குருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணரால் அர்ஜுனருக்கு கீதை சொல்லப்பட்ட நாள் இது என்பது மோக்ஷத ஏகாதசிக்கு மற்றொரு சிறப்பு.
மார்கழி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசியின் மகிமையை விளக்குமாறு கிருஷ்ணரை வேண்டுகிறார் யுதிஷ்டிரர். அந்த ஆர்வமே பாவங்களைப் போக்கி மோக்ஷம் தரவல்லது என்கிறார் கிருஷ்ணர்.
இப்புனித நாளில் தூபம், நெய் தீபம், நறு மலர்கள், மற்றும் துளசி மஞ்சரிகளைக் கொண்டு தாமோதரரை வணங்குதல் வேண்டும்.
இதன் மகத்துவத்தைக் கேட்போரது இறந்துபோன மூதாதையர் நரகத்திற்குச் சென்றோராயினும் மீண்டு சுவர்கலோகம் செல்வர்.
சம்பக நகரம் எனும் அழகிய நகரை வைக்காணசா என்னும் ஒரு பக்தி நிறைந்த மன்னன் ஆண்டு வந்தான். இறந்து போன அவன் தந்தை நரகத்தில் மிகுந்த வேதனை அனுபவிப்பதுபோல் அவனுக்கு ஒரு நாள் கனவு வந்தது. துக்கத்தால் நெகிழ்ந்து போன மன்னன் தன் ஆலோசகர்களான அந்தணர்களிடம் கூறி என்ன செய்தால் தன் தந்தைக்கு நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்று வினவினான்.
மலைமேல் அமையப் பெற்ற ஆஷ்ரமத்தில் குடிகொண்டுள்ள முக்காலம் உணர்ந்த பர்வத முனியே தங்கள் துயர்களைய வல்லவர் என அவர்கள் மன்னனை அங்கே அனுப்பினர்.
அவரை வணங்கிய மன்னனிடம் முனிவர் கேட்டார், “ உன் நாடும் மக்களும் நலமா ?” என்று “அனைத்தும் நலமே சுவாமி, சமீப காலமாக ஒரு கவலை என்னை வாட்டுகிறது, அதிலிருந்து விடை பெறவே அந்தணர்கள் என்னை இங்கே அனுப்பினர்” என்று மன்னன் கூறினான். கண்களை மூடி மன்னனின் முக்காலமும் பற்றி த்யானம் செய்த முனிவர், பின்வருமாறு கூறினார்: “உன் தந்தை தன் மனைவியிடம் பூசல் கொண்டு அவள் மாத விடாயின் போது அவள் மிகவும் மறுத்தும், அழுதும் விடாமல் வலுக்கட்டாயமாக உடல் உறவு கொண்டு அவளைச் சித்ரவதை செய்தார். அந்தப் பாவமே அவரை நரகத்திற்குத் தள்ளிப் படாத பாடு படுத்துகிறது.”
“முனிவர்களில் சிறந்தவரே! அவரை அந்நரகத்தில் இருந்து விடுவித்து மோக்ஷம் அடையச் செய்வது எப்படி ? என்று மன்னன் வினவினான்.
“மார்கழி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் மோக்ஷத ஏகாதசி அன்று முழு விரதம் மேற்கொண்டு அதன் பலனை உன் தந்தைக்கு வழங்குவாயானால் அவர் அந்த நரக வேதனையில் இருந்து விடுபட்டு மேல் லோகம் அடைந்து மோக்ஷம் பெற வாய்ப்புள்ளது.” என்று முனிவர் கூறினார்.
இதனைக் கேட்டுக்கொண்ட மன்னன் தன் நகர் வந்து மோக்ஷத ஏகாதசி அன்று ஒழுங்கான முறையில் விரதம் மேற்கொண்டான். தன் மனைவி குழந்தைகளையும் விரதம் மேற்கொள்ளச் செய்தான். பின் அதன் பலனை முறையே தந்தைக்கு அளித்தான். அதனைக் கண்ட தேவதூதர்கள் அவனைப் போற்றி அவன் தந்தையைக் கீழ் லோகத்தில் இருந்து மேல் லோகத்திற்கு உரிய மரியாதையுடன் அழைத்துசென்றனர். அங்கே அவர் விஷ்ணு ஸ்மரணம் செய்து மோக்ஷம் பெரும் முயற்சியில் ஈடுபட்டார்.
இந்நாளில் விரதம் மேற்கொண்டோர் மோக்ஷம் அடைதல் உறுதி. பாவம் அற்ற தூய நாள் இது. அளவிடற்கரிய பலன் நிறைந்த சிந்தாமணி போன்றது மோக்ஷத ஏகாதசி விரதம். பாபம் அற்றவர் இவ்விரதம் மேற்கொண்டால், மறுபிறப்பு அற்ற மோக்ஷம் அடைவர்’ இவ்வாறு யுதிஷ்டிரரிடம் விளக்கினார் கிருஷ்ணர்.
பிரம்மாண்ட புராணம் கூறும் மோக்ஷத ஏகாதசி மகிமை முற்றிற்று.
குருக்ஷேத்திரப் போர் மோக்ஷத ஏகாதசி நாளன்று துவங்கியது. அன்றுதான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்தார். ஒவ்வொரு வருடமும் அந்நாள், பகவத் கீதை தோன்றிய நாளாக, குருக்ஷேத்திரத்திலும் பாரதத்தின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகிறது
மார்கழி மாதம் வளர்பிறையில் தோன்றக்கூடிய இந்த மோக்ஷத ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை யுதிஸ்டிரர், பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். என்அன்பு கிருஷ்ணா, மார்கழி மாதம் வளர்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? மேலும் இந்த ஏகாதசியை அனுஷ்டிக்கும் வழிமுறைகளைப் பற்றி தயவு செய்து விவரமாக எனக்கு கூறுங்கள்.
