Saturday, July 27

ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் – 3

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

கர்ம யோகம்

   Bg 3.1 — அர்ஜுனன் கூறினான்: ஜனார்தனனே, கேசவனே, பலன் நோக்குச் செயல்களைவிட புத்தி சிறந்தது என்றால், கோரமான இப்போரில் தாங்கள் என்னை பலவந்தமாக ஈடுபடுத்துவது ஏன்?

    Bg 3.2 — இரண்டு வழிகளை ஒன்று போலக் கூறும் உமது அறிவுரையால், எனது புத்தி பேதலிக்கின்றது. எனவே, எனக்கு மிகவும் நன்மையானது எது என்பதை முடிவாகக் கூறுவீராக.

    Bg 3.3 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: பாவங்களற்ற அர்ஜுனா, இருவகையான மனிதர்கள் தன்னுணர்விற்காக முயற்சி செய்வதாக நான் முன்பே விளக்கினேன். சிலர் ஸாங்கிய தத்துவ சிந்தனைகளாலும், பிறர் பக்தித் தொண்டினாலும், தன்னுணர்வினை அடைய முயற்சி செய்கின்றனர்.

    Bg 3.4 — செயல்களிலிருந்து விலகிக் கொள்வதால் விளைவுகளிலிருந்து ஒருவன் விடுதலை பெற முடியாது. துறவால் மட்டும் பக்குவமடைதல் என்பதும் இயலாததாகும்.

    Bg 3.5 — பௌதிக இயற்கையிடமிருந்து பெறப்பட்ட குணங்களுக்குத் தகுந்தாற் போல, ஒவ்வொருவரும் சுதந்திரம் ஏதுமின்றி செயல்படுவதற்கு வற்புறுத்தப்படுகின்றனர். எனவே, ஒரு கணம் கூட செயல்கள் எதையும் செய்யாமல் இருப்பது எவருக்கும் சாத்தியமல்ல.

    Bg 3.6 — புலன்களின் செயல்களைக் கட்டுப்படுத்தி, அதே சமயம் புலனின்பப் பொருள்களில் மனதை அலைபாய விடுபவன், தன்னையே முட்டாளாக்கிக் கொள்கிறான். அவன் போலி மனிதன் என்று அழைக்கப்படுகின்றான்.

    Bg 3.7 — அதே சமயத்தில், செயலாற்றும் புலன்களை மனதால் கட்டுபடுத்தி, பற்றின்றி கர்ம யோகத்தில் (கிருஷ்ண உணர்வில்) செயல்படும் நேர்மையான மனிதன், மிக உயர்ந்தவனாவான்.

    Bg 3.8 — உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வாயாக. செயலாற்றாமல் இருப்பதை விட இது சிறந்ததாகும். செயலின்றி இருப்பவனால் தனது உடலை கூடப் பாதுகாக்க முடியாது.

    Bg 3.9 — விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்படும் செயல்கள் நிறைவேற்றப்படலாம், மற்ற செயல்கள் இந்த பௌதிக உலகத்தோடு பந்தப்படுத்துபவை. எனவே, குந்தியின் மகனே, உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை அவரது திருப்திக்காகச் செய். இவ்விதமாக நீ எப்போதும் பந்தத்திலிருந்து விடுபட்டு வாழ்வாய்.

    Bg 3.10 — படைப்பின் ஆரம்பத்தில், மனித குலங்களையும் தேவர்களையும் விஷ்ணுவிற்கான யாகங்களுடன் சேர்த்து அனுப்பிய பிரஜாபதி, “யாகங்களைச் செய்து சுகமாக இருங்கள்; ஏனெனில், மகிழ்ச்சியான வாழ்விற்கும் முக்திக்கும் தேவையான அனைத்தும் இந்த யாகங்களால் அடையப்பெறும்” என்று சுறி அவர்களை ஆசீர்வதித்தார்.

    Bg 3.11 — யாகங்களால் மகிழ்ச்சியடையும் தேவர்கள் உங்களையும் மகிழ்விப்பர். மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் இடையேயான இத்தகு ஒத்துழைப்பினால், அனைவரும் உயர்ந்த நலமுடம் வாழலாம்.

