Tuesday, June 25

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 9 I Gita mahatmiya Chapter-9

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை ஒன்பதாம் அத்தியாயத்தின் மஹிமை

சிவபெருமான் கூறினார், எனதன்பு பார்வதியே, “ஸ்ரீமத் பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தின் மகிமைகளை நான் இப்போது கூறுகிறேன்”. 

    நர்மதா நதிக்கரையில் மஹிஷ்மதி என்ற ஊரில், மாதவா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் வேத சாஸ்திரங்களின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, உயர்தர பிராமணராக விளங்கினார். கற்றறிந்த பிராமணர் என்ற காரணத்தினால், அவருக்கு நிறைய தானம் கிடைக்கும். தானத்தின் மூலம் கிடைத்த பொருட்களை வைத்து ஒரு பெரிய யாகம் செய்ய திட்டமிட்டார். யாகத்தின் ஆகூதிக்காக ஒரு ஆட்டை கொண்டு வந்தார் அவர். யாகத்திற்கு பலர் வந்திருந்தனர். யாகத்தின் போது அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக, ஆடு மிகவும் சப்தமாக சிறித்து விட்டு பேச துவங்கியது. அது, “ஓ பிராமணரே, நம் அனைவரையும் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு சுழற்சியில் கொண்டு சேர்க்கும் இத்தகைய யாகங்களால் என்ன பலன்? பல யாகங்களை செய்தவன் நான். இருந்தும் நான் பெற்றிருக்கும் உடலை பார்த்தாயா?” என்று கேட்டது. ஆட்டின் கதையை கேட்க அனைவரும் ஆவலாயிருக்க, பிராமணர் ஆட்டிடம் சென்று மிகவும் பணிவுடன், “நீ எவ்வாறு ஆட்டின் உருவம் பெற்றாய்? உன்னுடைய முந்தைய ஜென்மத்தில் நீ யாராக இருந்தாய்? என்ன காரியங்கள் செய்தாய்?” என்று வினவினார்.

    ஆடு கூறியது , “பிராமணரே, என்னுடைய முந்தைய ஜென்மத்தில் நானும் ஒரு பிராமணனாக பிறந்தேன். வேத சாஸ்திரங்களை கற்றறிந்து அதன்படி அனைத்து காரியங்களையும் செய்து வந்தேன். ஒருமுறை என் மகன் கடும் நோயினால் அவதிக்குள்ளானான். இதை தாங்கமுடியாத என் மனைவி, யாகம் வளர்த்தி ஒரு ஆட்டினை பலி கொடுத்தால் மகனுக்கு நோய் குணமாகும் என்று கூறினாள். அவளின் பேச்சை கேட்ட நானும், இதற்கு சம்மதித்து ஒரு ஆட்டை கொண்டு வந்தேன். துர்கை அம்மன் கோவிலில் யாகம் வளர்த்தி பலி கொடுக்கும் நேரத்தில் அந்த ஆடு எனக்கு சாபம் அளித்தது. “இரக்கமற்றவனே, தாழ்ச்சியானவனே, உன் மகனை காப்பாற்றுவதற்காக, என் குட்டிகளுக்கு தந்தை இல்லாமல் செய்கிறாயா? நீ அடுத்த பிறவியில் ஆடாக பிறப்பாய்” என்று கோபத்துடன் சபித்தது. நானும் இறந்ததும் ஆட்டின் உடலை பெற்றேன். இருப்பினும் பகவானின் கருணையால் என் முந்தைய ஜென்மம் நினைவு உள்ளது. நான் மேலும் ஒரு கதையை கூறுகிறேன் கேட்பாயாக. எவருக்கும் முக்தி கொடுக்கக்கூடிய குருக்ஷேத்ரம் என்னும் இடத்தில், சந்திரசர்மா என்ற மன்னர் வாழ்ந்து வந்தார். அவர் சூரிய வம்சத்தை சேர்ந்தவர். ஒருமுறை சூரிய கிரஹணத்தின் போது மன்னர் தானம் வழங்க விரும்பினார். அதற்காக, வேதியரோடு குளத்திற்கு சென்று நீராடிய பிறகு, அரண்மனைக்கு திரும்பி புத்தாடை உடுத்தி அழகாக திலகமிட்டார். பின்னர் ஒரு தகுதியான பிராமணரை அழைத்து தானம் வழங்கினார். மன்னர் அளித்த தானத்தில் மிகவும் அழகற்ற ஒரு சூத்திரனும் இருந்தான். தானம் வழங்கியவுடன், அந்த சூத்திரனின் உடம்பிலிருந்து ஒரு சண்டாளன் (நாய் உண்பவன்) தோன்றினான். சிறிது நேரம் கழித்து ஒரு சண்டாளியும் தோன்றினாள். இருவரும், திடீரென்று அந்த பிராமணரின் உடம்பிற்குள் புகுந்துவிட்டனர்.

    இதை கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் பிராமணர் சிறிதும் சஞ்சலமடையாமல், பகவான் கோவிந்தரை மனதில் இருத்தி ஸ்ரீமத் பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தை படிக்கத்துவங்கினார். நடப்பதை அனைவரும் வாயடைத்துப்போய் பார்த்துக்கொண்டிருக்கையில், விஷ்ணுதூதர்கள் அங்கே வந்து, அந்த இரண்டு சண்டாளர்களையும் விரட்டினர். மிகவும் ஆச்சரியமடைந்த மன்னர், பிராமணரிடம், “ஓ பிராமணரே, அந்த இரண்டு சண்டாளர்களும் யார்? தாங்கள் என்ன மந்திரம் ஓதினீர்கள்? யாரை நினைத்துக்கொண்டீர்கள்?” என்று வினவினார். அதற்கு அந்த பிராமணர், “பாவங்களின் மொத்தமாக ஒரு சண்டாளனும் அபராதத்தை உருவமாக இன்னோரு சண்டாளியும் தோன்றினார்கள். அவர்கள் தோன்றியவுடன், நான் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்தேன். இது எல்லா விதமான பயங்களிலிருந்தும் நம்மை காப்பாற்ற வல்லது. ஸ்ரீமத் பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தை படிப்பதன் மூலமாக, பகவான் கோவிந்தரின் தாமரை பாதங்களை எப்பொழுதும் தியானிக்க முடியும்” என்று பதிலளித்தார்.

    மிகவும் மகிழ்ந்த மன்னர், தனக்கும் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தை வாசிக்க கற்று தரும்படி பிராமணரிடம் வேண்டினார். பிராமணரும் அவ்வாறே செய்தார். நாளடைவில் மன்னர் பகவான் கோவிந்தரின் தாமரை பாதங்களை சரணடைந்தார்.

    இந்த கதையை ஆட்டிடமிருந்து கேட்ட மாதவன், ஆட்டை விடுவித்துவிட்டு தானும் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்தார். அவரும் பகவானின் தாமரை கமலங்களை அடைந்தார்.

+69

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question