Thursday, September 19

ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் – 5

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

கர்ம யோகம் – கிருஷ்ண உணர்வில் செயல்

Bg 5.1 — அர்ஜுனன் கூறினான், கிருஷ்ணரே, முதலில் செயலைத் துறக்கவும் பின்னர் பக்தியுடன் செயலாற்றவும் பரிந்துரைத்துள்ளீர். இவையிரண்டில் சிறந்த நன்மையைத் தருவது எது என்பதை தயவு செய்து தெளிவாக விளக்குவீராக.

Bg 5.2 — புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் பதிலுரைத்தார். செயலைத் துறத்தல், பக்தியுடன் செயல்படுதல் இரண்டுமே முக்திக்கு ஏற்றதாகும். ஆனால் இவையிரண்டில், செயலைத் துறப்பதைவிட பக்தித் தொண்டில் செயல்படுவது சிறந்ததாகும்.

Bg 5.3 — எவனொருவன் தனது செயல்களின் விளைவுகளில் விருப்பு வெறுப்பு அற்றவனோ, அவனே நிரந்தரமான சந்நியாசி யாவான். பலம் பொருந்திய புயங்களை உடைய அர்ஜுனா, எல்லா இருமைகளிலிருந்தும் விடுபட்டுள்ள அத்தகையோன், பௌதிக பந்தங்களை எளிதில் வென்று, முழுமையாக முக்தியடைகிறான்.

Bg 5.4 — பக்தித் தொண்டு (கர்ம யோகம்) ஜட உலகின் ஆய்வு அறிவிலிருந்து (ஸாங்கிய யோகத்திலிருந்து) வேறுபட்டது என்று அறிவற்றோரே பேசுவர். எவனொருவன் தன்னை இவ்விரண்டு பாதைகளில் ஏதேனும் ஒன்றில் முழுமையாக ஈடுபத்துகிறானோ, அவன் இரண்டின் பலனையும் அடைகிறான் என்று உண்மையான பண்டிதர்கள் கூறுகின்றனர்.

Bg 5.5 — எவனொருவன், ஸாங்கிய யோகத்தினால் அடையக்கூடிய அதே நிலை பக்தித் தொண்டினாலும் அடையக்கூடியதே என்பதை அறிந்து, ஸாங்கிய யோகத்தையும் பக்தித் தொண்டையும் சமநிலையில் காண்கிறானோ, அவனே உள்ளதை உள்ளபடி காண்பவனாவான்.

Bg 5.6 — இறைவனின் பக்தித் தொண்டில் ஈடுபடாமல், வெறுமனே எல்லாச் செயல்களையும் துறப்பது ஒருவனை மகிழ்விக்காது. ஆனால் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள சிந்தனையுடைய மனிதன், தாமதமின்றி பரம்பொருளை அடைய முடியும்.

Bg 5.7 — மனதையும், புலன்களையும் கட்டுப்படுத்தி பக்தியுடன் செயல்படும் தூய ஆத்மா, அனைவருக்கும் பிரியமானவன், அனைவரும் அவனுக்கு பிரியமானவர்கள், எப்போதும் செயலில் ஈடுபட்டுள்ளபோதிலும், அத்தகு மனிதன் பந்தப்படுவதில்லை.

Bg 5.8-9 — தெய்வீக உணர்வில் இருப்பவன், பார்த்தல், கேட்டல், தொடுதல், நுகர்தல், உண்ணுதல், செல்லுதல், உறங்குதல், சுவாசித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பினும், உண்மையில் தான் ஒன்றுமே செய்வதில்லை என்பதை எப்போதும் தனக்குள் அறிந்துள்ளான். ஏனெனில், பேசும்போதும், கழிக்கும்போதும், ஏற்றுக் கொள்ளும் போதும், கண்களை மூடித் திறக்கும்போதும், ஜடப்புலன்களே அவற்றின் விஷயங்களுடன் ஈடுபடுகின்றன என்றும், அவற்றிலிருந்து தான் வேறுபட்டவன் என்றும், அவன் எப்போதும் அறிகின்றான்.

