Saturday, July 13

பகவத் கீதை – 2.7

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

கார்பண்ய–தோஷோபஹத-ஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்ம-ஸம்மூட–சேதா:
யச் ச்ரேய: ஸ்யான் நிஷ்சிதம் ப்ரூஹி தன்மே
ஷிஷ்யஸ் தே (அ)ஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம்

Synonyms:
கார்பண்ய — கருமித்தனம்; தோஷ — பலவீனம்; உபஹத — தாக்கப்பட்டு; ஸ்வபாவ — குணங்கள்; ப்ருச்சாமி — நான் வினவுகிறேன்; த்வாம் — உம்மிடம்; தர்ம — தர்மம்; ஸம்மூட — குழம்பி; சேத: — இதயத்தில்; யத் — எதை; ஷ்ரேய: — சாலச் சிறந்தது; ஸ்யாத் — ஆகும்; நிஷ்சிதம் — நிச்சயமாக; ப்ரூஹி — கூறுவீராக; தத் — அதை; மே— எனக்கு; ஷிஷ்ய: — சீடன்; தே — உமது; அஹம் — நான்; ஷாதி — அறிவுறுத்துங்கள்; மாம் — எனக்கு; த்வாம்— உம்மிடம்; ப்ரபன்னம் — சரணடைந்தேன்.

Translation:
இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்ந்து எனக்கு அறிவுரை கூறுவீராக.

Purport:
இயற்கையின் ஏற்பாட்டின்படி, பௌதிகச் செயல்களைச் செய்யும்போது அனைவரும் குழப்பத்தையே சந்திக்கின்றனர். ஒவ்வொரு அடியிலும் குழப்பங்கள் உள்ளன. எனவே, அங்கீகாரம் பெற்ற ஆன்மீக குருவை அணுக வேண்டுமென்று வலியுறுத்தப்படுகிறது. வாழ்வின் பலனை நிறைவேற்றுவதற்கு அவர் வழிகாட்டுவார். நமது விருப்பம் இல்லாமலேயே வாழ்வில் குழப்பங்கள் வருகின்றன, அவற்றிலிருந்து விடுபட அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவை அணுகுமாறு எல்லா வேத இலக்கியங்களும் நம்மை அறிவுறுத்துகின்றன. இத்தகு குழப்பங்கள் காட்டுத் தீயைப் போன்று, யாராலும் பற்ற வைக்கப்படாதபோதிலும் கொழுந்துவிட்டு எரிகின்றன. குழப்பங்களை நாம் விரும்பாதபோதிலும், வாழ்வின் குழப்பங்கள் தானாகத் தோன்றுகின்றன—இதுவே உலக இயல்பு. எவரும் தீயை விரும்பவில்லை, இருந்தும் நெருப்பு தோன்றுகிறது, அதனால் குழப்பமும் உண்டாகிறது. அதுபோலவே, வாழ்வின் குழப்பங்கள் நாம் விரும்பாமலேயே தானாகத் தோன்றுகின்றன. எனவேதான், வாழ்வின் குழப்பங்களைத் தீர்ப்பதற்கும் தீர்வின் விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்வதற்கும், சீடப் பரம்பரையில் வரும் ஆன்மீக குருவை அணுக வேண்டுமென வேதங்கள் நமக்கு அறிவுரை கூறுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவையுடையவர், அனைத்தையும் அறிந்தவராகவே இருப்பார். எனவே, உலகக் குழப்பங்களிலேயே தொடர்ந்து இருக்காமல், ஆன்மீக குருவை அணுக வேண்டும். இதுவே இப்பதத்தின் பொருளாகும்.

