Tuesday, November 3

Sri Locana Dasa Thakura

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

லோசன தாச தாகூர்

ஸ்ரீ லோசன தாச தாகூர், கௌர ராயரின் மிக அன்பிற்குரிய சகாக்களில் ஒருவரான ஸ்ரீ நரஹரி சர்க்கார் தாகூரின் சீடர் ஆவார்.

லோசன தாச தாகூர் ‘சைதன்ய மங்களம்’ என்ற நூலை இயற்றினார். பிருந்தாவன தாச தாகூராலோ அல்லது கிருஷ்ண தாச கவிராஜராலோ வெளிப்படுத்தப்படாத சைதன்ய மகாபிரபுவின் பல லீலைகளை இது கூறுகிறது. குறிப்பாக, ஸ்ரீ கௌரசுந்தரர் சந்நியாசம் ஏற்பதற்கு முந்தைய நாள் இரவு விஷ்ணுப்ரியா தேவியுடன் நடத்திய மிக உருக்கமான உரையாடலை இவர் இதில் குறிப்பிட்டுள்ளார். திறமையான இசைக்கலைஞராக இருந்ததால், லோசன தாச தாகூர் மகாபிரபுவின் லீலைகளை, உணர்ச்சியும் தாளநயமும் மிக்க அழகான கவிதைகளாக விவரித்துள்ளார். சாமானிய மக்களும் ஸ்ரீ சைதன்யரின் தெய்வீக குணாதிசயங்களை எளிதில் புரிந்துகொண்டு, தங்கள் ஆன்மீக உணர்வுகளை விழிப்படையச் செய்ய இது உதவியது. பக்தர்கள் எவ்வாறு ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற வேத இதிகாசங்களைத் தொடர்ந்து பாராயணம் செய்கிறார்களோ, அதுபோலவே கௌடிய வைஷ்ணவர்கள் இன்றும் வங்காளம் முழுவதும் ‘சைதன்ய மங்களத்தை’ ஓதிக்கொண்டு வலம் வருகின்றனர்.

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீ நித்யானந்த பிரபு மற்றும் கௌரிதாச பண்டிதர் ஆகியோரைப் போற்றி லோசன தாச தாகூர் பல பாடல்களை இயற்றியுள்ளார். ராதா-கோவிந்த பிரேம பக்தியை அடைவதற்கு, ராகானுகா பக்தர்கள் கதாதர பிருந்தாவனேஸ்வரியிடம் சரணடைய வேண்டும் என்று லோசன தாச வலியுறுத்துகிறார். ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர், லோசன தாச தாகூரின் ஸ்ரீ சைதன்ய மங்களத்தை அச்சிட்டு விநியோகிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஸ்ரீல பிரபுபாதருக்கு இவரது பஜனைகள் மீது மிகுந்த விருப்பம் இருந்தது. ‘பரம கருண’ பாடலைப் பாடும்போதெல்லாம் ஸ்ரீல பிரபுபாதர் கௌரங்க பிரேமக்கடலில் மூழ்கிவிடுவார்.

பிரபுபாதர் இந்த பஜனைக்கு விரிவான விளக்கவுரை எழுதியுள்ளார்: பஜோ பஜோ பாய், சைதன்ய நிதாய், சுத்ரிட விஸ்வாச கோரி… “லோசன தாச அனைவரையும் பார்த்து, ‘எனது அன்புச் சகோதரரே, உறுதியான நம்பிக்கையுடனும் திடமான விசுவாசத்துடனும் சைதன்யரையும் நித்யானந்தரையும் வழிபடுங்கள்’ என்று கேட்கிறார். இந்த நாம சங்கீர்த்தனமும் நடனமும் விரும்பிய இலக்கை நோக்கி இட்டுச் செல்லாது என்று நினைக்காதீர்கள்; அது நிச்சயமாக இட்டுச் செல்லும். இந்தச் செயல்முறையின் மூலம் ஒருவர் அனைத்து பூரணத்துவத்தையும் அடைவார் என்பது சைதன்ய மகாபிரபுவின் உறுதியளிப்பாகும். எனவே, ஒருவர் திடமான நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் ஹரி நாமத்தை ஜெபிக்க வேண்டும்.”

