த்யாயதோ விஷயான் பும்ஸ:
ஸங்கஸ் தேஷூபஜாயதே
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம:
காமாத் க்ரோதோ (அ)பிஜாயதே
Synonyms:
த்யாயத: — சிந்திக்கும் போது; விஷயான் — புலன்நோக்கு பொருள்கள்; பும்ஸ:—மனிதனின், ஸங்க:—பற்றுதல், தேஷு—புலன்நோக்குப் பொருட்களில்; உபஜாயதே—வளர்கின்றது, ஸங்காத்—பற்றுதலில் இருந்து; ஸஞ்ஜாயதே — வளர்கின்றது; காம — காமம்; காமாத் — காமத்திலிருந்து; க்ரோத: — கோபம்; அபிஜாயதே — தோன்றுகின்றது.
Translation:
புலன்நோக்குப் பொருள்களை சிந்திப்பதால், மனிதன் அதன் மேல் பற்றுதலை வளர்த்துக் கொள்கிறான். அந்தப் பற்றுதலில் இருந்து காமமும் காமத்திலிருந்து கோபமும் தோன்றுகின்றன.
Purport:
கிருஷ்ண உணர்வில் இல்லாதவன், புலன் நோக்குப் பொருள்களைப் பற்றி சிந்திக்கும் போது, பௌதிக ஆசைகளுக்கு உட்படுத்தப்படுகின்றான். புலன்களுக்கு ஈடுபாடு அவசியம்; எனவே, பகவானின் திவ்யமான அன்புத் தொண்டில் ஈடுபடுத்தப்படாவிடில், புலன்கள் ஜடத் தொண்டில் ஈடுபாட்டைத் தேடுவது நிச்சயம். இந்த பௌதிக உலகில் சிவபெருமானும் பிரம்மதேவரும் கூட—மேலுலகின் பிற தேவர்களைப் பற்றி கூற வேண்டியதில்லை—புலன் நோக்குப் பொருள்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படக்கூடியவர்களே. இந்த ஜடச் சிக்கலிருந்து விடுபெற ஒரே வழி கிருஷ்ண உணர்வைப் பெறுவதாகும். சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது, பார்வதி புலனின்பதற்காக அவரை சஞ்சலப்படுத்தினார். அவரும் இணங்க, அதன் விளைவாக கார்த்திகேயன் பிறந்தார். ஆனால், பகவானின் இளம் பக்தரான ஹரிதாஸ் தாகூர், மாயா தேவியின் அவதாரத்தால் இதே போன்று தூண்டப்பட்டபோது, பகவான் கிருஷ்ணரிடமிருந்த கலப்படமற்ற பக்தியால் அச்சோதனையில் எளிமையாக வெற்றி பெற்றார். முன் கூறப்பட்ட யமுனாசாரியரின் பதத்தின்படி, இறைவனின் உண்மையான பக்தன், அவருடனான உறவில் ஆன்மீக ஆனந்தத்தின் உயர் ருசியை அனுபவிக்கிறான்; எனவே, பௌதிகப் புலனின்பத்தை முற்றிலுமாகத் துறந்துவிடுகிறான். இதுவே வெற்றியின் இரகசியமாகும். கிருஷ்ண உணர்வில் இல்லாதவன், செயற்கையாகத் தனது புலன்களை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும், இறுதியில் நிச்சயமாகத் தோல்வியடைவான்; ஏனெனில், புலனின்பத்தின் மிகச்சிறிய எண்ணமும் இச்சகளைத் திருப்தி செய்யும்படி அவனைத் தூண்டிவிட்டு விடும்.