பௌதிகக் குழப்பங்களுடன் வாழும் மனிதன் யார்? வாழ்வின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளாதவனே அவ்வாறு இருப்பான். ப்ருஹத்-ஆரண்யக உபநிஷத்தில் (3.8.10) குழம்பிய மனிதன் (க்ருபண) பின்வருமாறு விளக்கப்படுகிறான்: யோ வா ஏதத்-அக்ஷரம் கார்க் யவிதித் வாஸ்மால் லோகாத் ப்ரைதி ஸ க்ருபண:” மனிதனாகப் பிறந்தபோதிலும், வாழ்வின் பிரச்சனைகளைத் தீர்க்காமல், தன்னை உணரும் விஞ்ஞானத்தைக் கற்காமல், நாய்களையும் பூனைகளையும் போல் உலகை விட்டுச் செல்லும் மனிதன் கருமியாவான்.” வாழ்வின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக இம்மனிதப் பிறவியை பயன்படுத்திக் கொள்பவனுக்கு, இது மாபெரும் வரமாகும்; எனவே, இவ்வாய்ப்பினை ஒழுங்காகப் பயன்படுத்தாதவன் கருமி என்று அறியப்படுகிறான். மறுபுறத்தில், வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காக இவ்வுடலை உபயோகப்படுத்திக்கொள்ளும் புத்திசாலி, பிராமணன் எனப்படுகிறான். ய ஏதத்-அக்ஷரம் கார்கி விதித் வாஸ்மால் லோகாத் ப்ரைதி ஸ ப்ராஹ்மணா:

குடும்பம், சமூகம், தேசம் போன்றவற்றின் மீது (பௌதிக வாழ்வின் அடிப்படையில்) அளவற்ற பற்று கொண்டிருப்பதால், க்ருபணர் என்னும் கருமிகள் தங்கள் நேரத்தை வீணடிக்கின்றனர். பெரும்பாலான மக்கள், “தோல் வியாதியின்” அடிப்படையில் குடும்ப வாழ்வில் (மனைவி, குழந்தைகள், உறவினர்கள் என) பற்றுதல் கொண்டுள்ளனர். கருமி, குடும்ப உறுப்பினர்களை மரணத்திலிருந்து தன்னால் காப்பாற்றி விட முடியும் என்று எண்ணுகிறான், அல்லது குடும்பமோ, சமுதாயமோ, மரணப் பிடியிலிருந்து தன்னைக் காப்பாற்றும் என்று எண்ணுகிறான். இந்தக் குடும்பப் பற்றுதல் கீழ்நிலை மிருகங்களிலும் காணப்படுகிறது—அவையும் தமது குட்டிகளைப் பாதுகாக்கின்றன. குடும்ப உறுப்பினர்களின் மீதான தனது பற்றுதலும், அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற விருப்பமுமே, தனது குழப்பங்களின் காரணம் என்பதை அறிவாளியான அர்ஜுனனால் புரிந்துகொள்ள முடிந்தது. போரிடுவதற்கான தனது கடமை காத்துக் கொண்டிருந்ததை அறிந்தபோதிலும், கருமித்தனமான பலவீனத்தால் அவனால் கடமைகளைச் செயலாற்ற முடியவில்லை. எனவே, பரம ஆன்மீக குருவான பகவான் கிருஷ்ணரிடம், ஒரு தீர்வைக் கொடுக்குமாறு கேட்கிறான் அர்ஜுனன். அவன் கிருஷ்ணரிடம், தன்னை ஒரு சீடனாக அர்ப்பணிக்கிறான், நட்புப் பேச்சுக்களை நிறுத்த விரும்புகிறான். ஆசிரியருக்கும் சீடனுக்கும் இடையிலான பேச்சு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததால், அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவிடம் தற்போது மிகக் கவனமாகப் பேச விரும்புகிறான் அர்ஜுனன். பகவத் கீதையின் விஞ்ஞானத்திற்கு மூல ஆன்மீக குரு கிருஷ்ணரே. கீதையைப் புரிந்துகொள்வதற்கான முதல் மாணவன் அர்ஜுனன். பகவத் கீதையை அர்ஜுனன் எப்படி புரிந்து கொள்கிறான் என்பது கீதையிலே கூறப்பட்டுள்ளது. இருந்தும் மூடர்களான பௌதிகப் பண்டிதர்கள், “கிருஷ்ணரிடம் சரணடையத் தேவையில்லை, கிருஷ்ணருக்குள் இருக்கும் பிறப்பற்ற ஒன்றிடம் சரணடைய வேண்டும்” என்றெல்லாம் பிதற்றுகின்றனர். கிருஷ்ணரின் அகத்திற்கும் புறத்திற்கும் பேதமில்லை. இதனை அறியாமல், பகவத் கீதையைப் புரிந்துகொள்ள முயல்பவன் மாபெரும் முட்டாள்.

+5

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question