Wednesday, October 16

ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் – 9

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

மிக ரகசியமான அறிவு

Bg 9.1 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எனதன்பு அர்ஜுனா, நீ என்றுமே என்னிடம் பொறாமை கொள்ளாதவன் என்பதால், எதனை அறிவதால் ஜடவுலகின் துன்பங்களிலிருந்து விடுதலை அடைவாயோ, அந்த மிக இரகசியமான ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் உனக்கு நான் அளிக்கிறேன்.

Bg 9.2 — இந்த அறிவு, கல்வியின் அரசனும், எல்லா இரகசியங்களிலும் மிக இரகசியமானதும், மிகத் தூய்மையானதுமாகும். தன்னுணர்வின் அனுபவத்தை நேரடியாக அளிப்பதால் இதுவே தர்மத்தின் பக்குவ நிலையாகும். இஃது அழிவற்றதும், பேரின்பத்துடன் செயலாற்றுப்படுவதும் ஆகும்.

Bg 9.3 — எதிரிகளை வெல்வோனே, இந்த பக்தித் தொண்டில் நம்பிக்கையற்றவர்கள் என்னை அடைய முடியாது. எனவே, அவர்கள் இந்த பௌதிக உலகின் பிறப்பு இறப்பு பாதைக்கே திரும்பி வருகின்றனர்.

Bg 9.4 — நான் எனது தோன்றாத உருவின் மூலம் இந்த அகிலம் முழுவதும் பரவியுள்ளேன். எல்லா ஜீவன்களும் என்னில் இருக்கின்றன்; ஆனால் அவர்களில் நான் இல்லை.

Bg 9.5 — இருப்பினும், படைக்கப்பட்டவை எல்லாம் என்னில் நிலை பெற்றிருக்கவில்லை. எனது யோகத்தின் ஐஸ்வர்யத்தைப் பார்! நானே எல்லா உயிரினங்களையும் காப்பவன் என்றபோதிலும், எங்கும் நிறைந்துள்ளவன் என்றபோதிலும், நான் இந்த பிரபஞ்சத் தோற்றத்தின் ஒரு பகுதி அல்ல, ஏனெனில் நானே படைப்பின் மூல காரணம்.

Bg 9.6 — எங்கும் வீசிக் கொண்டுள்ள பலத்த காற்று, எவ்வாறு எப்போதும் ஆகாயத்தினுள் உள்ளதோ, அதுபோலவே படைக்கப்பட்டவை அனைத்தும் என்னில் அமைந்துள்ளதை அறிவாயாக.

Bg 9.7 — குந்தியின் மகனே, கல்பத்தின் முடிவில் ஜடத் தோற்றம் முழுவமும் எனது இயற்கையின் நுழைகின்றன. அடுத்த கல்பத்தின் ஆரம்பத்தில் எனது சக்தியின் மூலம் நானே அவற்றை மீண்டும் படைக்கின்றேன்.

Bg 9.8 — பிரபஞ்ச தோற்றம் முழுவதும் எனக்குக் கீழ்ப்பட்டது. எனது விருப்பப்படி அது மீண்டும் மீண்டும் தானாகப் படைக்கப்பட்டு, இறுதியில் எனது விருப்பப்படி அழிக்கப்படுகின்றது.

Bg 9.9 — தனஞ்ஜயனே, இச்செயல்கள் எதுவும் என்னை பந்தப்படுத்த முடியாது. நடுநிலையில் அமைந்துள்ள நான், இந்த பௌதிகச் செயல்களிலிருந்து எப்போதும் விலகியே உள்ளேன்.

Bg 9.10 — குந்தியின் மகனே, எனது சக்திகளில் ஒன்றான இந்த ஜட இயற்கை, எனது மேற்பார்வையில் செயல்பட்டு, அசைகின்ற மற்றும் அசையாதவற்றை எல்லாம் உண்டாக்குகின்றது. அதன் ஆணைப்படி, இந்தத் தோற்றம் மீண்டும் மீண்டும் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது.

Bg 9.11 — மனித உருவில் நான் தோன்றும்போது முட்டாள்கள் என்னை ஏளனம் செய்கின்றனர். எனது பரம இயற்கையை, அதாவது, இருப்பவை அனைத்திற்கும் நானே உன்னத உரிமையாளன் என்பதை அவர்கள் அறியார்கள்.

