Sunday, November 10

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 12 I Gita mahatmiya Chapter-12

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பனிரெண்டாம் அத்தியாயத்தின் மஹிமை

சிவபெருமான் கூறினார், “எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பனிரெண்டாம் அத்தியாயத்தின் மகிமைகளை பற்றி கூறப்போகிறேன்”. 

    தெற்கே, கோலாப்பூர் என்ற தலத்தில், பகவான் விஷ்ணுவின் மனைவியான மஹாலக்ஷிமியின் ஆலயம் உள்ளது. அங்கு அவர் அனைத்து தேவர்களாலும் வழிபடப்படுகிறார். அந்த தலம் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றவல்லதாகும். ருத்ரகயாவும் அங்கு அமைந்துள்ளது. ஒரு நாள் ஒரு இளவரசர் அங்கு வந்தார். அவருடைய உடல் பொன்னிறமாகவும், அவருடைய கண்கள் மிக அழகாகவும்

    இருந்தன. உறுதியான தோள்களும், அகலமான பேழையும் கொண்டிருந்தார் அவர். அவருடைய கரங்கள் உறுதியாகவும் நீளமாகவும் இருந்தன. அவர் கோலாப்பூரை அடைந்ததும் அங்குள்ள மணிகண்ட தீர்த்தத்திற்கு சென்று நீராடிவிட்டு தன்னுடைய மூதாதையர்களுக்கு வழிபாடு செய்தார். பின்பு அங்கிருந்து மஹாலக்ஷ்மியின் ஆலயத்திற்கு வந்து, லக்ஷ்மிதேவியை வணங்கிவிட்டு, பின்வருமாறு பிரார்த்திக்க ஆரம்பித்தார். “கருணையின் வடிவான தேவி, தாங்கள் மூவுலகிலும் அனைவராலும் பூஜிக்கப்படுபவர். அனைத்து நன்மைகளையும் அளிக்கக்கூடியவர்; அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் நீங்களே அடைக்கலமாவீர்கள்; அனைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்யக்கூடியவர்;

    பகவான் அச்சுதருடைய அற்புத சக்தியாவீர்கள்; பக்தர்களை காப்பவர்; பக்தர்களுடைய ஆசைகளை பூர்த்தி செய்பவர்; பகவானுடைய சேவையில் பக்தர்களை ஈடுபடுத்துபவர்; எங்களை போன்ற வீழ்ந்த ஆத்மாக்களை விடுவிக்க வல்லவர்; எல்லா புகழும் உங்களுக்கே! தேவியே , மூவுலகங்களையும் காப்பதற்காக, தாங்கள் பல விதங்களில் காட்சி தருகிறீர்கள் – அம்பிகா, ப்ராஹ்மி, வைஷ்ணவி, மகேஸ்வரி, வராஹி மகா லட்சுமி, நரசிம்ஹி, இந்திரி, குமாரி, சண்டிகை, லட்சுமி, சாவித்ரி, சந்திரகலா, ரோகினி, பரமேஸ்வரி. எல்லையற்ற புகழுடைய உங்களுக்கு எல்லா புகழும் உரித்தாகுக! என் மீது கருணை காட்டுங்கள்”.

    இந்த பிரார்த்தனையை கேட்ட மஹாலக்ஷ்மி தேவி மிகவும் மகிழ்ந்தார். பின்னர் இளவரசரிடம், “உன்னுடைய பிரார்த்தனையால் நான் மிகவும் மகிழ்வுற்றேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்” என்று கூறினார்.

    இளவரசர், “மூவுலகங்களின் அன்னையே, என்னுடைய தந்தையான ப்ரஹத்ரதி, அஸ்வமேத யாகத்தை செய்துகொண்டிருக்கும் பொது தீடீரென்று இறந்து விட்டார். அவர் பாதியில் விட்டு சென்ற யாகத்தை நான் முடிக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் அதற்குள் உலகம் முழுவதும் சுற்றி வந்து புனிதப்படுத்திய யாகத்திற்கான அஸ்வதை (குதிரையை ) யாரோ திருடி விட்டார்கள். குதிரையை தேடும்படி எனது வீரர்களுக்கு உத்தரவிட்டேன். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகையால் தான் நான் உங்களின் உதவியை நாடி வந்துள்ளேன். எனது பிரார்த்தனையால் நீங்கள் மகிழ்வுற்றது உண்மையென்றால், எனது குதிரையை நான் எப்படி கண்டுபிடிப்பது என்று எனக்கு கூறுங்கள். நான் யாகத்தை நல்லபடியாக முடித்து எனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற எனக்கு உதவுங்கள்” என்று கூறினார்.

