ஞான யோகம், கலியுகத்தில் மிகக்கடினமானது !
ஸ்ரீமத் பாகவதம் 1.1.10, “கலியுகத்தில் மக்கள் மந்த புத்தியுள்ளவர்களாகவும், தவறான பாதையில் செலுத்தப்பட்டு பாக்கியமற்றவர்களாகவும், மேலும் குழப்பமானவர்களாகவும் உள்ளனர்” என்று குறிப்பிடுகிறது.
அதாவது கலியுகத்தில் உலக வாழ்க்கை அறிவை விருத்தி செய்து கொள்வதே கடினமாக இருக்கும் பொழுது, ஞான மார்க்கத்தில் செல்வதைப் பற்றி நினைக்கவே வழியில்லை. ஞானமார்க்கத்திற்கு மிக உயர்ந்த, தரமான, குழப்பமற்ற புத்தியும், தெளிவான மன்மும் வேண்டும். கலியுகத்தில் இவை சாத்தியமல்ல. மேலும் ஞானமார்க்கத்திற்கு வேண்டிய, வேத ஞானத்தை தவறின்றி தரக் கூடிய தகுதியான குருவும், கலியுகத்தில் கிடைப்பது கடினம்.
ஞானயோகத்திலும் ஜப யோகம் உயர்வானதா ?
ஆம். ஞான யோகம் பக்தி யோகத்தின் ஒரு படியே. பகவத்கீதை 7.19, “பற்பல பிறவிகளுக்குப் பின், ஞானியும், ஸர்வமும் வாசுதேவன் என்று சரணடைகிறான்” என்று குறிப்பிடுவது. ஞானி இறுதியில் வந்தடைய வேண்டிய இடம், பகவான் நாமம் கூறி பக்தி செயவதே என்பதை உறுதிப்படுத்துகிறது.
பிரம்மாவின் நாங்கு குமாரர்களான சனகர், சனாதனர், சனந்தர், சனத்குமாரர் ஆகிய நால்வரும், நவயோகேந்திரர்களும் மற்ற சுகரிஷியும் ஆரம்பத்தில் ஞான யோகிகளாக இருந்தனர். ஆனால் இறுதியில் பக்தியோகிகளாக மாறி வாழ்வின் பரிபூர்ண நிலையை அடைந்தனர். ஆனால் பக்தியோகிகள், ஞானிகளாக மாறிய வரலாறு இல்லை. ஞான யோகமானது, பக்தி யோகத்திற்கு முந்தைய படியாகும்.