரம்மனான கிருஷ்ணருடன் தொடர்புடையதே என்றும், அதனால் அனைத்தும் அவருக்கு மட்டுமே சொந்தமானவை என்றும் ஈஷோப் நிஷத்தில் கூறப்பட்டுள்ளது. எல்லாம் கிருஷ்ணருக்குச் சொந்தமானவை என்றும், அவரே எல்லாவற்றிற்கும் உரிமையாளர் என்றும், அதன் காரணத்தால் அனைத்தும் அவருடைய தொண்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றும், எவனொருவன் பக்குவமாக அறிகின்றானோ, அவன் இயற்கையாகவே தனது செயல்களின் (புண்ணியமானாலும் சரி, பாவமானாலும் சரி) விளைவுகளில் பாதிக்கப்படாதவன் ஆகின்றான். ஒரு குறிப்பிட்ட வகையான செயலைச் செய்வதற்காக இறைவனால் அளிக்கப்பட்ட பரிசான இந்த ஜடவுடலையும் நாம் கிருஷ்ண உணர்வில் ஈடுபடுத்த முடியும். நீரிலேயே இருந்தாலும் தாமரை இலை நனையாமல் இருப்பதைப் போல, கிருஷ்ண உணர்வில் ஈடுபடுத்தப்படும் உடலும் பாவ விளைவுகளின் களங்கத்திற்கு அப்பாற்பட்டதாகும். பகவானும் கீதையில் (3.30) கூறுகிறார். மயி ஸர்வாணி கர்மாணி ஸன்ன்யஸ்ய— “எல்லாச் செயல்களையும் என்னிடம் (கிருஷ்ணரிடம்) ஒப்படை” எனவே, முடிவு என்னவெனில், கிருஷ்ண உணர்வற்றவன் ஜடவுடல் மற்றும் புலன்களின் அடிப்படையில் செயலாற்றுகிறான். ஆனால் கிருஷ்ண உணர்வினனோ, உடல் கிருஷ்ணருடைய சொத்து என்பதால், இது கிருஷ்ணருடைய சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற ஞானத்துடன் செயல்படுகிறான்.