ஐப்பசி மாத வளர்பிறையில் (செப்டம்பர் / அக்டோபர்) தோன்றக் கூடிய பாஸங்குசா ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம – வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! மதுசூதனா, ஐப்பசி மாத வளர்ப்பிறையில் (செப்டம்பர் / அக்டோபர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் சிறப்பையும் தயவு செய்து எனக்கு விளக்குங்கள்.
பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னர்களில் சிறந்தோனே! இந்த ஏகாதசியின் பெயர் பாஸங்குசா ஏகாதசி. ஒருவரின் பாவங்களை அழிக்கக் கூடிய இந்த ஏகாதசியின் பெருமைகளைக் கேள். சிலர் இந்த ஏகாதசியை பாயபங்குஸா ஏகாதசி என்றும் கூறுவர். இந்த ஏகாதசியன்று ஒருவர் விசேஷமாக பத்மநாபரை வணங்க வேண்டும். இந்த ஏகாதசி மேலுலக சுகங்களையும் முக்தியையும் மற்றும் ஒருவர் வேண்டிய பலன்களையும் கொடுக்கிறது. பகவான் விஷ்ணுவின் புனித நாமங்களை ஜெபித்தாலேயே ஒருவர் இந்த மண்ணுலகில் எல்லா புனித தலங்களுக்கும் செல்வதால் அடையும் புண்ணிய பலனை அடைவார். ஒரு கட்டுண்ட ஆத்மா, அறியாமையால் பல்வேறு பாவச் செயல்களில் ஈடுபட்டிருப்பினும் நிலையிழந்த ஆத்மாக்களுக்கு முக்தி அளிக்கக்கூடிய பகவான் ஹரியிடம் சரணடைந்து அவரது தாமரை பாதங்களை வணங்கினான் எனில் அத்தகு ஆத்மா நரகத்திற்கு செல்ல வேண்டியதில்லை.
பகவான் சிவபெருமானை நிந்திக்கும் வைஸ்ணவர்ளும் பகவான் விஷ்ணுவை நிந்திக்கும் சைவர்களும் சந்தேகமின்றி நரகத்திற்குச் செல்வர். ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் (அ) நூறு ராஜசூய யாகங்கள் செய்வதால் அடையும் பலன். இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் அடையும் பலனில் 1/16 பங்கிற்கும் ஈடாகாது. இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதற்கு ஈடான புண்ணியமிகு செயல் இவ்வுலகில் வேறெதுவும் இல்லை. பகவான் பத்மநாபருக்கு பிரியமான இந்த ஏகாதசிக்கு ஈடான புண்ணியமிகு நாள் வேறேதும் இல்லை. ஓ! மன்னா! ஒருவர் ஏகாதசி விரதங்களை அனுஷ்டிக்க தவறியவுடன் தன் உடலில் பாவங்கள் குடிகொள்ள ஆரம்பித்துவிடும். இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பவர் சுவர்க்கலோக இன்பத்தையும், முக்தியையும், நோயில் இருந்து விடுதலையும், செல்வத்தையும் மற்றும் உணவு தானியங்களையும் பெறுவார். ஓர் பூவுலகை காப்போனே! இந்த ஏகாதசியை அனுஷ்டித்து இரவில் விழித்திருப்பவர். எளிதில் விஷ்ணுவின் பரமத்தை அடைவார்.
பகவான் கிருஷ்ணர் தொடர்ந்தார். ஓ! மன்னரில் சிறந்தோனே! இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவர் தன் தாயின் குடும்பத்தில் பத்து தலைமுறைகளுக்கும், தந்தையின் குடும்பத்தில் பத்து தலைமுறைகளுக்கும் மனைவியின் குடும்பத்தில் பத்து தலைமுறைகளுக்கும் முக்தியளிக்க இயலும், ஒருவர் குழந்தை பருவத்திலோ, வாலிப பருவத்திலோ அல்லது முதுமையிலோ இந்த ஏகாதசியை அனுஷ்டித்தால் அவர் ஜட இருப்பின் துன்பங்களால் பாதிக்கப்படமாட்டார். பாஸாங்குசா (அ) பாயாங்குசா ஏகாதசியை சிரத்தையுடன் அனுஷ்டிப்பவர் தன் எல்லா பாவ விளைவுகளில் இருந்து விடுபட்டு இறுதியில் பகவான் விஷ்ணுவின் பரமத்தை அடைவார். தங்கம், எள், நிலம், பசுக்கள், உணவு தானியங்கள், நீர், குடை (அ) காலணிகள் போன்றவற்றை தானமாகக் கொடுப்பவர் யமலோகத்திற்கு செல்ல வேண்டியதில்லை. எந்தவொரு புண்ணிய செயல்களிலும் ஈடுபடாமல் இந்த புனித நாளை கழிப்பவர். சுவாசித்துக் கொண்டிருப்பினும் ஒரு சவத்திற்கு ஒப்பானவரே. அத்தகையவருடைய சுவாசம் கொல்லனிடம் உள்ள காற்றடிக்கும் சாதனத்திற்கு ஒப்பானதே. ஓ! மன்னர்களில் சிறந்தோனே! மற்றவர்களின் நலனுக்காக கிணறு மற்றும் குளங்களை வெட்டுவது நிலம் மற்றும் வீட்டை தானமளிப்பது மற்றும் பல வகையான புண்ணிய செயல்களில் ஈடுபடுபவர் யமராஜனனின் தண்டனைக்கு ஆளாவதில்லை.
ஒருவர் நீண்ட ஆயுள் பெறுவதற்கும், செல்வந்தர் ஆவதற்கும், உயர்குடியில் பிறப்பதற்கும், நோயற்று வாழ்வதற்கும், தான் செய்த புண்ணியங்களே காரணம். கருத்து என்னவெனில் கிருஷ்ணரின் பக்தித் தொண்டை அடைவது இந்த ஏகாதசியின் நேரடி பலன் ஆகும். நிலையற்ற ஜட சுகங்களைப் பெறுவது இந்த ஏகாதசியின் மறைமுக பலனாகும்.
சொல்வீர்…
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
மகிழ்வீர்!