“எனது நம்பிக்கைகளுக்கெல்லாம் மேலான நம்பிக்கை யாதெனில், ஸ்ரீ நரோத்தம தாச தாகூரின் தாமரைத் திருவடிகளுக்கு அருகில் இருந்து, என் உயிர் மூச்சு உள்ளவரை அவருக்குச் சேவை செய்வதே ஆகும். வீழ்ந்தவனான இந்த லோசன தாசனின் நேசத்திற்குரிய ஆசை என்னவென்றால், நரஹரியின் கருணையால் கௌரங்கரின் மகிமைகளைப் பாடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே. ஸ்ரீ நரஹரி தாகூரே என் பிரபு, நான் அவருடைய சேவகன். அவர் முன் வணங்கி நான் அவருக்கான சேவையை யாசிக்கிறேன். இதுவே எனது ஒரே அபிலாஷை(எனது விருப்பம்).” (லோசன தாச, சைதன்ய மங்களம்)


லோசன தாச தாகூர் – வாழ்க்கை வரலாறு

ஶ்ரீல லோசன தாச தாகூர் கி.பி. 1520-ல், ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு தோன்றி முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வுலகில் தோன்றினார். லோசன தாசர், பகவான் சைதன்யரின் வாழ்க்கை வரலாற்றை ‘ஶ்ரீ சைதன்ய மங்களம்’ என்ற பெயரில் எழுதினார். மேலும் அவர் பல பக்திப் பாடல்களையும் இயற்றியுள்ளார்.

பர்த்வான் மாவட்டத்தின் மஹாகுமார் (காத்னா) பகுதிக்கு உட்பட்ட கோக்ராம் கிராமத்தில் வசித்த ரார்ஹிய வைத்தியர் குடும்பத்தில் ஶ்ரீ லோசன தாச தாகூர் பிறந்தார். இவரது குரு ஶ்ரீ நரஹரி சர்க்கார் தாகூர் ஆவார்.

“நான் தாகூர் ஶ்ரீ நரஹரியின் சேவகன், அவரே என் வாழ்வின் எஜமானர். எனது எல்லா ஆசைகளின் விருப்பத்தையும் அவரது தாமரைத் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்; அதாவது இந்த இழிவான பிறவி (நான்) ஶ்ரீ கௌரசுந்தரரின் அற்புதமான குணங்களைப் பற்றி ஏதாவது விவரிக்க வேண்டும் என்பதே அது. இந்த எதிர்பார்ப்பில், அவரே எனக்கு ஒரே தஞ்சம்.” — [சைதன்ய மங்களம், சத்வ காண்டம்]

இவரது தந்தையின் பெயர் ஶ்ரீ கமலாகர தாசர் மற்றும் தாயின் பெயர் ஶ்ரீ சதானந்தா. பெற்றோரின் ஒரே மகனான இவர், தனது தாய் வழி தாத்தாவின் வீட்டில் வளர்ந்தார், அங்கேயே அவரது கல்வியும் முடிந்தது. சிறு வயதிலேயே ஶ்ரீ கௌராங்கரின் பக்தர்களை சந்திக்கும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது.

மிக இளம் வயதிலேயே அவருக்கு திருமணம் நடந்தது. இளமை முதலே ஶ்ரீ கௌரசுந்தரரிடம் மிகுந்த பற்றுதல் கொண்டிருந்ததால், குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்தால் சூழப்பட்டிருந்தாலும் லௌகீக வாழ்க்கையில் அவருக்கு நாட்டம் இருக்கவில்லை. இளமையில் அவர் தனது நேரத்தின் பெரும்பகுதியை தனது குருவின் இடமான ஶ்ரீகண்டாவில் கழித்தார், அங்கு அவர் கீர்த்தனை செய்வதைக் கற்றுக்கொண்டார்.