    Bg 3.12 — பல்வேறு வாழ்க்கைத் தேவைகளின் அதிகாரியான தேவர்கள், யாகங்களால் திருப்தியடைந்து உங்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் அளிக்கின்றனர். இத்தகு அன்பளிப்புகளை பதிலுக்கு அவர்களுக்கு படைக்காமல் அனுபவிப்பவன் நிச்சயமாக திருடனேயாவான்.

    Bg 3.13 — யாகத்தில் அர்ப்பணிக்கப்பட்ட உணவை உண்பதால், பகவானின் பக்தர்கள் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். தங்களது சுய புலனின்பத்திற்காக உணவு தயாரிப்பவர்கள் பாவத்தை உண்கிறார்கள்.

    Bg 3.14 — மழையால் தோற்றுவிக்கப்படும் தானியங்களால் எல்லா ஜீவன்களின் உடல்களும் வாழ்கின்றன. யாகத்தால் மழையும், விதிக்கப்பட்ட கடமைகளால் யாகமும் உண்டாக்கப் படுகின்றன.

    Bg 3.15 — விதிக்கப்பட்ட கடமைகள் வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை. வேதங்கள் நேரடியாக முழுமுதற் கடவுளிடமிருந்து தோன்றியவை. எனவே, எங்கும் பரவியுள்ள முழுமுதற் கடவுள், எல்லா யாகங்களிலும் நித்தியமாக வீற்றுள்ளார்.

    Bg 3.16 — எனதன்பு அர்ஜுனா, வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள இத்தகைய யாக சக்கரத்தை இம்மனித வாழ்வில் கடைப் பிடிக்காதவன், முற்றிலும் பாவகரமான வாழ்க்கை வாழ்கிறான். புலன்களின் திருப்திக்காக மட்டும் வாழ்பவனின் வாழ்வு பலனற்றதாகும்.

    Bg 3.17 — ஆனால், மனிதப் பிறவியை தன்னுணர்விற்காக உபயோகித்து, தன்னில் மகிழ்ந்து தன்னிலே திருப்தி கொண்டு, தன்னில் பூரணமாக இருப்பவனுக்குக் கடமைகள் ஏதுமில்லை.

    Bg 3.18 — தன்னை உணர்ந்தவனுக்கு, விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதால் அடைய வேண்டிய நோக்கம் ஏதுமில்லை, இத்தகைய கடமைகளைச் செய்யாதிருக்கும் அவசியமும் இல்லை. மற்ற ஜீவன்களை எதற்கும் நம்பியிருக்க வேண்டியதும் இல்லை.

    Bg 3.19 — எனவே, செயலின் பலன்களில் பற்றுதல் கொள்ளாமல், கடமைக்காகச் செயல்படுவாயாக. பற்றின்றிச் செயலாற்றுவதால் ஒருவன் பரத்தை அடைகிறான்.

    Bg 3.20 — ஜனகரைப் போன்ற மன்னர்களும் நியமிக்கப்பட்ட கடமைகளைச் செய்ததன் மூலமாகவே பக்குவமடைந்தனர். எனவே, பொது மக்களுக்கு அறிவூட்டுவதற்காகவாவது நீ உன்னுடையகடமையைச் செய்தாக வேண்டும்.

    Bg 3.21 — பெரிய மனிதன் எத்தகைய செயல்களைச் செய்கின்றானோ, அதையே பொதுமக்களும் பின்பற்றுகின்றனர். தன் செயல்களால் எந்தத் தரத்தை அவன் உவமை அமைத்துக் காட்டுகின்றானோ அதையே உலகம் முழுவதும் பின்பற்றுகின்றது.

    Bg 3.22 — பிருதாவின் மகனே, மூவுலகங்களிலும் நான் செய்ய வேண்டிய கடமை ஏதுமில்லை. எனக்குத் தேவையோ, நான் அடைய வேண்டியதோ ஏதுமில்லை. இருந்தும் நான் விதிக்கப்பட்ட கடமைகளில் ஈடுபட்டுள்ளேன்.