பகவான் கிருஷ்ணர் கூறினார், ஓ! மன்னர்களில் சிறந்தோனே! இந்த ஏகாதசியின் பெயர் மோக்ஷத ஏகாதசி இந்த ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளையும் அழிக்கிறது. இந்த ஏகாதசியன்று ஒருவர் துளசி மொட்டுகளால் முழு முதற்கடவுளை வழிபட்டால், பகவான் மிகவும் மகிழ்ச்சியடைவார். இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவர் வாஜ்பேய யாகத்தின் பலனை அடைவார்.
வைகானசா என்ற ஒரு மன்னர் சம்பகா என்ற நகரத்தில் வசித்து ஆண்டு வந்தார். அவர் தன் பிரஜைகளுடன் மிக அன்பாக இருந்தார். அவரின் இராஜ்ஜியத்தில் வேதங்களை நன்கு கற்றறிந்த தகுதி வாய்ந்த அந்தணர்கள் பலர் வசித்து வந்தனர்.
ஒருநாள் அந்த மன்னர் ஒரு கனவு கண்டார். அதில் தன் தந்தை நரகத்தில் விழுந்து பற்பல இன்னல்களுக்கு ஆளாகியிருப்பதைக் கண்டார். இதனைக் கண்டவுடன் மன்னர் ஆச்சர்யத்தில் திகைத்தார். மறுநாள் கற்றறிந்த அந்தணர்களின் சபையில் மன்னர் தன் கனவில் கண்டதை வெளிப்படுத்தினார். நரகத்திலிருந்து தன்னை விடுவிக்குமாறு தன் தந்தை தன்னிடம் வேண்டியதையும் மன்னர் எடுத்துரைத்தார்.
கனவு கண்ட நாளில் இருந்து மன்னர் நிம்மதியற்றிருந்தார். ஆட்சி புரிவதில் விருப்பமோ, மகிழ்ச்சியோ அவரால் உணர முடியவில்லை. அவர் தன் குடும்ப உறுப்பினர்களிடத்திலும் சற்று வித்தியாசமாக நடந்து கொண்டார். தன் தந்தை நரகத்தில் துன்புற்று இருந்தால், தன் வாழ்க்கை இராஜ்ஜியம், செல்வம், பலம் மற்றும் ஒரு மகனின் செல்வாக்கு ஆகிய அனைத்தும் பயனற்றதே என எண்ணினார். ஆகையால், அனைத்து கற்றிந்த அந்தணர்களிடத்திலும் பரிதாபமாக வேண்டினார். தயவுசெய்து என் தந்தையை நரகத்தின் பிடியில் இருந்து விடுவிப்பதற்கான வழிமுறையைக் கூறுங்கள்.
இந்த வேண்டுகோளைக் கேட்ட அந்தணர்கள் கூறினார், ஓ! மன்னா, பர்வத முனிவரின் ஆசிரமம் அருகிலேயே உள்ளது. அவர் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தையும் அறிந்தவர். ஆகையால் நீங்கள் கனவில் கண்டதை அவரிடம் கூறுங்கள். அந்தணர்களின் ஆலோசனையைக் கேட்ட வைகானசா மன்னர், அந்தணர்கள் மற்றும் தன் சகாக்களுடன் பர்வத முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றார்.
தன் இராஜ்ஜியத்தின் நலனை விசாரித்த பர்வத முனிவரிடம் வைகானசா மன்னர் கூறினார், ஓ! எனது பகவானே! உங்களுடைய கருணையால் நாங்கள் அனைவரும் நலம். ஆனால் இராஜ்ஜியமும் செல்வமும் இருப்பினும், நான் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறேன். உண்மையில் என் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது, அதனை நிவர்த்தி செய்வதற்காக நான் உமது கமல பாதங்களை அடைந்துள்ளேன்.
மன்னரிடம் நிகழ்ந்தவை அனைத்தையும் கேட்ட பர்வத முனிவர் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு முனிவர் தியானத்தில் இருந்து வெளியேறி மன்னரிடம் கூறினார். எனதருமை மன்னா, உன் தந்தை தன் முற்பிறவியில் அதிகமாக காம இச்சை கொண்டிருந்ததால் அவரே தன்னை இந்த நிலைக்கு தாழ்த்திக் கொண்டார். இப்பொழுது நீங்கள் அனைவரும் மார்கழி மாதம் வளர்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து அதன் பலனால் உன் தந்தை நரக வாழ்க்கையின் பிடியில் இருந்து விடுபடுவார்.
பர்வத முனிவரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு மன்னர் தன் பரிவாரத்துடன் அரண்மனைக்குத் திரும்பினார். அதன் பிறகு, மன்னர், தன் மனைவி, பிள்ளைகள் மற்றும் உதவியாளர்களுடன் மார்கழி மாதம் வளர்பிறையில் தோன்றக்கூடிய இந்த ஏகாதசியை அனுஷ்டித்து அதன் மொத்த பலனையும் துன்பத்திற்காளான தன் தந்தைக்கு அர்ப்பணித்தார்.
அதன் விளைவாக தன் தந்தை சுவர்க்க லோகத்தை அடைந்து மன்னரை வெகுவாக வாழ்த்தினார். ஓ! மன்னா, இந்த மோக்ஷத ஏகாதசியை சரியான முறையில் அனுஷ்டிப்பவர் தன் அனைத்து பாவ விளைவுகளில் இருந்தும் நிச்சயமாக விடுபடுவார்.
விரதம் அனுசரிக்கும் முறை
Lord krishna knows all