Bg 5.10 — பற்றின்றி தனது கடமைகளைச் செய்து, பலன்களை பரம புருஷ பகவானுக்கு அர்ப்பணிப்பவன், தாமரை இலை எவ்வாறு நீரால் தீண்டப்படுவதில்லையோ, அதுபோல அவன் பாவ விளைவுகளால் தீண்டப்படுவதில்லை.

Bg 5.11 — பற்றுதலைத் துறந்த யோகிகள், தூய்மையடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், உடல், மனம், புத்தி மற்றும் புலன்களால் கூட செயல்படுகின்றனர்.

Bg 5.12 — பக்தியில் உறுதியாக உள்ள ஆத்மா, எல்லாச் செயல்களின் பலனையும் எனக்கே அர்ப்பணிப்பதால், பூரண அமைதியை அடைகிறான். ஆனால் தெய்வீகத்துடன் இணையாதவனோ, தனது முயற்சியின் பலனை அனுபவிக்கும் பேராசையால் பந்தப்படுகிறான்.

Bg 5.13 — உடலையுடைய ஆத்மா, தனது இயற்கையைக் கட்டுப்படுத்தி, மனதால் எல்லாச் செயல்களையும் துறந்துவிடும் போது, செய்யாமலும் காரணமாகாமலும் ஒன்பது கதவுகளைக் கொண்ட நகரில் (பௌதிக உடலில்) இன்பமாக வசிக்கின்றான்.

Bg 5.14 — உடல் என்னும் நகரத்தின் நாயகனான ஆத்மா, செயல்களை உண்டாக்குவதில்லை, செயல்படுமாறு மக்களைத் தூண்டுவதுமில்லை, செயல்களின் பலன்களையும் உண்டாக்குவதில்லை. இவையெல்லாம் ஜட இயற்கையின் குணங்களால் செயலாற்றப் படுபவையே.

Bg 5.15 — அச்செயலின் பாவ புண்ணித்தை பரம புருஷரும் ஏற்பதில்லை. ஜீவனின் உண்மை ஞானம் அறியாமையினால் மறைக்கப் பட்டுள்ளது. இந்த அறியாமையே ஆத்மாவின் மயக்கத்திற்கு காரணமாகும்.

Bg 5.16 — இருப்பினும், அஞ்ஞானத்தை அழிக்கும் ஞானத்தால் ஒருவன் தெளிவடையும் போது, பகல் நேரத்தில் சூரியன் எல்லாவற்றையும் வெளிச்சப்படுத்துவதைப் போல, அவனது ஞானம் எல்லாவற்றையும் வெளிப்படுத்துகின்றது.

Bg 5.17 — எப்போது ஒருவனது புத்தி, மனம், நம்பிக்கை, புகலிடம் என அனைத்தும் பரத்தில் நிலைநிறுத்தப்படுகிறதோ, அப்போது, பூரண ஞானத்தினால், அவன் தனது களங்கங்களிலிருந்து முற்றிலும் தூய்மையடைந்து, விடுதலைப் பாதையில் நேராக முன்னேறுகிறான்.

Bg 5.18 — அடக்கமுள்ள பண்டிதர்கள் தங்களது உண்மை ஞானத்தின் வாயிலாக, கற்றறிந்த தன்னடக்கமுள்ள பிராமணன், பசு யானை, நாய், நாயைத் தின்பவன் (கீழ் ஜாதி) என அனை வரையும் சம நோக்கில் காண்கின்றனர்.

Bg 5.19 — ஒருமையிலும் சமத்துவத்திலும் மனதை நிலைநிறுத்தியவர்கள், பிறப்பு இறப்பின் நியதிகளை ஏற்கனவே வென்றுவிட்டனர். பிரம்மனைப் போன்றே தோஷமற்று இருப்பதால், அவர்கள் ஏற்கனவே பிரம்மனில் நிலைபெற்றவர்கள்.

Bg 5.20 — எவனொருவன் விரும்பியவற்றை அடைவதால் மகிழ்வும் விரும்பாதவற்றை பெறுவதால் துயரமும் அடைவதில்லையோ, எவனொருவன் ஸ்திர புத்தியுடனும், மயங்காமலும், இறை விஞ்ஞானத்தை அறிந்தவனாகவும் உள்ளானோ, அவன் ஏற்கனவே பிரம்மனில் நிலைபெற்றவனாவான்.

