Wednesday, October 16

Prayers of Citraketu Maharaj (Tamil) / சித்ரகேதுவின் பிரார்த்தனைகள்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீமத்-பாகவதம்
காண்டம் 6 / அத்தியாயம் 16 / பதம் 34-48


பதம் 34

சித்ரகேதுர் உவாச

அஜித ஜித: ஸம-மதிபி:
ஸாதுபிர் பவான் ஜதாத்மபிர் பவதா
விஜிதாஸ் தே ‘பி ச பஜதாம்
அகாமாத்மனாம் ய ஆத்மதோ ‘தி-கருண:

மொழிபெயர்ப்பு

சித்ரகேது கூறினார்: வெல்லுதற்கரிய பகவானே, உங்களை யாராலும் வெல்ல முடியாது என்றபோதிலும், தங்கள் புலன்களையும் மனதையும் அடக்கிய பக்தர்களால் நீங்கள் வெற்றி கொள்ளப்படுகிறீர்கள் என்பதில் ஐயமில்லை. உங்களிடமிருந்து எந்த பௌதிக ஆதாயத்தையும் எதிர்ப்பார்க்காத பக்தர்களிடம் நீங்கள் காரணமற்ற கருணை காட்டுகிறீர் என்பதால், அவர்களால் உங்களைத் தங்களது கட்டுபாட்டில் வைத்திருக்க முடிகிறது. உண்மையில் நீங்கள் உங்களையே அவர்களுக்குக் கொடுத்து விடுகிறீர்கள். இதனால் உங்களுக்கும் உங்களுடைய பக்தர்களிடம் முழு ஆதிக்கம் உள்ளது.

பதம் 35

தச விபவ: கலு பகவன்
ஜகத்-உதய-ஸ்திதி-லயாதீனி
விஸ்வ-ஸ்ருஜஸ் தே ‘ம்சாம்சாஸ்
தத்ர ம்ருஷா ஸ்பர்தந்தி ப்ருதக் அபிமத்யா

மொழிபெயர்ப்பு

பகவானே, இப்பிரபஞ்சத் தோற்றமும், அதன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவையும் உங்களுடைய விபூதிகளேயாகும். பிரம்மதேவரும், மற்ற சிருஷ்டிக்கர்த்தாக்களும் உங்களுடைய ஓர் அம்சத்தின் சிறு அம்சங்களேயன்றி வேறில்லை. அவர்கள் பெற்றுள்ள பூரணமற்ற படைப்புச் சக்தி அவர்களைக் கடவுளாக (ஈஸ்வரர்) ஆக்காது. எனவே தங்களைத் தனித்தனி கடவுள்களாக நினைக்கும் அவர்களுடைய உணர்வு உண்மையில் வீண் கௌரவமாகும். அது செல்லத்தக்கதல்ல.

பதம் 36

பரமாணு-பரம-மஹதோஸ்
த்வம் ஆதி-அந்தாந்தர-வர்த்தீ த்ரய-விதுர:
ஆதாவ் அந்தே ‘பி ச ஸத்வானாம்
யத் த்ருவம் தத் ஏவாந்தராலே ‘பி

மொழிபெயர்ப்பு

பிரபஞ்ச தோற்றத்தின் மிகச் சிறிய பொருளான அணுவிலிருந்து, பிரம்மாண்டமான பிரபஞ்சங்கள் மற்றும் மொத்த பௌதிக சக்தி வரையுள்ள அனைத்திலும் தாங்களே ஆரம்பமாகவும், நடுவாகவும், முடிவாகவும் இருக்கிறீர்கள். இருப்பினும் ஆரம்பமோ, நடுவோ, அல்லது முடிவோ இல்லாதவர் என்பதால் நீங்கள் நித்தியமானவராவீர். இம்மூன்று கால கட்டங்களிலும் இருப்பராக நீங்கள் உணரப்படுகிறீர்கள். எனவே தாங்கள் நிலையானவராவீர். பிரபஞ்ச தோற்றம் இல்லாதபொழுதும், ஆதி சக்தியாக நீங்கள் இருக்கிறீர்கள்.

பதம் 37

க்ஷிதி-ஆதிபிர் ஏஷ கிலாவ்ருத:
ஸப்தபிர் தச-குணோத்தரைர் அண்ட-கோச:
யத்ர பததி அணு-கல்ப:
ஸஹாண்ட-கோடி-கோடிபிஸ் தத் அனந்த:

மொழிபெயர்ப்பு

ஒவ்வொரு பிரபஞ்சமும் மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மொத்த சக்தி மற்றும் பொய் அகங்காரம் ஆகிய ஏழு அடுக்குகளால் மூடப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் முந்தியதைவிட பத்து மடங்கு பெரியதாகும். இந்த பிரபஞ்சத்தைத் தவிர இன்னும் எண்ணற்ற பிரபஞ்சங்கள் உள்ளன. அவை எல்லையற்ற அளவுடையவை என்றாலும், சிறிய அணுக்களைப் போல் உங்களுக்குள் சஞ்சரிக்கின்றன. எனவேதான் நீங்கள் எல்லையற்றவர் (அனந்தர்) என்று அழைக்கப்படுகிறீர்கள்.