சைதன்ய மங்களம் உருவான விதம்

“நாடியாவில் வசிக்கும் முராரி குப்தா, ஶ்ரீ கௌராங்கரின் வாழ்க்கை குறித்து பல அழகான ஸ்லோகம்ங்களை இயற்றியுள்ளார். முராரி குப்தா தனிப்பட்ட முறையில் பங்கேற்ற நிமாயின் இளமைக்கால லீலைகள் மற்றும் அவர் சந்நியாசம் ஏற்ற பிறகு நீலாச்சலத்தில் நடந்த பிற்கால லீலைகள் (இவை ஶ்ரீ தாமோதர பண்டிதரால் விவரிக்கப்பட்டவை) இதில் அடங்கும். சமஸ்கிருதத்தில் அமைந்த முராரி குப்தாவின் இந்த ஸ்லோகங்களைக் கேட்டு நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன், எனவே அவற்றை வங்காள கிராமிய கவிதை நடையில் (பஞ்சாலி) இயற்றியுள்ளேன்.”

அவர் இயற்றிய ‘சைதன்ய மங்களம்’ என்ற நூல் ஶ்ரீ முராரி குப்தாவின் குறிப்புகளிலிருந்து உருவானது.

முன்னர் வங்காளத்தில் (குறிப்பாக கிழக்கு வங்காளம், இப்போது பங்களாதேஷ்) கவிஞர்கள் ‘பஞ்சாலி’ (லக்ஷ்மிர் பஞ்சாலி, சனிர் பஞ்சாலி போன்றவை) எனப்படும் கிளாசிக் ரைம்ஸ் மற்றும் தாள மீட்டர்களின் வடிவங்களில் புனிதப் பாடல்கள் மற்றும் வசனங்களை இயற்றுவது வழக்கம். இறைவனைப் போற்றுவதற்காக பஞ்சாலி பாணி பயன்படுத்தப்பட்டது. ஶ்ரீல லோசன தாச தாகூர் தனது புகழ்பெற்ற படைப்பான ஶ்ரீ சைதன்ய மங்களத்தை இயற்றுவதில் பஞ்சாலி வடிவத்தைப் பயன்படுத்தினார். இந்த வடிவம் ஐந்து வகையான பாடல் பாணிகள் அல்லது மீட்டர்களைப் பயன்படுத்துகிறது.

லோசன தாச தாகூர் இதை தனது சைதன்ய மங்களத்தில் பின்வருமாறு விளக்குகிறார்: “நாடியாவில் வாழ்ந்த அதே முராரி குப்தா, ஶ்ரீ கௌராங்கரின் வாழ்க்கையைப் பற்றி பல சமஸ்கிருத ஸ்லோகங்களை இயற்றினார், பின்னர் அவர் அதை ஒரு புத்தக வடிவில் அமைத்தார். முராரி குப்தாவிடமிருந்து இந்த ஸ்லோகங்களைக் கேட்ட தாமோதர பண்டிதர் அவற்றை எனக்குக் கற்றுக் கொடுத்தார், நான் அவற்றை மிகுந்த மகிழ்ச்சியுடன் மனப்பாடம் செய்தேன். இந்த சமஸ்கிருத ஸ்லோகங்களும், தாமோதர பண்டிதர் மூலம் எனக்கு வழங்கப்பட்ட சைதன்ய மஹாபிரபுவின் கருத்தும் என் மனதில் வளர்ந்தபோது, ​​​​அது ஶ்ரீ சைதன்யரின் வாழ்க்கை மற்றும் லீலைகளைப் போற்றும் வகையில் வங்காளத்தில் இந்த பஞ்சாலி வசனங்களின் வடிவத்தில் என்னிடமிருந்து வெளிப்பட்டது.” (சைத்தன்ய மங்கள், சூத்ர காண்டம்)

தனது முன்னுரையில், பிருந்தாவன தாச தாகூருக்கு தனது பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறார். “நான் பிருந்தாவன தாச தாகூருக்கு என் முழு மனதுடன் வணக்கங்களைச் செலுத்துகிறேன். அவரது சைதன்ய பாகவதத்தின் இனிய பாடல் உலகம் முழுவதையும் மயக்கியுள்ளது.”