    Bg 3.23 — ஏனெனில், விதிக்கப்பட்ட கடமைகளை கவனத்துடன் செயலாற்ற நான் எப்பொழுதாவது தவறினால், மனிதரெல்லாம் நிச்சயமாக என் பாதையையே பின்பற்றுவர்.

    Bg 3.24 — நான் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாவிடில், இந்த உலககளெல்லாம் சீரழிந்துவிடும். தேவையற்ற ஜனங்கள் தோன்றுவதற்கு காரணமாகிவிடுவேன். அதன் மூலம் எல்லா உயிர்வாழிகளின் அமைதியையும் அழித்தவனாகி விடுவேன்.

    Bg 3.25 — பலனில் பற்றுதல் கொண்டுள்ள அறிவற்றவன் தனது கடமையைச் செய்வதைப் போலவே, அறிஞரும் கடமையைச் செயலாற்றலாம்; ஆனால் பற்றுதல் ஏதுமின்றி, பொதுமக்களை சரியான பாதையில் வழிநடத்துவதற்காகவே அது செய்யப்படுகிறது.

    Bg 3.26 — விதிக்கப்பட்ட கடமைகளில் பலன்களில் பற்றுக் கொண்டுள்ள அறிவற்றவர்களின் மனதை, அறிஞர்கள் குழப்பக் கூடாது; செயலிலிருந்து விலகுவதற்கு ஊக்குவிக்கக் கூடாது. மாறாக, பக்தி உணர்வுடன் செயல்படுவதன் மூலம், எல்லாவித செயல்களிலும் (கிருஷ்ண உணர்வின் படிப்படியான முன்னேற்றத்திற்காக) அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

    Bg 3.27 — அஹங்காரத்தினால் பாதிக்கப்பட்டு மயங்கிய ஆத்மா, பௌதிக இயற்கையின் முக்குணங்களால் நடைபெறும் செயல்களுக்குத் தன்னையே கர்த்தா என்று எண்ணிக் கொள்கிறான்.

    Bg 3.28 — பலம் பொருந்திய புயங்களை உடையோனே, பக்தியில் செயல்படுதல் மற்றும் பலனை நோக்கிச் செயல்படுதல் இவற்றின் வேறுபாட்டை நன்கு அறிந்திருப்பதால், பூரண உண்மையின் ஞானமுடையவன், புலன்களிலும் புலனுகர்ச்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை.

    Bg 3.29 — ஜட இயற்கையின் குணங்களால் மதிமயங்கிய அறிவற்றோர், லௌகீகச் செயல்களில் முழுமையாக பற்றுடையோராகின்றனர். குறைவான அறிவுடன் செய்யப்படுவதால் இத்தகைய கடமைகள் கீழ்த்தரமானவை என்ற போதிலும், அறிவுடையோர் அவர்களை நிலைபிறழச் செய்யக் கூடாது.

    Bg 3.30 — எனவே, அர்ஜுனா, என்னைப் பற்றிய முழு அறிவுடன், உனது எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணித்து, பலனில் ஆசைகளின்றி, உரிமையுணர்வையும் மனத்தளர்ச்சியையும் கைவிட்டுப் போரிடுவாயாக.

    Bg 3.31 — யாரெல்லாம் என்னுடைய இந்த அறிவுரைகளின்படி தங்களது கடமைகளை நிறைவேற்றுகிறார்களோ, யாரெல்லாம் இவற்றை பொறமையின்றி நம்பிக்கையுடன் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் பலன்நோக்குச் செயல்களின் பந்தத்திலிருந்து விடுதலை அடைகின்றனர்.

    Bg 3.32 — ஆனால், யாரெருவன் பொறமையினால் இந்த அறிவுரைகளை அவமதித்து, அவற்றை முறையாகப் பின்பற்றத் தவறுகிறானோ, அவன், எவ்வித ஞானமும் இல்லாதவனாக, முட்டாளாக, பக்குவமடைவதற்கான முயற்சிகள் அனைத்திலும் நஷ்டமடைந்தவனாகக் கருதப்படுகிறான்.

    Bg 3.33 — ஒவ்வொருவரும் முக்குணங்களிலிருந்து பெறப்பட்ட இயற்கையையே பின்பற்றுவதால், அறிவுசான்ற ஞானியும் தனது சுய இயற்கையின்படியே செயல்படுகிறான். அடக்கு முறையினால் எதனைச் சாதிக்க முடியும்?