பதம் 38

விஷய-த்ருஷோ நர-பசவோ
ய உபாஸதே விபூதிர் ந பரம் த்வாம்
தேஷாம் ஆசிஷ ஈச
தத் அனு வினஸ்யந்தி யதா ராஜ-குலம்

மொழிபெயர்ப்பு

பகவானே, பரமபுருஷரே, புலன் நுகர்வில் தீவிர வேட்கை கொண்டவர்களும், பல்வேறு தேவர்களை வழிபடுபவர்களுமான புத்தியற்ற மனிதர்கள், மனித ரூபத்திலுள்ள மிருகங்களைவிட எவ்விதத்திலும் சிறந்தவர்களல்ல. மிருக சுபாவத்தின் காரணத்தினால் அவர்கள் உங்களை வழிபடத் தவறி விடுகின்றனர். அதற்குப் பதிலாக, உங்களுடைய பெருமைகளின் சிறு பொறிகளான அற்ப தேவர்களை அவர்கள் வழிபடுகின்றனர். முழு பிரபஞ்சத்துடன் தேவர்களும் அழிந்துவிடும் பொழுது, அவர்களிடமிருந்து பெறப்பட்ட வரங்களும் அழிந்துவிடுகின்றன. அது, பதவியில் இல்லாத ஓர் அரசரின் பெருந்தன்மையைப் போலாகும்.

பதம் 39

காம-தியஸ் த்வயி ரசிதா
ந பரம ரோஹந்தி யதா கரம்ப-பீஜானி
ஞானாத்மனி அகுணமயே
குண-குணதோ ‘ஸ்ய த்வந்வ-ஜாலானி

மொழிபெயர்ப்பு

பரமபுருஷரே, புலன் நுகர்வுக்குரிய பௌதிக ஆசைகளால் ஆக்கிரமிக்கப்பட்டவன், சகல ஞானத்திற்கும் பிறப்பிடமும், பௌதிக குணங்களுக்கு மேற்பட்டவருமான உங்களை வழிபடுவானாயின் அவன், எப்படி மலடாக்கப்பட்ட அல்லது வறுக்கப்பட்ட விதைகள் முளைப்பதில்லையோ அப்படியே பௌதிக மறுபிறப்பிற்கு உட்படுவதில்லை. ஜீவராசிகள் ஜடஇயற்கையால் பந்தப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் பிறப்பு, இறப்பெனும் தொடர்ச்சிக்கு உட்பட்டுள்ளனர். ஆனால் நீங்கள் உன்னதமானவர் என்பதால், உன்னதமான முறையில் உங்களுடைய சகவாசம் கொள்ளும் நாட்டமுள்ளவர்கள் ஜட இயற்கையின் கட்டுப்பாடுகளிலிருந்து தப்புகின்றனர்.

பதம் 40

ஜிதம் அஜித ததா பவதா
யதாஹ பாகவதம் தர்மம் அனவத்யம்
நிஷ்கிஞ்சனா யே முனய
ஆத்மாராமா யம் உபாஸதே ‘பவர்காய

மொழிபெயர்ப்பு

வெல்லப்பட முடியாதவரே, உங்களுடைய தாமரைப் பாதங்களில் தஞ்சமடைவதற்குரிய களங்கமற்ற சமய முறையான பாகவத தர்மத்தை நீங்கள் பேசியபொழுது அதுவே உங்களுடைய வெற்றியாக அமைந்தது. பௌதிக ஆசைகள் இல்லாதவர்களும், தன்நிறைவுடைய முனிவர்களுமான குமாரர்களைப் போன்றவர்கள், பௌதிக களங்கத்திலிருந்து விடுபட உங்களை வழிபடுகின்றனர். அதாவது, உங்களுடைய திருவடித் தாமரைகளில் தஞ்சமடைய பாகவத தர்மம் என்ற முறையை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்

பதம் 41

விஷம-மதிர் ந யத்ர ந்ருணாம்
த்வம் அஹம் இதி மம தவேதி சயத் அன்யத்ர
விஷம-தியா ரசிதோ ய:
ஸ ஹி அவிசுத்த: க்ஷயிஷ்ணுர் அதர்ம-பஹுல:

