Tuesday, November 19

Damodar (Kartik) Month (Tamil) / தாமோதர மாதம்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

17 அக்டோபர் முதல் 15 நவம்பர் வரை, 2024

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வெண்ணை திருடியதற்க்காக அன்னை யசோதை உரலில்
கட்டியதால், அவருக்கு “தாமோதரர்” என்று பெயர் வந்தது.

“தாம்” என்றால் “கயிறு “
“உதரா” என்றால் ‘வயிறு


இந்த மாதத்தில் யாரொருவர் தாமோதரருக்கு திருவிளக்கு ஏற்றி “தாமோதரஷ்டகம்” பாடி வழிபடுகின்றாரோ, அவர் பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர் ஆவார்.

Yashada Damaodar Damodarashtakam Tamil ISKCON Tamil Songs 1

தாங்கள் வைத்துள்ள தாமோதர பகவானை (படத்தை) தூய்மையான இடத்தில் வைத்துக் கொள்ளவும், பிறகு நெய்தீபம் ஏற்றி

தாமோதர பகவானின்

பாதம் – 4 முறை
மார்புக்கு – 2 முறை
முகத்திற்கு – 3 முறை
முழுவதும் – 7 முறை

இவ்வாறு தாமோதரருக்கு ஆரத்தி செய்தபின் துளசி இலையை அர்ப்பணிப்பது சாலச்சிறந்தது.

“கார்த்திகை மாதத்தில் தாமோதரரை வழிபட்டு, தாமோதர அஷ்டகம் என்று அறியப்படும் இந்த பாடலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும், சத்யவ்ரத முனிவரால் பேசப்பட்ட இது பகவான் தாமோதரரை கவர்கின்றது.”
– (ஸ்ரீ ஹரி-பத்தி-விலாசம் 2.16.198)


பகவான் தாமோதரரின் லீலை

அன்னை யசோதை கிருஷ்ணரை கயிற்றால் கட்டுதல்

        ஒரு நாள் தன் வேலைக்காரி வெவ்வேறான பணிகளில் ஈடுட்டிருந்ததைக் கண்ட அன்னை யசோதை தயிர்கடையும் பொறுப்பை தானே மேற்கொண்டாள். தயிர்கடையும் போது அவள் கிருஷ்ணரின் பால்ய லீலைகளைப் பற்றிப் பாடிக்கொண்டு அவரைப் பற்றிய எண்ணத்தில் மூழ்கியிருந்தார்

        புடவையின் தலைப்பை இறுக்கமாக அணிந்தபடி அவள் தயிர்கடைந்து கொண்டிருந்தபோது கிருஷ்ணரைப் பற்றிய எண்ணத்தில் மூழ்கியிருந்ததால் தாயன்பு காரணமாக அவளது மார்பிலிருந்து பால் சுரந்தது. அவள் அணிந்திருந்த வளையல்களும், கங்கணங்களும், ஒன்றோடு ஒன்று உரசி இனிய ஒலியை எழுப்பின. காதணிகளும், மார்புகளும், அசைந்தாடின. அவளின் முகத்தில் வியர்வைத் துளிகள் அரும்பின. தலையில் அணிந்திருந்த மலர்கள் அங்குமிங்கும் சிதறின. இவ்வாறு ரம்யமாகக் காட்சியளித்த அன்னை யசோதையின் முன்பு குழந்தை கிருஷ்ணர் வந்தார். அவருக்குப் பசியெடுத்ததால் அவள் தயிர் கடைவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று குறிப்பாகத் தெரிவித்தார். அன்னையிடம் அவர் மிகுந்த அன்பு கொண்டிருந்ததால், முதலில் பாலூட்டிவிட்டுப் பின்பு தயிர்கடைய வேண்டுமென்று அவளிடம் அவரால் உரிமையுடன் கூற முடிந்தது.

        அன்னை யசோதை தன் மகனை மடியில் எடுத்து மார்புக் காம்புகளை அவரின் வாயில் இட்டாள். கிருஷ்ணர் பாலருந்தியபோது அவள் தன் குழந்தையின் முக அழகைக் கண்டு மகிழ்ந்து புன்னகை பூத்தாள். அப்போது அடுப்பில் இட்டிருந்த பால் பொங்கி வழியத் துவங்கியது. பால் சிந்திப் போகாமல் நிறுத்துவதற்காக யசோதை கிருஷ்ணரை அப்புறப்படுத்திவிட்டு அடுப்படிக்குச் சென்றாள். அவ்வாறு அகற்றப்பட்டவுடன் கிருஷ்ணர் சினமடைந்து, அவரின் கண்களும், உதடுகளும் சிவந்தன. பற்களையும் உதடுகளையும் கடித்து அவர் ஒருகல்லை எடுத்து வெண்ணெய் தாழியின் மீது எறிந்து அதை உடைத்தார். அதிலிருந்து வெண்ணெயை எடுத்துக் கொண்டு தனியிடத்திற்குச் சென்று கண்ணில் பொய்யான கண்ணீர் வடித்தபடி வெண்ணெயைத் தின்னத் துவங்கினார்.

