ஸ்ரீ-பகவான் உவாச
காம ஏஷ க்ரோத ஏஷ
ரஜோ-குண-ஸமுத்பவ:
மஹாஷனோ மஹா-பாப்மா
வித்த்-யேனம் இஹ வைரிணம்
Synonyms:
ஸ்ரீ-பகவான் உவாச — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; காம — காமம்; ஏஷ: — இந்த; க்ரோத: — கோபம்; ஏஷ: — இந்த; ரஜ: குண — ரஜோ குணம்; ஸமுத்பவ: — பிறக்கும்; மஹா-அஷன: — எல்லாவற்றையும் அழிக்கும்; மஹா-பாப்மா — மகா பாவம்; வித்தி — அறிவாய்; ஏனம் — இது; இஹ — பௌதிக உலகில்; வைரிணம் — மிகப்பெரிய விரோதி.
Translation:
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: அர்ஜுனா, காமமே இதற்குக் காரணம். ரஜோ குணத்தில் உற்பத்தியாகி, பின்னர் கோபமாக உருவெடுக்கும் இஃது இவ்வுலகின் எல்லாவற்றையும் அழிக்கும் பாவகரமான விரோதியாகும்.
Purport:
ஜடப் படைப்புடன் உயிர்வாழி தொடர்பு கொள்ளும் போது, ரஜோ குணத்தின் சம்பந்தத்தால், கிருஷ்ணரின் மீதான அவனது நித்திய அன்பு, காமமாகத் திரிபடைகிறது. வேறு விதமாகக் கூறினால், புளியுடன் சேர்ந்த பால் தயிராகத் திரிவது போல, இறைவனின் மீதான அன்பு காமமாகத் திரிந்து விடுகிறது. காமம் திருப்தியடையாத போது கோபமாக மாறுகிறது. கோபம் அறியாமையாக மாறுகிறது. அறியாமையினால் பௌதிக வாழ்க்கை தொடர்கிறது. எனவே, ஜீவனின் மாபெரும் எதிரி காமமேயாகும், மேலும், காமமே தூய்மையான ஆத்மாவை ஜடவுலகில் சிக்குண்டு உழல வைக்கின்றது. தமோ குணத்தின் வெளித் தோற்றமே கோபம்; இத்தகைய குணங்கள் கோபத்தைப் போன்ற இதர செயல்களின் மூலம் வெளிப்படுகின்றன. ஒழுக்கமான வாழ்க்கை மற்றும் செயல்களின் மூலம், ரஜோ குணமானது தமோ குணத்திற்கு இழிந்து விடாமல், ஸத்வ குணத்திற்கு உயர்த்தபட வேண்டும். அவ்வாறு செய்தால், ஆன்மீகப் பற்றுதலின் காரணமாக, கோபமெனும் இழிநிலையை அடைவதிலிருந்து ஒருவனைக் காப்பாற்ற முடியும்.
என்றும் அதிகரித்துக் கொண்டிருக்கும் தனது ஆன்மீக ஆனந்தத்திற்காக, பரம புருஷ பகவான் தன்னைப் பல்வேறு ரூபங்களில் வியாபித்துள்ளார். ஜீவன்கள் அந்த ஆன்மீக ஆனந்தத்தின் அம்சங்கள். அவர்களுக்கும் சற்று சுதந்திரம் உண்டு. ஆனால் தங்களது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால், அவர்களது சேவை செய்யும் மனப்பான்மை, புலனின்பத்திற்கான எண்ணமாக மாற்றமடைந்து, காமத்தின் வசப்படுகின்றனர். கட்டுண்ட ஆத்மாக்கள் தங்களது இத்தகு காம எண்ணங்களைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும், அத்தகு காம வயப்பட்ட செயல்களை நீண்ட காலமாகச் செய்து முழுமுமையாகக் குழம்பியிருக்கும் போது தங்களது உண்மை நிலையைப் பற்றி கேள்வி கேட்டு அறிந்து கொள்வதற்கும், வசதி செய்வதற்காக இந்த ஜடவுலகம் கடவுளால் படைக்கப்பட்டுள்ளது.
அத்தகு கேள்வியே வேதாந்த சூத்திரத்தின் ஆரம்பமாகும், அதாதோ ப்ரஹம ஜிக்ஞாஸா—பிரம்மனைப் பற்றி கேள்வி கேட்க வேண்டும். அந்த பிரம்மன், ஸ்ரீமத் பாகவத்தில், ஜன்மாத்-யஸ்ய யதோ (அ)ன்வயாத் இதரதஷ் ச—”பரபிரம்மனே அனைத்திற்கும் மூலம்” என்று வர்ணிக்கப்படுகின்றது. அதாவது, காமத்தின் மூலமும் பரபிரம்மனிடமே உள்ளது. எனவே, காமத்தை பரபிரம்மனிடம் செலுத்தும் அன்பாக மாற்றிவிட்டால், அல்லது கிருஷ்ண உணர்வாக மாற்றி விட்டால்—வேறு விதமாகக் கூறினால், எல்லாவற்றையும் கிருஷ்ணருக்காகவே விரும்பினால்—அப்போது காமத்தையும் கோபத்தையும் ஆன்மீகப்படுத்திவிட முடியும், இராமபிரானின் சிறந்த சேவகரான ஹனுமான், இராவணனின் தங்க நகரத்தை எரித்ததன் மூலம் தனது கோபத்தை வெளிக்காட்டினார். ஆனால் அவ்வாறு செய்ததால் அவர் பகவானின் மாபெரும் பக்தரானார். இங்கு பகவத் கீதையிலும், “என்னைத் திருப்திப்படுத்துவதற்காக உனது எதிரிகளின் மீது உனது கோபத்தை உபயோகப்படுத்து” என்று அர்ஜுனனிடம் பகவான் வலியுறுத்துகிறார். எனவே, காமமும் கோபமும் கிருஷ்ண உணர்வில் ஈடுபடும் போது, நமது எதிரிகளாக அல்லாமல் நண்பர்களாக மாறி விடுகின்றன.