Bg 5.21 — இத்தகு முக்திபெற்ற ஆத்மா ஜடப் புலனின்பங்களால் கவரப் படுவதில்லை, ஆனால் (ஸமாதி நிலையில்) எப்போதும் தன்னுள்ளே சுகத்தை அனுபவிக்கின்றான். இவ்விதமாக, பரத்தை தியானிப்பதால் தன்னுணர்வு உடையோன் எல்லை யற்ற சுகத்தை அனுபவிக்கின்றான்.

Bg 5.22 — ஜடப் புலன்களின் தொடர்பினால் வரும் இன்பம், துன்பங்களுக்குக் காரணமாக இருப்பதால், அறிவுடையோன் அதில் பங்கு கொள்வதில்லை. குந்தியின் மகனே, இத்தகு இன்பங்களுக்கு ஆரம்பமும் முடிவும் இருப்பதால், அறிவுடையோன் இவற்றினால் மகிழ்ச்சியடைவதில்லை.

Bg 5.23 — ஒருவனால் தனது தற்போதைய உடலை நீக்கும் முன்பு, ஜடப் புலன்களின் உந்துதல்களை பொறுத்துக் கொள்ளவும், காமத்தையும் கோபத்தையும் கட்டுப்படுத்தவும் முடிந்தால், அவன் நன்கு நிலைபெற்றவனாவான். இவ்வுலகிலேயே அவன் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

Bg 5.24 — எவனொருவன் தனக்குள் சுகமாக உள்ளானோ, தனக்குள் செயல்பட்டு இன்புறுகின்றானோ, தனக்குள் பார்வையை செலுத்துகின்றானோ, அவனே உண்மையில் பக்குவமான யோகியாவான். அவன் பரத்தில் முக்தி பெற்று பரத்தையே அடைகின்றான்.

Bg 5.25 — யாரெல்லாம் சந்தேகத்தினால் எழும் இருமைகளுக்கு அப்பாற் பட்டுள்ளனரோ, மனதை உள்நோக்கி ஈடுபடுத்தியுள்ளனரோ மற்ற உயிர்வாழிகளின் நலனிற்காக பாடுபடுவதில் எப்போதும் முனைப்புடன் உள்ளனரோ, எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டுள்ளனரோ, அவர்கள் பரத்தில் முக்தியடைகின்றனர்.

Bg 5.26 — யாரெல்லாம் கோபத்திலிருந்தும் எல்லா பௌதிக ஆசைகளிலிருந்தும் விடுபட்டுள்ளனரோ, தன்னுணர்வும் தன்னொழுக் கமும் நிறைந்து பக்குவத்தை அடைவதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்கின்றனரோ, அவர்கள், கூடிய விரைவில் பரத்தில் முக்தியடைவது உறுதி.

Bg 5.27-28 — எல்லாப் புறப்புலன் விஷயங்களையும், வெளியே நிறுத்தி, புருவ மத்தியில் கண்களையும், பார்வையையும், நிறுத்தி, நாசிக்குள் உள், வெளி சுவாசங்களை நிறுத்தி, மனம், புலன்கள் அறிவு இவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய முக்தியை விரும்பும் ஆன்மீகவாதி, ஆசை, பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபடுகிறான். எப்போதும் இந்நிலையில் இருப்பவன், நிச்சயமாக முக்தியடைந்தவனே.

Bg 5.29 — நானே, எல்லா யாகங்களையும், தவங்களையும், இறுதியில் அனுபவிப்பவன் என்றும், எல்லா லோகங்களையும், தேவர்களையும், கட்டுப்படுத்துபவன் என்றும், எல்லா உயிர்வாழிகளின் உற்ற நண்பன் என்றும் அறிந்து, என்னைப் பற்றிய முழு உணர்வில் இருப்பவன், ஜடத்துயரங்களிலிருநது விடுபட்டு அமைதி அடைகிறான்.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question