மொழிபெயர்ப்பு

பாகவத-தர்மத்தைத் தவிர மற்றெல்லா வகையான சமய முறைகளும் முரண்பாடுகள் நிறைந்தவையாக இருப்பதால், அவை கர்ம-பலனை எதிர்பார்க்கும் எண்ணத்துடனும், “நீ, நான்” மற்றும் “உன்னுடையது, என்னுடையது” என்ற வேறுபாடுகளுடனும் செயற்படுகின்றன. ஸ்ரீமத் பாகவதத்தைப் பின்பற்றுவோருக்கு அத்தகைய எண்ணம் கிடையாது. அவர்கள் தங்களை கிருஷ்ணருக்குச் சொந்தமானவர்கள் என்ற எண்ணத்துடனும், கிருஷ்ணர் தங்களுக்குச் சொந்தமானவர் என்ற எண்ணத்துடனும் கிருஷ்ண உணர்வில் நிலைபெற்றுள்ளனர். தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த மற்ற சமய முறைகளும் உள்ளன. அவற்றில் எதிரியைக் கொல்வதற்கும் யோக சக்திகளைப் பெறுவதற்கும் இடமுண்டு. ஆனால் அத்தகைய சமய முறைகள் தீவிர உணர்ச்சியும், பொறாமையும் நிறைந்தவை என்பதால், அவை தூய்மையற்றவையும், நிலையற்றவையுமாகும். பொறாமை நிறைந்துள்ள காரணத்தால் அவற்றில் அதர்மமும் நிறைந்துள்ளது.

பதம் 42

க: க்ஷேமோ நிஜ-பரயோ:
கியான் வார்த: ஸ்வ-பர-த்ருஹா தர்மேண
ஸ்வ-த்ரோஹாத் தவ கோப:
பர-ஸம்பீடயா ச ததாதர்ம:

மொழிபெயர்ப்பு

தன்னிடமும், மற்றவர்களிடமும் பொறாமையை உண்டாக்கக் கூடிய ஒரு சமய முறையானது எவ்வாறு தனக்கும், மற்றவர்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்க முடியும்? இத்தகைய ஒரு முறையைப் பின்பற்றுவதில் என்ன நன்மை உள்ளது? உண்மையில் இந்த முறையினால் அடையப்பட வேண்டியதுதான் என்ன? சுயப் பொறாமையின் காரணத்தால் துன்பம் இழைப்பதானது உங்களுடைய கோபத்தைத் தூண்டுவதாக உள்ளது. இவ்வாறாக அவன் அதர்மத்தைச் செய்பவனாகிறான்.

பதம் 43

ந வ்யபிசரதி தவேக்ஷா
யயா ஹி அபிஹதோ பாகவதோ தர்ம:
ஸ்திர-சர-ஸத்வ-கதம்பஷு
அப்ருதக்-தியோ யம் உபாஸதே து ஆர்யா:
.

மொழிபெயர்ப்பு

பகவானே, உங்களுடைய கண்ணோட்டத்திற்கேற்ப ஸ்ரீமத் பாகவதத்திலும், பகவத்கீதையிலும் ஒருவனது வர்ணாஸ்ரம கடமை உபதேசிக்கப்பட்டுள்ளது. அது வாழ்வின் உயர்ந்த இலட்சியத்திலிருந்து விலகுவதேயில்லை. எவர்கள் உங்களுடைய மேற்பார்வையின் கீழ் தங்களுடைய வர்ணாஸ்ரம கடமைகளைப் பின்பற்றி, அசைவன, அசையாதன ஆகிய அனைத்து ஜீவராசிகளிடமும் சமமாக நடந்து கொண்டு, அவைகளுக்கிடையில் உயர்வு, தாழ்வு பாராட்டுவதில்லையோ அவர்களே ஆரியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இத்தகைய ஆரியர்கள் பரமபுருஷராகிய உங்களை வழிபடுகின்றனர்.

பதம் 44

ந ஹி பகவன் அகடிதம் இதம்
த்வத்-தர்சனான் ந்ருணாம் அகில-பாப-க்ஷய:
யன்-நாம ஸக்ருச் ச்ரவணாத்
புக்கசோ ‘பி விமுச்யதே ஸம்ஸாராத்

மொழிபெயர்ப்பு

பகவானே, உங்களுடைய தரிசனத்தால் எல்லா பௌதிக களங்கத்திலிருந்தும் விடுபடுவது ஒருவனுக்குச் சாத்தியமாகிறது. உங்களுடைய நேரடியான தரிசனத்தைப் பற்றி சொல்வானேன், ஒரே ஒரு தடவை உங்களுடைய புனித நாமத்தைக் கேட்பதால் மனிதரில் கடைப்பட்ட சண்டாளர்கள் கூட எல்லா பௌதிக களங்கத்திலிருந்தும் விடுபடுகின்றனர். இந்த நிலையில், உங்களை தரிசிப்பதாலேயே பௌதிக களங்கத்திலிருந்து யார்தான் விடுபட மாட்டார்?