        இதற்குள் யசோதை பால் பொங்கிய பாத்திரத்தைச் சரியாக வைத்துவிட்டு தயிர்கடையும் இடத்திற்குத் திரும்பினாள். வெண்ணெய் தாழி உடைந்திருந்ததைக் கண்டாள். மகனை அங்கு காணாததால் பானை உடைந்தது அவன் வேலையாகத்தானிருக்கும் என்று முடிவு செய்தாள். முகத்தில் புன்னகை பூக்க அவள் எண்ணினாள் “குழந்தை மிகவும் சாமர்த்தியம் உள்ளவன், பானையை உடைத்ததற்காகக் கிடைக்கும் தண்டனைக்குப் பயந்து தலைமறைவாகிவிட்டான். “பல இடங்களில் தேடிய பிறகு அவர் குப்புறக் கவிழ்க்கப்பட்ட மர உரலின் மேல் உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். அதில் உட்கார்ந்திருந்தபடி அவர் மேலே உரியில் தொங்கிக் கொண்டிருந்த சட்டியிலிருந்து வெண்ணெய் எடுத்து குரங்குகளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். அம்மா வந்துவிடுவாளோ என்ற பயத்தால் அக்கம், பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படியிருந்த மகனை பின்புறமாகச் சந்தடியின்றி வந்து யசோதை அணுகினார் ஆனால் கிருஷ்ணர் அவள் கையில் கம்புடன் வருவதைக் கண்டுவிட்டார் உடனே பயந்துபோய் உரலிலிருந்து எழுந்து ஓடிவிட்டார்.

        அன்னை யசோதை அவரை மூலைக்கு மூலை துரத்தி பிடிக்க முயற்சித்தாள். ஆனால் யோகத்தில் சிறந்த கடவுளை எட்டிப் பிடிப்பது எப்படி?  அதாவது மகா யோகிகளின் தியானங்களுக்கும் அப்பாற்பட்டவரான முழுமுதற் கடவுள் தன் பெரும் பக்தையான அன்னை யசோதையை மகிழ்விப்பதற்காக அவளுக்குக் குழந்தையாக வந்து அவளுடன் விளையாடினார். மெல்லிய இடையும் பருத்த உடலும் கொண்ட யசோதையால் அவரை துரத்திப் பிடிக்க முடியவில்லை என்றாலும் அவருக்கு ஈடுகொடுத்து வேகமாக ஓட அவள் இயன்றவரை முயற்சித்தாள். அவளின் தலை முடி அவிழ்ந்து அதில் அணிந்திருந்த மலர்கள் சிதறின. களைப்படைந்ததும் ஒருவாறு அந்தப் பொல்லாத சிறுவனைப் பிடித்து விட்டாள். பிடிபட்ட கிருஷ்ணருக்கு அழுகை வரும் போலிருந்தது. அச்சத்தால் அழகுபடுத்தப்பட்டிருந்த தன் கண்களைக் கைகளால் கசக்கிக் கொண்டு. அன்னையின் முகத்தைக் கண்டதும் அவரது கண்கள் பயத்தால் அலை பாய்ந்தன கிருஷ்ணர் அனாவசியமாக பயந்ததைக் கண்ட யசோதை அவரது நலன் கருதி அவரின் பயத்தைப் போக்க எண்ணினார்.

            குழந்தையின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த அன்னை யசோதை “குழந்தை என்னிடம் மிகவும் பயம் கொள்ளத் தொடங்கினால் அதன் விளைவு என்ன ஆகும் ?” என்று எண்ணலானாள் உடனே அவள், கையில் வைத்திருந்த கோலைத் தூர எறிந்துவிட்டு அவரது கைகளைக் கயிற்றால் கட்ட நினைத்தாள். முழுமுதற் கடவுளை கயிற்றால் கட்டுவது சாத்தியமல்லவென்பதை அவள் அறியாள் கிருஷ்ணர் ஒரு சிறு குழந்தை என்று அவள் நினைத்திருந்தாள்.

             ஆனால் அவர் வரம்பிற்குள் அடங்காதவர் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. அவருக்கு உள்ளோ, புறமோ, தொடக்கமோ, முடிவோ, இல்லை அவர் வரம்பற்றவர் எங்கும் நிறைந்தவர் பிரபஞ்சத் தோற்றம் முழுவதும் அவரே. எனினும், கிருஷ்ணர் தன் குழந்தை என்று யசோதை எண்ணியிருந்தாள். அவர் புலன்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருந்தும் மர உரலில் அவரைக் கட்டிப்போட அவள் முயற்சித்தாள். ஆனால் அவரைக் கட்ட முயற்சித்தபோது, கட்டுவதற்கு அவள் பயன்படுத்திய கயிறு அதே அளவிற்குக் குறைவாக இருப்பதைக் கண்டார். இப்படி வீட்டிலிருந்த கயிறுகளையெல்லாம் எடுத்து இணைத்து அவரைக் கட்ட எத்தனித்தபோது, மீண்டும் அதே இரண்டங்குல அளவிற்குக் கயிறு பற்றாமல் போயிற்று அன்னை யசோதைக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் நடந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். இது எவ்வாறு இப்படி நடந்தது ?