    Bg 3.34 — புலன்கள் மற்றும் புலனுகர்ச்சிப் பொருள்களின் மீதான விருப்பு வெறுப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு விதிமுறைகள் உள்ளன. அத்தகு விருப்பு வெறுப்புகளின் கட்டுப்பாட்டில் ஒருவன் வந்து விடக்கூடாது; ஏனெனில், தன்னுணர்வுப் பாதையில் இவை தடைக் கற்களாகும்.

    Bg 3.35 — பிறருடைய கடமைகளை நன்றாகச் செய்வதைவிட, குற்றங்கள் இருப்பினும் தனக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வது சிறந்தது. பிறருடைய பாதையைப் பின்பற்றுதல் அபாயகரமானது என்பதால், பிறரது கடமைகளில் ஈடுபடுவதைவிட, தனக்கென்று உள்ள கடமையைச் செய்யும் போது அழிவடைவதும் சிறந்ததாகும்.

    Bg 3.36 — அர்ஜுனன் கூறினான்: விருஷ்ணி குலத்தவரே, விருப்பமில்லாவிட்டாலும், பலவந்தமாக ஈடுபடுத்தப்படுவதுபோல, ஒருவன் பாவ காரியங்களைச் செய்ய எதனால் தூண்டப்படுகிறான்?

    Bg 3.37 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: அர்ஜுனா, காமமே இதற்குக் காரணம். ரஜோ குணத்தில் உற்பத்தியாகி, பின்னர் கோபமாக உருவெடுக்கும் இஃது இவ்வுலகின் எல்லாவற்றையும் அழிக்கும் பாவகரமான விரோதியாகும்.

    Bg 3.38 — எவ்வாறு நெருப்பு புகையாலும் கண்ணாடி தூசியாலும் கரு கருப்பையாலும் மறைக்கப்பட்டுள்ளதோ, அவ்வாறோ, காமத்தின் பல்வேறு நிலைகளினால் உயிர்வாழிகளும் மறைக்கப்பட்டுள்ளனர்.

    Bg 3.39 — இவ்வாறாக அறிவுடைய ஜீவனின் தூய உணர்வு, என்றும் திருப்தியடையாததும் நெருப்பு போன்று எரிவதுமான காமத்தின் உருவிலான அவனது நித்திய எதிரியால் மறைக்கப்படுகின்றது.

    Bg 3.40 — புலன்கள், மனம், புத்தி ஆகியவை காமம் அமரக்கூடிய இடங்களாகும். இவற்றின் மூலம், ஜீவனின் உண்மையறிவை மறைத்து காமம் அவனை மயக்குகின்றது.

    Bg 3.41 — எனவே, பரத குலத்தோரில் தலைசிறந்த அர்ஜுனா, புலன்களை ஒழுங்குபடுத்துவதால் பாவத்தின் பெரும் சின்னமான இந்த காமத்தை ஆரம்பத்திலேயே அடக்கி, ஞானத்தையும் தன்னுணர்வையும் அழிக்கும் இந்த எதிரியை அறவே ஒழித்து விடுவாயாக.

    Bg 3.42 — செயலாற்றக்கூடிய புலன்கள், ஜடப்பொருளைவிட உயர்ந்தவை, மனம் புலன்களைவிட உயர்ந்தது; புத்தி மனதைவிடவும் உயர்ந்தது; மேலும், அவனோ (ஆத்மாவோ) புத்தியை விடவும் உயர்ந்தவன்.

    Bg 3.43 — இவ்வாறாக, ஜடப் புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றை விட உயர்ந்தவனாக தன்னை உணர்ந்து, பலம் பொருந்திய புயங்களை உடைய அர்ஜுனா, தெளிவான ஆன்மீக புத்தியினால் (கிருஷ்ண உணர்வினால்) மனதை உறுதிப்படுத்தி, காமம் எனப்படும் திருப்திப்படுத்த முடியாத எதிரியை ஆன்மீக பலத்தினால் வெற்றிக் கொள்ள வேண்டும்.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question