தேஹினோ (அ)ஸ்மின் யதா தேஹே
கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹாந்தர-ப்ராப்திர்
தீரஸ் தத்ர ந முஹ்யதி
Synonyms:
தேஹின: — உடல்பெற்ற; அஸ்மின் — இந்த; யதா — அதனால்; தேஹே — உடலில்; கௌமாரம் — சிறு வயது; யௌவனம் — இளமை; ஜரா — முதுமை; ததா — அதுபோலவே; தேஹ-அந்தர — உடல் மாறுவதும்; ப்ராப்தி:—அடைதல், தீர—நிதான புத்தியுடையவர்; தத்ர — அதைப்பற்றி; ந — என்றுமில்லை; முஹ்யதி — மயங்குதல்.
Translation:
தேகத்தை உடையவனின் உடல், சிறுவயது, இளமை, முதுமை என்று கடந்துசெல்வதைப் போல, ஆத்மா, மரணத்தின் போது வேறு உடலுக்கு மாற்றம் பெறுகின்றது. நிதான புத்தியுடையவர் இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.
Purport:
ஒவ்வொரு உயிர்வாழியும் தனித்தனி ஆத்மா என்பதால், ஒவ்வொருவரும் தனது உடலை ஒவ்வொரு கணமும் மாற்றிக் கொண்டே இருக்கின்றனர். சில நேரங்களில் சிறுவனைப் போலவும் சில நேரங்களில் இளைஞனைப் போலவும் இன்னும் சில நேரங்களில் முதியோனைப் போலவும் அவன் தோன்றுகின்றான். இருப்பினும், ஆத்மா, எவ்வித மாற்றமும் அடையாமல் அப்படியே இருக்கின்றான். அந்த தனி ஆத்மா, இறுதியில் மரணத்தின்போது, உடலை மாற்றி வேறொரு உடலில் புகுகின்றான். அடுத்த பிறவியில் வேறு உடலை அடையப்போவது உறுதி (அவ்வுடல் பௌதிகமாகவோ ஆன்மீகமாகவோ இருக்கலாம்) என்பதால், அர்ஜுனன் தனக்கு பிரியமான துரோணர், பீஷ்மர் போன்றோரின் மரணத்திற்காகக்கூட வருந்தத் தேவையில்லை. மாறாக, அவர்கள் பழைய உடலிருந்து புதிய உடலுக்கு புதிய சக்தியுடன் மாறுவதை (இளமையாவதை) எண்ணி அவன் மகிழவே வேண்டும். இத்தகு உடல் மாற்றங்கள், தனது வாழ்வில் செய்த செயல்களுக்கேற்ப, பலதரப்பட்ட இன்ப துன்பங்களை அடைய ஒருவனுக்கு உதவுகின்றன. எனவே, நல்லாத்மாக்களான பீஷ்மரும் துரோணரும், மறு வாழ்வில் நிச்சயமாக ஆன்மீக உடல்களை அடையப் போகிறார்கள், அல்லது குறைந்தபட்சம் பௌதிக நிலையின் உயர் இன்பங்களை அனுபவிப்பதற்காக, ஸ்வர்க லோகத்தின் உடல்களை அடைவார்கள். எனவே, எந்த சூழ்நிலையிலும் கவலைப்பட காரணமில்லை.
தனி ஆத்மா, பரமாத்மா மற்றும் இயற்கை (பௌதிக மற்றும் ஆன்மீக இயற்கை இரண்டும்) ஆகியவற்றின் நிலையை பக்குவமாக அறிந்தவன் தீர அல்லது நிதான புத்தியுடையவன் என்று அழைக்கப்படுகிறான். அத்தகு மனிதன் உடல்களின் மாற்றத்தால் ஒரு போதும் மயங்குவதில்லை.
ஆத்மாக்கள் அனைத்தும் ஒன்றே என்னும் மாயாவாதக் கருத்தை ஏற்க முடியாது; ஏனெனில், ஆத்மாவை சிறு துண்டுகளாக வெட்ட முடியாதது. அவ்வாறு ஆத்மாக்கள் அனைத்தும் பல்வேறு தனிப்பட்ட துண்டுகளாக வெட்டப்பட்டவை என்று எடுத்துக் கொண்டால், அஃது ‘உன்னத ஆத்மா மாற்றமடையாதது ‘ என்னும் கொள்கைக்கு எதிராக அமையும், மேலும், பரமன் துண்டிக்கப்படக்கூடியது, மாற்றமடையக் கூடியது, என்றாகி விடும். கீதையில் உறுதி செய்யப்பட்டுள்ளபடி, பரமனின் அம்சங்கள் நித்தியமானவை (ஸநாதன), க்ஷரா என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன; அதாவது அவை பௌதிக இயற்கையில் விழுந்து விடும் தன்மையுடையவை. அம்சங்கள் நித்தியமாக அம்சங்களே—முக்திக்குப் பின்னும், தனி ஆத்மா அம்சமாகவே திகழும். இருப்பினும், முக்தியடைந்தபின், அவன் பரம புருஷ பகவானுடன், ஆனந்தமும் அறிவும் நிறைந்த நித்திய வாழ்வை வாழ்கிறான். ஒவ்வொரு தனிப்பட்ட உயிர்வாழியின் உடலிலும் வீற்றிருக்கும் பரமாத்மாவிற்கு, பிரதிபலிப்புக் கொள்கையை உபயோகப்படுத்த முடியும். அவர் தனிப்பட்ட ஆத்மாவிலிருந்து வேறுபட்டவர். வானம் நீரில் பிரதிபலிக்கப்படும்போது சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களும் பிரதிபலிக்கின்றன. நட்சத்திரங்களை உயிர்வாழிகளுக்கும் சூரியனையோ சந்திரனையோ முழுமுதற் கடவுளுக்கும் ஒப்பிடலாம். அர்ஜுனனால் பிரதிநிதிக்கப்படும் தனிப்பட்ட அம்சமான ஆத்மாவும், பரமாத்மாவாக விளங்கும் முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரும், ஒரே நிலையை உடையவர்கள் அல்ல—இது நான்காம் அத்தியாயத்தின் தொடக்கத்தில் தெளிவாகும். அர்ஜுனன் கிருஷ்ணருக்கு சமமானவர் என்றாலோ, கிருஷ்ணர் அர்ஜுனனைவிட உயர்ந்தவர் அல்ல என்றாலோ, கற்பிப்பவர், கற்பவன் என்னும் அவர்களது உறவு அர்த்தமற்றதாகி விடும். அவர்கள் இருவருமே அறியாமை சக்தியில் (மாயையில்) மயங்கக் கூடியவர்கள் என்றால், ஒருவர் கற்பிக்க, மற்றவர் கற்றுக்கொள்ளும் அவசியமே இல்லை. அத்தகைய உபதேசங்கள் பயனற்றவை; ஏனெனில், மாயையினால் பிணைக்கப்பட்டுள்ள எவரும் அதிகாரம் பெற்ற ஆசிரியராக முடியாது. எனவே, மாயையால் மயக்கப்படும் மறதியுடைய ஆத்மாவான அர்ஜுனன் எனும் உயிர்வாழியைக் காட்டிலும், முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணர் உயர்வானவர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டாக வேண்டும்.