Bg 9.12 — இவ்வாறு குழம்பியவர்கள், ராட்சசத்தனமாக கருத்துக்களாலும் நாத்திகக் கருத்துக்களாலும் கவரப்படுகின்றனர். அத்தகு மயங்கிய நிலையில், அவர்களது முக்திக்கான ஆவல்கள், பலன் நோக்குச் செயல்கள், அறிவுப் பயிற்சிகள் ஆகிய அனைத்தும் தோல்வியடைகின்றன.

Bg 9.13 — பிருதாவின் மகனே, குழப்பமடையாத மகாத்மாக்களோ தெய்வீக இயற்கையின் பாதுகாப்பில் உள்ளனர். அவர்கள், பரம புருஷ பகவானான என்னை, ஆதிபுருஷனாகவும் அழிவற்றவனாகவும் அறிந்து, எனது பக்தித் தொண்டில் பூரணமாக ஈடுபட்டுள்ளனர்.

Bg 9.14 — எப்போதும் எனது புகழை கீர்த்தனம் செய்து கொண்டு, திடமான உறுதியுடன் முயன்று கொண்டு, எனக்கு வந்தனை செய்தபடி, இந்த மகாத்மாக்கள் பக்தியுடன் நித்தியமாக என்னை வழிபடுகின்றனர்.

Bg 9.15 — ஞான யாகத்தல் ஈடுபட்டிருக்கும் பிறர், பரம புருஷரை, தன்னிகரற்றவராகவும், பலரில் வேறுபட்டவராகவும், விஸ்வ ரூபத்திலும் வழிபடுகின்றனர்.

Bg 9.16 — ஆனால், சடங்கும் நானே, யாகமும், நானே, முன்னோருக்குப் படைக்கப்படும் பொருளும் நானே, நோய் தீர்க்கும் மூலிகையும் நானே, தெய்வீகமான மந்திரமும் நானே. நானே நெய், நானே அக்னி, நானே படைக்கப்படும் பொருள்.

Bg 9.17 — இந்த அகிலத்தின் தந்தையும் தாயும் காப்பவனும் பாட்டனாரும் நானே. அறியப்பட வேண்டிய பொருளும், தூய்மைப்படுத்தும் பொருளும், ‘ஓம்’ என்னும் மந்திரமும் நானே. ரிக், ஸாம, யஜுர் வேதங்களும் நானே.

Bg 9.18 — நானே இலக்கு, காப்பவன், தலைவன், சாட்சி, வசிப்பிடம், அடைக்கலம், மற்றும் மிக நெருங்கிய நண்பன். நானே படைப்பு, அழிவு, எல்லாவற்றின் ஆதாரம், தங்குமிடம், மற்றும் நித்தியமான விதையும் ஆவேன்.

Bg 9.19 — அர்ஜுனா, நானே வெப்பத்தைக் கொடுப்பவன். மழையைத் தடுப்பவனும் கொடுப்பவனும் நானே. நித்தியமும் நானே, மரண உருவமும் நானே. ஜடம், சேதனம் இரண்டும் என்னில் உள்ளன.

Bg 9.20 — ஸ்வர்க லோகத்தை அடைவதற்காக, வேதங்களைப் பயின்று ஸோம ரஸத்தை அருந்துபவர்கள், என்னை மறைமுகமாக வழிபடுகின்றனர். இதன் மூலமாக அவர்கள் பாவ விளைவுகளிலிருந்து தூய்மையடைந்து, புண்ணியமான இந்திர லோகத்தில் பிறவியெடுத்து, அங்கே தேவ சுகங்களை அனுபவிக்கின்றனர்.

Bg 9.21 — ஸவர்க லோகத்தில் அத்தகு பரந்த சுகத்தை அனுபவித்துவிட்டு, தங்களது புண்ணியங்களின் பலன்களை தீர்ந்தவுடன், அவர்கள் மீண்டும் இந்த மரண உலகில் வீழ்கின்றனர். இவ்வாறாக, புலனின்பத்திற்காக வேத தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்கள், பிறப்பு இறப்பினையே அடைகின்றர்.

Bg 9.22 — ஆனால் எனது திவ்ய ரூபத்தின் மீது தியானம் செய்துகொண்டு, களங்கமற்ற (அனன்ய) பக்தியுடன் என்னை நித்தியமாக வழிபடுபவர்களுக்கோ, அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும், அவர்களிடம் இருப்பவற்றை காத்தும் நான் பாலிக்கின்றேன்.

