நாஸ்தி புத்திர் அயுக்தஸ்ய
ந சாயுக்தஸ்ய பாவனா
ந சாபாவயத: ஷாந்திர்
அஷாந்தஸ்ய குத: ஸுக ம்
Synonyms:
ந அஸ்தி — இருக்க முடியாது; புத்தி: — உன்னத அறிவு; அயுக்தஸ்ய — (கிருஷ்ண உணர்வுடன்) தொடர்பில் இல்லாதவன்; ந — இல்லை; ச — மேலும்; அயுக்தஸ்ய—கிருஷ்ண உணர்வில்லாதவன், பாவனா—நிலைத்த மனம் (ஆனந்தத்தில்); ந — இல்லை; ச — மேலும்; அபாவயத: — நிலைபெறாதவன்; ஷாந்தி: — அமைதி; அஷாந்தஸ்ய — அமைதியில்லாவிடில்; குத: — எங்கே; ஸுகம் — ஆனந்தம்.
Translation:
பரமனுடன் (கிருஷ்ண உணர்வின் மூலமாக) தொடர்பு கொள்ளாமல், திவ்யமான அறிவையோ கட்டுப்பாடான மனதையோ அடைய முடியாது. இவையின்றி அமைதிக்கு வழியில்லை. அமைதி இல்லாவிடில் ஆனந்தம் எவ்வாறு உண்டாகும்?
Purport:
ஒருவன் கிருஷ்ண உணர்வில் இல்லாவிடில், அவன் அமைதியடைய முடியாது. கிருஷ்ணரே எல்லா யாகங்களிலும் தவங்களாலும் வரும் நற்பயனை அனுபவிப்பவர், அவரே எல்லா அகிலங்களுக்கும் உரிமையாளர், அவரே எல்லா ஜீவாத்மாக்களின் உண்மை நண்பர் என்பதைப் புரிந்து கொண்டால் மட்டுமே, ஒருவனால் உண்மையான அமைதியை அடைய முடியும் என்பது ஐந்தாம் அத்தியாயத்தில் (5.29) உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, ஒருவன் கிருஷ்ண உணர்வில் இல்லாவிடில், அவனது மனதில் இறுதியான குறிக்கோள் எதுவும் இருக்க முடியாது. இறுதி நோக்கத்தை அறியாததால்தான் குழப்பம் ஏற்படுகின்றது. கிருஷ்ணரே அனுபவிப்பாளர், உரிமையாளர், அனைவருக்கும் அனைத்திற்கும் நண்பர் என்பதை உறுதியாக அறிந்தவனின் மனம் நிலைபெற்று அமைதியைக் கொடுக்கிறது. எனவே, ஒருவன் அமைதியையும் ஆன்மீக முன்னேற்றமும் அடைந்திருப்பதாக காட்டிக் கொண்டாலும், கிருஷ்ணருடன் உறவு இல்லையெனில், அவன் அமைதியின்றி எப்போதும் துயரத்திலேயே இருப்பான் என்பது நிச்சயமே. கிருஷ்ணருடன் உறவு கொள்வதால் மட்டுமே அடையக்கூடிய அமைதியான நிலையே கிருஷ்ண பக்தியின் தோற்றமாகும்.