பிருந்தாவன தாச தாகூரின் சைதன்ய பாகவதம் முதலில் ‘சைதன்ய மங்களம்’ என்று அழைக்கப்பட்டது. ஶ்ரீல லோசன தாச தாகூரும் ஶ்ரீல கிருஷ்ண தாச கவிராஜ கோஸ்வாமியும் அதற்கு ‘சைதன்ய பாகவதம்’ என்று பெயரிட்டதாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணதாச கவிராஜ கோஸ்வாமி எழுதுகிறார்: கிருஷ்ண லீலா பாகவதே கஹே வேதவ்யாஸ, சைதன்ய லீலார வ்யாஸ-விருந்தாவன தாஸ. “வேதவியாசர் தனது பாகவதத்தில் கிருஷ்ணரின் லீலைகளை விவரித்துள்ளார். சைதன்ய லீலையின் வியாசர் பிருந்தாவன தாசர் ஆவார்.”

பிருந்தாவன தாச தாகூரால் சுருக்கமாகத் தொடப்பட்ட ஶ்ரீ சைதன்யரின் பல லீலைகள், லோசன தாச தாகூரின் சைதன்ய மங்களத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

சைதன்ய மங்களம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: சூத்ர காண்டம், ஆதி காண்டம், மத்திய காண்டம் மற்றும் சேஷ காண்டம்.


சூத்ர காண்டம்

சூத்ர காண்டத்தின் முதல் அத்தியாயம் ‘மங்களாசரணம்’ என்று அழைக்கப்படுகிறது. இது ஶ்ரீ சைதன்யரின் மகிமைகளைப் பற்றிய பாடலுடன் தொடங்குகிறது, பின்னர் ஶ்ரீ சைதன்யரின் தனிப்பட்ட சகாக்களான வைஷ்ணவர்களைப் போற்றுகிறது. இதன் பிறகு, லோசன தாச தாகூர் தனது குருதேவர் நரஹரி சர்க்கார் தாகூருக்கு மரியாதை செலுத்துகிறார்.

இரண்டாவது அத்தியாயம் ‘கிரந்தரம்பா’ (நூல் ஆரம்பம்). இதில் ஜைமினியின் மகாபாரத பாராயணத்தின் கதையை தாமோதர பண்டிதரிடம் கேட்டதை லோசன தாசர் விவரிக்கிறார். அதில் நாரதருக்கும் உத்தவருக்கும் இடையிலான உரையாடல் விவரிக்கப்படுகிறது. கலியுகத்தில் உயிரினங்கள் பெரும் துன்பத்தில் விழுந்திருப்பதைக் கண்ட நாரதர், கிருஷ்ணர் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியும் என்று முடிவு செய்து துவாரகைக்குச் செல்கிறார்.

அங்கு, ருக்மணி தேவியுடன் இருந்த கிருஷ்ணர், கலியுகத்தில் தான் ‘கௌரங்கராக’ பொன்னிற மேனியுடன் தோன்றி ஹரி நாம சங்கீர்த்தனத்தை நிகழ்த்தப் போவதாகக் கூறுகிறார். ராதாராணியின் பக்தி மனநிலையை கௌரவிக்க விரும்புவதால், அவரது பொன்னிற மேனியையும் மனநிலையையும் ஏற்று வருவதாக கிருஷ்ணர் விளக்குகிறார்.

இதைக் கேட்டு பரவசமடைந்த நாரதர் உலகம் முழுவதும் சென்று இந்த செய்தியை அறிவிக்கிறார். பலராமன் நித்யானந்தராகவும், சிவன் அத்வைதராகவும், மற்ற தேவர்கள் முராரி, முகுந்தா, ஶ்ரீவாஸ் போன்ற நித்திய சகாக்களாகவும் பூமியில் தோன்றினர்.


ஆதி காண்டம்

ஆதி காண்டத்தின் முதல் அத்தியாயம் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஜென்ம லீலை (பிறப்பு) பற்றி விவரிக்கிறது. முழுமுதற் கடவுள் சச்சி தேவியின் கருவில் இறங்கி பூமியில் தோன்றினார். பங்குனி மாத பௌர்ணமி அன்று, ஹரி நாம சங்கீர்த்தனத்தின் மத்தியில், ஶ்ரீ கௌரச்சந்திரர் சச்சி மாதாவின் கர்ப்பக் கடலில் இருந்து தங்க நிலவு போலத் தோன்றினார். தேவர்கள், மனிதர்கள் அனைவரும் ஜெகன்னாத மிஸ்ராவின் இல்லத்திற்கு விரைந்தனர். குழந்தையின் உடலில் விஷ்ணுவின் சங்கு, சக்கரம் போன்ற மங்களகரமான சின்னங்கள் காணப்பட்டன.