Bg 9.23 — மற்ற தேவர்களை நம்பிக்கையோடு வணங்கும் பக்தர்கள், உண்மையில் என்னை மட்டுமே வழிபடுகின்றனர். குந்தியின் மகனே, ஆனால் அத்தகு வழிபாடு தவறான வழியில் செய்யப்படுவதாகும்.

Bg 9.24 — எல்லா யாகங்களின் தலைவனும் அனுபவிப்பாளனும் நானே. எனவே, எனது உண்மையான தெய்வீக இயற்கையை அங்கீகரிக்காதவர்கள் வீழ்ச்சியடைகிறார்கள்.

Bg 9.25 — தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களிடையே பிறப்பவர்; முன்னோர்களை வழிபடுபவர்கள் முன்னோர்களிடம் செல்வர்; பூதங்களை வழிபடுபவர்கள் பூதங்களிடையே பிறப்பர்; மேலும், என்னை வழிபடுபவர்கள் என்னுடனே வாழ்வர்.

Bg 9.26 — அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு ஓர் இலையோ, ஓரு பூவோ, ஒரு பழமோ, நீரோ அளித்தால் அதனை நான் ஏற்கின்றேன்.

Bg 9.27 — குந்தியின் மகனே, எதையெல்லாம் நீ செய்கின்றாயோ, எதையெல்லாம் நீ உண்கின்றாயோ, எதையெல்லாம் நீ படைக்கின்றாயோ, எதையெல்லாம் நீ கொடுக்கின்றாயோ, எந்த தவங்களையெல்லாம் நீ செய்கின்றாயோ, அதனை எனக்கு அர்ப்பணமாக செய்வாயாக.

Bg 9.28 — இவ்விதமாக, நீ கர்ம பந்தங்களிலிருந்தும், அதன் நல்ல தீய விளைவுகளிலிருந்தும் விடுபடுவாய். சந்நியாசத்தின் இந்த கொள்கையின் மூலம் உனது மனதை என்னில் பதியச் செய்வதால், நீ முக்தி பெற்று என்னிடமே வருவாய்.

Bg 9.29 — நான் யாரிடமும் பொறாமை கொள்வதோ, பாரபட்சம் காட்டுவதோ இல்லை. நான் அனைவருக்கும் சமமானவன். ஆயினும் பக்தியுடன் எனக்கு அன்புத் தொண்டு புரிபவன் யாராயினும், அவன் எனது நண்பன். அவன் என்னில் இருக்கிறான். நானும் அவனுக்கு நண்பனாகிறேன்.

Bg 9.30 — ஒருவன் மிகவும் மோசமான செயலைச் செய்தாலும், அவன் பக்தித் தொண்டில் பிறழாது ஈடுபட்டிருந்தால், அவனை சாதுவாகவே கருத வேண்டும்; ஏனெனில், அவன் தனது தீர்மானத்தில் திடமாக உள்ளான்.

Bg 9.31 — அவன் வெகு விரைவில் தர்மாத்மாவாகி, நித்தியமான அமைதியை அடைகின்றான். குந்தியின் மகனே, எனது பக்தன் என்றும் அழிவதில்லை என்பதை தைரியமாக அறிவிப்பாயாக.

Bg 9.32 — பிருதாவின் மகனே, பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என கீழ் குலத்தைச் சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும், என்னிடம் சரணடைபவர்கள் பரமகதியை அடைய முடியும்.

Bg 9.33 — இவ்வாறிருக்க, புண்ணியமான பிராமணர்கள், பக்தர்கள், மற்றும் புனிதமான அரசர்களைப் பற்றிச் சொல்வதற்கு என்ன உள்ளது? எனவே, துன்பம் வாய்ந்த இந்த தற்காலிக உலகை அடைந்த நீ, எனது அன்புத் தொண்டில் ஈடுபடுவாயாக.

Bg 9.34 — உனது மனதை எப்பொழுதும் என்னைப் பற்றிச் சிந்திப்பதில் ஈடுபடுத்தி, எனது பக்தனாகி, எனக்கு வந்தனை செய்து, என்னை வழிபடுவாயாக இவ்வாறாக என்னில் முழுமையாக லயித்து, நிச்சயமாக நீ என்னிடமே வருவாய்.

 

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question