    மஹாலக்ஷ்மி, “இந்த ஆலயத்தின் வாயிலில் ஒரு உயர்ந்த பிராமணர் இருக்கிறார். அவர் பெயர், சித்த சமாதி. அவர் உன்னுடைய ஆசையை நிறைவேற்றுவார்” என்று கூறினார்.

    மஹாலக்ஷ்மியின் பதிலை கேட்ட இளவரசர், உடனடியாக அந்த பிராமணரை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார். அவர் முன் கைகூப்பி நின்ற இளவரசரை பார்த்த பிராமணர், “தாய் மஹாலக்ஷ்மி உன்னை இங்கு அனுப்பியிருக்கிறார். ஆகையால் நான் உன்னுடைய ஆசையை நிறைவேற்றுகிறேன்” என்று கூறினார்.

    பிராமணர் சில மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தார். அனைத்து தேவர்களும் அவர் முன் தோன்றினர். தேவர்கள் அனைவரும் சித்த சமாதி முன் நின்று அவருடைய ஆணைக்காக காத்திருப்பதை பார்த்த இளவரசருக்கு ஒரே ஆச்சர்யம். சித்த சமாதி பேச துவங்கினார். “தேவர்களே, அஸ்வமேத யாகத்திற்காக வைக்கப்பட்டிருந்த இந்த இளவரசருடைய குதிரையை நேற்று இரவு இந்திரர் திருடி சென்றுவிட்டார். நீங்கள் அனைவரும் சென்று அந்த குதிரையை திரும்ப கொண்டு வாருங்கள்” என்று தேவர்களுக்கு உத்தரவிட்டார்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் தேவர்கள் குதிரையுடன் வந்து, அதை ஒப்படைத்துவிட்டு சென்றார்கள். மிகவும் ஆச்சரியமடைந்த இளவரசர், சித்த சமாதியின் பாதங்களில் விழுந்து, “இவ்வலவு சக்தி பெற்ற ஒருவரை நான் இதுவரை பார்த்ததேயில்லை. பிராமணரே, என்னுடைய வேண்டுதலை கேளுங்கள். அஸ்வமேத யாகத்தின்போது தீடீரென்று என் தந்தை இறந்து விட்டார். நான் அவரது சடலத்தை பாதுகாத்து வைத்துள்ளேன். நீங்கள் விருப்பப்பட்டால், அவருக்கு மீண்டும் உயிரளியுங்கள்” என்று கூறினார்.

    சித்த சமாதி உடனே, “சரி, உன் தந்தையின் சடலம் இருக்கும் இடத்திற்கு நாம் செல்வோம்” என்று கூறினார். அவ்விடத்தை அடைந்ததும், சிறிது நீரை கரத்தில் ஏந்தியவாறு சித்த சமாதி சில மந்திரங்களை உச்சரித்துவிட்டு, நீரை அரசரின் சடலத்தில் தெளித்தார். நீர் உடலில் பட்டதும் அரசர் உடனே உயிர்பெற்று எழுந்தார். சித்த சமாதியிடம், “நீங்கள் யார் ?” என்று வினவினார். உடனே இளவரசர் நடந்தவை அனைத்தையும் கூறினார். இதை கேட்டு மிகவும் ஆச்சரியமடைந்த அரசர், சித்தசமாதியின் பாதங்களில் விழுந்து வணங்கி, இவ்வளவு சக்தி கிடைக்குமளவிற்கு தாங்கள் என்ன தவம் செய்தீர்கள்? என்று வினவினார். சித்த சமாதி, ” நான் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பன்னிரெண்டாம் அத்தியாயத்தை படித்து வருகிறேன்” என்று கூறினார்.

    இதை கேட்ட அரசரும் இளவரசரும், அந்த பிராமணரிடமிருந்து ஸ்ரீமத் பகவத் கீதையின் பன்னிரெண்டாம் அத்தியாயத்தை கற்றார்கள். தினமும் அதை படித்து வந்த அவர்கள், சிறிது காலத்தில் பகவான் கிருஷ்ணரின் தாமரை திருவடிகளை வந்தடைந்தார்கள். அவர்கள் மட்டுமல்லாது மேலும் பலரும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பன்னிரெண்டாம் அத்தியாயத்தை படிப்பதன் மூலமாக வாழ்வின் உன்னத குறிக்கோளான பகவானின் திருப்பாதங்களை சென்றடைந்தார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question