        மகனைக் கட்டிப்போட முயற்சித்துத் தோல்வியுற்ற அன்னை யசோதை களைத்துப் போனாள் . அவளுக்கு உடம்பெல்லாம் வியர்த்தது . தலையில் அணிந்திருந்த மலர்மாலை கீழே விழுந்தது. அன்னையின் கடுமையான முயற்சியைக் கண்ட கிருஷ்ணர் அவளிடம் பரிவு கொண்டு கயிற்றால் கட்டப்பட இசைந்தார். யசோதையின் மனையில் மனிதக் குழந்தையாக விளையாடிய கிருஷ்ணர் தேர்ந்தெடுத்த சில லீலைகளைக் செய்து காட்டினார். புருஷோத்தமனாகிய முழுமுதற் கடவுளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. புனிதமான பக்தன் கடவுளிடம் முழுமையாகச் சரணடைந்துவிடுகிறான். அவர் அவனைக் காப்பாற்றலாம் அல்லது அழிக்கலாம். பக்தன் கடவுளின் பாதகமலங்களில் சரணடைந்திருக்க ஒருபோதும் மறப்பதில்லை, அதுபோலவே கடவுளும் பக்தனின் பாதுகாப்பில் தன்னை ஒப்படைப்பதில் பரமான இன்பத்தைக் காண்கிறார். அன்னையாகிய யசோதையின் பாதுகாப்பில் கிருஷ்ணர் தன்னை ஒப்படைத்திருந்ததிலிருந்து இது தெளிவாகிறது .

        கிருஷ்ணர் தன் பக்தர்களுக்கு எல்லா வகையான முக்திகளையும் அளிக்க வல்லவர். ஆனால் யசோதைக்கு அவர் அளித்த உயர்வை பிரம்மதேவனுக்கும், சிவபெருமானுக்கும், இலக்குமிக்கும் கூட அளிக்கவில்லை.

         யசோதைக்கும் நந்த மகாராஜாவுக்கும் மகனாகத் தோன்றிய முழுமுதற் கடவுளை யோகியரும், ஆராய்ச்சியாளரும், எளிதில் அறிய முடிவதில்லை. அவர் பரமானந்தத்தின் உன்னத இருப்பிடம் என்பதையும் அவர்கள் உணர்வதில்லை. ஆனால் அவரது பக்தர்கள் அவரை எளிதில் அடைகிறார்கள்.

         மகனைக் கட்டிப்போட்டுவிட்டு அன்னை யசோதை வீட்டு வேலைகளைக் கவனிக்கத் துவங்கினாள், அவ்வாறு மர உரலில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர் தம் முன் இரண்டு அர்ஜுன மரங்கள் நிற்பதைக் கவனித்தார். ஆனந்தத்தின் இருப்பிடமான கிருஷ்ணர் எண்ணினார். “அன்னை யசோதை எனக்குப் போதுமான பால் கொடுக்காமல் விட்டுப் போனதால் தயிர்ப்பாளைகளை உடைத்து வெண்ணெயைக் குரங்குகளுக்குக் கொடுத்தேன். இப்போது அவள் என்னை மர உரலில் கட்டிப் போட்டிருக்கிறாள் . ஆகையால் இப்போது முன்னைவிட அதிகமான குறும்புத்தனம் செய்ய வேண்டும் ” அவர் அவ்விரண்டு அர்ஜுன மரங்களையும் வீழ்த்த தீர்மானித்தார்.

        இந்த இரண்டு அர்ஜுன மரங்களுக்கும் பூர்வ சரித்திரம் உள்ளது, இவை தம் முந்திய பிறவிகளில் குபேரன் என்பவனின் மகன்களாக, நளகூவரன் மணிக்ரீவன் என்ற பெயர்களில் பிறந்திருந்தன. அவர்களின் நல்ல காலம் அவர்கள் பிரபுவாகிய கிருஷ்ணரின் திருஷ்டியில் பட்டார்கள், முந்திய பிறவியில் அவர்கள் கிருஷ்ணரைக் காண்பதான மிகவுயர்ந்த ஆசியைப் பெற வேண்டுமென்று நாரதரால் சபிக்கப்பட்டிருந்தார்கள் . அவர்கள் குடிபோதையில் நினைவிழந்த காரணத்திற்காக இந்த சாபவரம் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது.

சொல்வீர்…

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண
ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

…மகிழ்வீர்

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question