இரண்டாவது அத்தியாயம் இறைவனின் பால லீலைகளை (குழந்தை பருவ லீலைகள்) விவரிக்கிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு அன்னப்ரசனம் (தானியம் உண்ணும் விழா) மற்றும் பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. அவருக்கு ‘விஷ்வம்பரன்’ என்று பெயரிடப்பட்டது. குழந்தை கௌரஹரி தேவர்களுடன் ராதா-கிருஷ்ணரின் மகிமைகளைப் பாடுவதைக் கண்டு சச்சி மாதா வியப்படைந்தார். சில சமயங்களில் அவர் மண்ணை உண்பது போன்ற லீலைகள் மூலம் தத்துவங்களை விளக்கினார். ஒருமுறை நாய்க்குட்டியுடன் விளையாடிய அவர், அந்த நாய்க்கு ஆன்மீக உடலை வழங்கி வைகுண்டத்திற்கு அனுப்பினார்.

நான்காவது அத்தியாயம் பௌகண்ட லீலை (சிறு பருவம்) பற்றி விவரிக்கிறது. முராரி குப்தர் யோக சாஸ்திரங்களைப் படிப்பதை பகவான் கேலி செய்தார். பின்னர் கிருஷ்ண பக்தியின் மேன்மையைப் பற்றி முராரி குப்தருக்கு உபதேசித்தார். விஸ்வரூபன் (அண்ணன்) சந்நியாசம் ஏற்றது, தந்தையின் மறைவு, வித்யா ஆரம்பம், பூணூல் அணிவித்தல் போன்ற நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. கலியுக தர்மமாக ‘ஹரி-நாம-சங்கீர்த்தனத்தை’ நிறுவுவதற்காக அவர் வந்ததை நூல் விளக்குகிறது.

தந்தை ஜெகன்னாத மிஸ்ரா மறைந்த பிறகு, அவர் படிப்பில் கவனம் செலுத்தினார். பின்னர் லக்ஷ்மி தேவியை மணந்தார். கிழக்கு வங்காளத்திற்கு சுற்றுப்பயணம் சென்றபோது, பிரிவை தாங்க முடியாமல் லக்ஷ்மி தேவி பாம்பு கடித்து மறைந்தார். வீடு திரும்பிய கௌரஹரி தாயாரை தேற்றினார்.

பின்னர் ஶ்ரீ சைதன்யருக்கு விஷ்ணுப்பிரியா தேவியுடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு கயாவிற்குச் சென்று ஶ்ரீ ஈஸ்வர பூரியைச் சந்தித்து, அவரிடம் கிருஷ்ண மந்திரத்தில் தீட்சை பெற்றார். இதன் மூலம் இறைவனின் தெய்வீக பரவசம் வெளிப்பட்டது.


மத்திய காண்டம்

முதல் அத்தியாயத்தில், அவர் ஒரு ஆசிரியராக தனது மாணவர்களுக்கு கருணை காட்டியது விவரிக்கப்பட்டுள்ளது. சுக்லாம்பர பிரம்மச்சாரியின் வீட்டில் முதன்முறையாக தனது கிருஷ்ண பிரேமத்தின் அறிகுறிகளை (மயக்கம், கண்ணீர், உடல் சிலிர்த்தல்) பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

இரண்டாவது அத்தியாயத்தில், மாம்பழக் கொட்டையை நட்டு உடனடியாக மாம்பழங்களை உருவாக்கிய அதிசயம், முகுந்த தத்தருக்கு உபதேசம், கங்கையில் குதித்தல் போன்ற லீலைகள் உள்ளன.

மூன்றாம் அத்தியாயத்தில் அத்வைத ஆச்சாரியரின் மகிமைகள், ஶ்ரீவாஸ் தாகூரின் வீட்டில் நடந்த லீலைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

நான்காம் அத்தியாயத்தில் நித்யானந்த பிரபுவை சந்தித்தல், அவருக்கு தனது ஆறு கை (ஷட்புஜ) வடிவத்தை காட்டுதல் ஆகியவை அடங்கும்.

ஐந்தாம் மற்றும் ஆறாம் அத்தியாயங்களில், ஜெகாய் மற்றும் மதாய் ஆகியோரை மீட்டல், நாடியா தெருக்களில் நாம சங்கீர்த்தனம் செய்தல், அனைவருக்கும் கிருஷ்ண பிரேமத்தை விநியோகித்தல் போன்றவை விவரிக்கப்பட்டுள்ளன.

ஏழாம் அத்தியாயத்தில், ஶ்ரீவாஸ் இல்லத்தில் நரசிம்ம அவதாரமாக காட்சியளித்தது விவரிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் அத்தியாயத்தில், சந்நியாசம் ஏற்பது பற்றிய கனவு, கிருஷ்ணரைப் பிரிந்த வேதனையில் ஶ்ரீ சைதன்யரின் நிலை ஆகியவை உள்ளன.

பன்னிரண்டாம் மற்றும் பதின்மூன்றாம் அத்தியாயங்களில், விஷ்ணுப்பிரியா தேவியின் புலம்பல், அவருக்கு ஆறுதல் கூறுதல், இறுதியாக கத்வாவில் கேசவ பாரதியிடம் சந்நியாசம் பெறுதல் ஆகியவை மிகவும் உணர்ச்சிகரமாக விவரிக்கப்பட்டுள்ளன. சந்நியாசம் பெற்ற பிறகு அவர் ‘ஶ்ரீ கிருஷ்ண சைதன்யர்’ என்ற பெயரைப் பெற்றார்.


சேஷ காண்டம்

முதல் அத்தியாயத்தில், சர்வபௌம பட்டாச்சார்யரை மாற்றுதல், தென்னிந்திய சுற்றுப்பயணம், கோதாவரி கரையில் ராமானந்த ராயரை சந்தித்தல் மற்றும் அவருக்கு ‘ரஸராஜா மற்றும் மஹாபாவா’ (ராதா-கிருஷ்ணரின் இணைந்த வடிவம்) ஆகிய இரட்டை அம்சங்களைக் காட்டுதல் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் அத்தியாயத்தில், பிருந்தாவனத்திற்கு விஜயம் செய்தல், ரூப மற்றும் சனாதன கோஸ்வாமிகளை சந்தித்தல் ஆகியவை உள்ளன.

மூன்றாம் அத்தியாயத்தில், பூரிக்கு திரும்புதல், நவதீபத்திற்கு வந்து தாயாரை சந்தித்தல், பிரதாபருத்ர ராஜாவுக்கு கருணை காட்டுதல் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.


விஷ்ணுப்பிரியா தேவியுடனான உரையாடல்

விருந்தாவன தாச தாகூரால் பதிவு செய்யப்படாத சில லீலைகளை லோசன தாச தாகூர் குறிப்பிடுகிறார். குறிப்பாக, சந்நியாசம் ஏற்பதற்கு சற்று முன்பு ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவுக்கும் விஷ்ணுப்பிரியா தேவிக்கும் இடையே நடந்த உரையாடல்:

மஹாபிரபு சந்நியாசம் ஏற்கத் துடிப்பதைப் பார்த்த நிலவு போன்ற முகம் கொண்ட விஷ்ணுப்பிரியா தேவி, குரல் தழுதழுக்கக் கூறினார், “என் உயிரின் நாதனே! நீங்கள் சந்நியாசம் ஏற்கப் போகிறீர்களா? மக்கள் பேசிக்கொள்வதை நான் கேட்டேன். இது உண்மையானால், நான் நெருப்பில் புகுந்து விடுவேன். நீங்களே என் உயிரின் புதையல். நீங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு போய்விடுவீர்களா?”

இதைக் கேட்ட ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு புன்னகைத்து பின்வருமாறு கூறினார்: “உயிருக்கு இனியவளே கேள், கவலைப்பட வேண்டாம். இந்த உலகில் நீங்கள் பார்ப்பது எல்லாம் பொய்; பகவான் மற்றும் வைஷ்ணவர்கள் மட்டுமே உண்மை. உறவுகள், குடும்பம் எல்லாம் மாயை. ஒரு பிறவியில் நமக்கு ஒரு உறவு இருக்கிறது, அடுத்த பிறவியில் அது மாறுகிறது. கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளைத் தவிர, நமக்கு உண்மையான குடும்பம் இல்லை. ஆணும் பெண்ணும் என்ற உறவு மாயையின் மாயத் தோற்றம். ஶ்ரீ கிருஷ்ணரே அனைவரின் உண்மையான கணவர்.“

இந்த தெய்வீக உபதேசங்களை வழங்கிய பிறகு, ஶ்ரீ கௌரசுந்தரர் விஷ்ணுப்பிரியா தேவிக்கு தனது நான்கு கர (நாராயண) வடிவத்தை வெளிப்படுத்தினார். இதைப் பார்த்த விஷ்ணுப்பிரியா தேவியின் துயரம் மறைந்து மகிழ்ச்சி அடைந்தார். அவர் பகவானின் பாதங்களில் விழுந்து, “பிரபு, உங்களை என் கணவராக எண்ணிய என் அறியாமையை மன்னியுங்கள். உங்களின் சேவை இல்லாமல் நான் அழிந்து விடுவேன்,” என்று கூறினார்.

இறுதியாக பகவானின் , “நான் எங்கு சென்றாலும், நான் எப்போதும் உங்கள் இடத்தில் இருப்பேன்,” என்று உறுதியளித்தார்.


லோசன தாச தாகூரின் பாடல் (பரம கருண)

லோசன தாச தாகூர் ஶ்ரீ கௌராங்கர் மற்றும் நித்யானந்தரின் மகிமைகளை பின்வரும் அழகான பாடலில் பாடுகிறார்:

பரம கருண பஹுங் துய் ஜன
நிதாய் கௌரச்சந்திர
சப அவதார, சார சிரோமணி
கேவல ஆனந்த கந்த

பஜ பஜ பாய், சைதன்ய நிதாய்
சுத்ரிட விஸ்வாச கோரி
விஷய சாரியா சே ரஸே மஜியா
முக போலோ ஹரி ஹரி

தேகோ ஓரே பாய், த்ரிபுவனே நாய்
எமோன தயாள தாதா
பசு-பகி ஜூரே, பாஷாண விதோரே
சுனி யார் குண காதா

சம்சாரே மஜியா, ரஹிலே பரியா
சே பதே நஹிலோ ஆஷா
ஆபன கோரோம, புஞ்ஜாயே சமன,
கோஹோயே லோசன தாஸ

பாடலின் பொருள் மற்றும் ஶ்ரீல பிரபுபாதரின் விளக்கம்: “நிதாய் மற்றும் கௌரச்சந்திரர் ஆகிய இருவரும் மிகவும் கருணையுள்ளவர்கள். அவர்கள் எல்லா அவதாரங்களுக்கும் சாரம் போன்றவர்கள். அவர்களின் வழிமுறை வெறுமனே மகிழ்ச்சியானது – பாடுவது மற்றும் நடனமாடுவது. லோசன தாசர் வேண்டுகோள் விடுக்கிறார்: ‘என் அன்புச் சகோதரனே, உறுதியான நம்பிக்கையுடன் சைதன்யரையும் நித்யானந்தரையும் வழிபடுங்கள்.’ புலன் இன்பத்தை கைவிட்டு, ‘ஹரி! ஹரி!’ என்று சொல்வதில் மூழ்கிவிடுங்கள்.

மூவுலகிலும் இவர்களைப் போல கருணையுள்ளவர்கள் யாரும் இல்லை. இவர்களின் நாமத்தைக் கேட்டால் பறவைகளும் விலங்குகளும் கூட அழுகின்றன, கற்களும் உருகுகின்றன. ஜார்கண்ட் காட்டில் விலங்குகள் கூட ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபித்தன. ஆனால் லோசன தாச தாகூர், தான் மட்டும் புலன் இன்பத்தில் சிக்கி, இந்த அரிய வாய்ப்பை இழந்துவிட்டதாக வருந்துகிறார்.”

Sri Lochana Dasa Thakura tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.