பதம் 45

அத பகவன் வயம் அதுனா
த்வத்-அவலோக-பரிம்ருஷ்டாவய-மலா:
ஸுர-ரிஷிணா யத் கதிதம்
தாவகேன கதம் அன்யதா பவதி

மொழிபெயர்ப்பு

ஆகவே பகவானே, உங்களை தரிசித்ததாலேயே, என் மனதையும் இதயத்தையும் எப்பொழுதும் ஆக்கிரமித்திருந்த பாவச் செயல்களும், மற்றும் அவற்றின் பலன்களான பௌதிகப் பற்று, காம இச்சைகள் ஆகியவற்றின் எல்லாக் களங்கமும் இப்பொழுது துடைக்கப்பட்டுவிட்டன. மாமுனிவரான நாரதரால் எது முன்பே கூறப்பட்டதோ, அது ஒருபோதும் பொய்க்காது. அதாவது, நாரத முனிவரால் பயிற்றுவிக்கப்பட்டதன் பலனாக உங்களுடைய தரிசனத்தை நான் பெற்றேன்.

பதம் 46

விதிதம் அனந்த ஸமஸ்தம்
தவ ஜகத்-ஆத்மனோ ஜனைர் இஹாசரிதம்
விக்ஞாப்யம் பரம-குரோ:
கியத் இவ ஸவிதுர் இவ கத்யோதை:

மொழிபெயர்ப்பு

எல்லையற்ற பரமபுருஷரே, நீங்கள் பரமாத்மா என்பதால், இந்த ஜட உலகில் ஒரு ஜீவராசி செய்வதையெல்லாம் நீங்கள் நன்றாக அறிவீர்கள். சூரியனின் முன்னிலையில், அது மின்மினிப் பூச்சியின் ஒளியால் எதுவும் புலப்படுவதில்லை. அதுபோலவே, நீங்கள் அனைத்தையும் அறிந்தவர் என்பதால், உங்கள் முன்னிலையில் என்னால் அறிவிக்கப்பட வேண்டியது எதுவுமில்லை.

பதம் 47

நமஸ் துப்யம் பகவதே ஸகல-ஜகத்-ஸ்திதி-லயோதயேசாய
துரவஸிதாத்ம-கதயே குயோகினாம் பிதா பரமஹம்ஸாய

மொழிபெயர்ப்பு

பகவானே, பிரபஞ்ச தோற்றத்தைப் படைத்து, காத்து, அழிப்பவர் தாங்களே. ஆனால் பௌதிகத்தில் ஆழ்ந்தவர்களும், பிரிவையே எப்பொழுதும் பார்ப்பவர்களுமான மனிதர்களுக்கு உங்களை தரிசிப்பதற்குரிய கண்கள் இல்லை. உங்களுடைய உண்மையான நிலையை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. எனவே, பிரபஞ்ச தோற்றம் உங்களுடைய ஆட்சிக்கு உட்படாதது என்று அவர்கள் முடிவு செய்கின்றனர். பகவானே நீங்கள் பரிசுத்தமானவர். ஆறு ஐசுவரியங்களையும் பூரணமாகப் பெற்றவர். ஆகவே உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

பதம் 48

யம் வை ஸ்வஸந்தம் அனு விஸ்வ-ஸ்ருஜ: ஸ்வஸந்தி
யம் சேகிதானம் அனு சித்தய உச்சகந்தி
பூ-மண்டலம் ஸர்ஷபாயதி யஸ்ய மூர்த்னி
தஸ்மை ந மோ பகவதே ‘ஸ்து ஸஹஸ்ர-மூர்த்னே

மொழிபெயர்ப்பு

பகவானே, உங்களுடைய முயற்சிக்குப் பிறகுதான் பிரம்மதேவரும், இந்திரனும், மற்ற பிரபஞ்ச நிர்வாகிகளும் தங்கள் செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆகின்றனர். பகவானே, பௌதிக சக்தியை நீங்கள் உணர்ந்த பிறகே புலன்கள் அவற்றை உணரத் துவங்குகின்றன. பரமபுருஷர் எல்லாப் பிரபஞ்சங்களையும் கடுகுகளைப்போல் தமது தலைகளின்மேல் தாங்கிக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு, ஆயிரக்கணக்கான தலைகளுடைய பரமபுருஷருக்கு, எனது பணிவான வணக்கங்கள்.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question