நான் இந்த உடலல்ல, இந்த உடலானது என்னைச் சுற்றியுள்ள ஆடையைப் போன்றது,” என்பதை உணர்ந்து, இந்த பிறப்பு இறப்பு எனும் தொடர் சுழற்சியை நிறுத்துவது எவ்வாறு என்பதுகுறித்து ஒருவன் வினவ வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நவீன கால மக்கள் இத்தகைய வினாக்களை எழுப்புவதில்லை. அவர்கள் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளபடி, புலனின்பத்தின் பின்னால் பித்துபிடித்து அலைகின்றனர்.
புலனின்பத்தில் பித்துப்பிடித்தவர்கள் அனைத்துவித அபத்தங்களையும் செய்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் தங்களது தொடர்ச்சியான பிறப்பு இறப்பினை உறுதி செய்வதோடு, அனைத்துவித துன்பத்திற்கும் உள்ளாகின்றனர்.
உடலானது எப்போதும் துன்பத்தைத் தருகின்றது, ஆனால் இதனை நாம் புரிந்துகொள்வதில்லை. சில நேரங்களில் நாம் இன்பத்தை உணர்ந்தாலும், உண்மையில் இந்த உடலானது துன்பத்தின் இருப்பிடமாகும். இது தொடர்பான ஒப்புமை ஒன்று உள்ளது. முன்பெல்லாம் அரசாங்க அதிகாரிகள் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு அவர்களது கைகளைக் கட்டி தலையை நீரில் மூழ்கடிப்பர். அவன் நன்கு மூழ்கியவுடன் தலைமுடியைப் பிடித்து அவனை நீரிலிருந்து வெளியே எடுத்து சிறிது ஓய்வளிப்பர். பின்னர் மீண்டும் நீரினுள் அமிழ்த்துவர். இஃது ஒரு வகையான தண்டனை.
நாம் இங்கு பெறும் சிறுசிறு இன்பங்கள் எல்லாம், நீரில் அமிழ்த்தப்பட்ட குற்றவாளி நீரிலிருந்து வெளியே வரும்போது பெறக்கூடிய தற்காலிக இன்பத்தைப் போன்றதாகும். அதிக நேர துன்பங்களும் சில நொடி இன்பங்களுமே இந்த பௌதிக உலகின் இயல்பாகும்.
அமெரிக்க நாட்டின் அதிபராக இருந்தாலும் சரி, தெருவில் வாழும் மனிதனாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் அவர்கள் துன்பத்தை அனுபவிக்கின்றனர் என்பதே உண்மை. நீங்கள் பெற்ற உடல் உங்களுக்கு துன்பத்தை வழங்குகிறது, தற்போது நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் உங்களுக்கு மற்றோர் உடலை வழங்கும். முந்தைய பிறவியில் புலனின்பத்தில் ஈடுபட்ட காரணமாக, தற்போது இந்தப் பிறவியில் நீங்கள் துன்பத்தை அனுபவிக்கின்றீர்கள். இப்பிறவியிலும் உங்களை உயர்த்திக்கொள்வதற்கு முயலாமல் புலனின்பத்திலேயே ஈடுபடுவீர்களெனில், நீங்கள் அடுத்த உடலை ஏற்று துன்புற வேண்டியிருக்கும்.
(இஸ்கான் பகவத் தரிசனம் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது)