தெய்வீக மற்றும் அசுர இயல்புகள்
Bg 16.1-3 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: அச்சமின்மை, தனது நிலையை தூய்மைப்படுத்துதல், ஆன்மீக ஞானத்தை விருத்தி செய்து கொள்ளுதல், தானம், சுயக்கட்டுப்பாடு, யாகம் செய்தல், வேதங்களைக் கற்றல், தவம், எளிமை, அகிம்சை, வாய்மை, கோபத்திலிருந்து விடுபட்ட தன்மை, துறவு, சாந்தி, குற்றம் காண்பதில் விருப்பமின்மை, எல்லா உயிர்களின் மீதும் கருணை, பேராசையிலிருந்து விடுபட்ட தன்மை, கண்ணியம், வெட்கம், மனவுறுதி, வீரம், மன்னிக்கும் தன்மை, தைரியம், தூய்மை, பொறாமையின்மை, மரியாதையை எதிர்பார்க்காமல் இருத்தல் ஆகிய தெய்வீக குணங்கள், பரதனின் மைந்தனே, தெய்வீக இயல்புடைய உன்னதமான மனிதரைச் சார்ந்தவை.
Bg 16.4 — பிருதாவின் மைந்தனே, தற்பெருமை, அகந்தை, வீண் அபிமானம், கோபம், கொடூரம், அறியாமை ஆகியவை அசுர இயல்புடையவர்களின் குணங்களாகும்.
Bg 16.5 — தெய்வீக குணங்கள் முக்தி தரக்கூடியவை, அசுர குணங்களோ பந்தப்படுத்துபவை. பாண்டுவின் மைந்தனே, கவலைப்படாதே, நீ தெய்வீக குணங்களுடன் பிறந்திருக்கிறாய்.
Bg 16.6 — பிருதாவின் மைந்தனே, இவ்வுலகிலுள்ள படைக்கப்பட்ட உயிர்வாழிகளில், தெய்வீகமானவர்கள், அசுரர்கள் என இரு வகையினர் உள்ளனர். தெய்வீக குணங்களைப் பற்றி ஏற்கனவே மிக விவரமாக உனக்கு விளக்கியுள்ளேன். இனி அசுரர்களின் குணங்களை என்னிடமிருந்து கேட்பாயாக.
Bg 16.7 — அசுரத்தன்மை உடையவர்கள், என்ன செய்ய வேண்டும் என்றும் என்ன செய்யக் கூடாது என்றும் அறிவதில்லை. தூய்மையோ, முறையான நடத்தையோ, வாய்மையோ அவர்களில் காணப்படுவதில்லை.
Bg 16.8 — அவர்கள், இவ்வுலகம் பொய்யென்றும், அஸ்திவாரம் இல்லாதது என்றும், கட்டுப்படுத்தும் கடவுள் எவரும் இல்லை என்றும் கூறுகின்றனர். காம இச்சையால் உண்டாக்கப்பட்டதாகவும் காமத்தைத் தவிர இதற்கு வேறு காரணம் இல்லை என்றும் அவர்கள் சொல்கின்றனர்.
Bg 16.9 — இத்தகு முடிவுகளைப் பின்பற்றி, அறிவில்லாதவர்களும் தம்மை இழந்தவர்களுமான அசுரர்கள், உலகத்தை அழிப்பதற்கான பலனற்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
Bg 16.10 — அசுரத் தன்மையுடையவர்கள், திருப்தியடையாத காமத்திடம் தஞ்சமடைந்து, கர்வம் மற்றும் பொய் கெளவரத்தின் கவர்ச்சியில் மூழ்கி மயக்கப்பட்டுள்ளனர். எப்போதும் தூய்மையற்ற விரதங்களில் ஈடுபடும் அவர்கள் நிரந்தரமற்ற பொருள்களால் கவரப்படுகின்றனர்.
Bg 16.11-12 — மனித நாகரிகத்தின் முக்கியத் தேவை புலன்களைத் திருப்தி செய்வதே என்று அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறாக வாழ்வின் இறுதிவரையுள்ள அவர்களது கவலைகள் அளக்க முடியாதவை. ஆசைகள் என்னும் நூற்றக்கணக்கான கயிறுகளால் பந்தப்படுத்தப்பட்டு, காமத்திலும் கோபத்திலும் மூழ்கி, அவர்கள் புலனுகர்ச்சிக்காக அநியாயமான வழிகளில் செல்வத்தைச் சேகரிக்கின்றனர்.
Bg 16.13-15 — அசுரத் தன்மையுடையவன் எண்ணுகின்றான்: “இன்று என்னிடம் இவ்வளவு சொத்து உள்ளது, எனது திட்டங்களின் படி நான் நிறைய இலாபம் அடையப் போகின்றேன். தற்போது இவ்வளவு என்னுடையதாக இருக்கின்றது, எதிர்காலத்தில் இது மேன்மேலும் பெருகும். அவன் என்னுடைய எதிரி, அவனை நான் கொன்றுவிட்டேன், என்னுடைய மற்ற எதிரிகளும் கொல்லப்படுவர். நானே எல்லாவற்றின் இறைவன். நானே அனுபவிப்பாளன். நானே பக்குவமானவனும், பலமுடையவனும், மகிழ்ச்சியானவனும் ஆவேன். செல்வாக்கு மிக்க உறவினர்களால் சூழப்பட்ட மிகப்பெரிய செல்வந்தன் நானே. என்னைப் போன்று சக்தியுடையவனும் மகிழ்பவனும் வேறு யாரும் இல்லை. நான் யாகங்கள் செய்வேன், தானங்கள் கொடுப்பேன், இவ்வாறு இன்பமாக இருப்பேன்.” இவ்விதமாக, அத்தகு மக்கள் அறியாமையினால் மயக்கப்பட்டுள்ளனர்.
Bg 16.16 — இவ்வாறு அநேக கவலைகளால் குழப்பமுற்று மோகத்தின் வலையினால் சூழப்பட்ட அவர்கள், புலனின்பத்தில் பலமான பற்றுடையவர்களாகி நரகத்தில் வீழ்ச்சியுறுகின்றனர்.
Bg 16.17 — செல்வத்தாலும் பொய் கெளவரத்தாலும் மயக்கப்பட்டு, தன்னில் திருப்தியுற்று எப்போதும் திமிருடன் விளங்கும் இவர்கள், சில சமயங்களில் எந்த சட்டதிட்டத்தையும் பின்பற்றாமல் பெயரளவில் கர்வத்துடன் யாகங்களைச் செய்கின்றனர்.
Bg 16.18 — அஹங்காரம், பலம், தற்பெருமை, காமம், மற்றும் கோபத்தில் மயங்கியுள்ள அசுரர்கள், தங்களது சொந்த உடல்களிலும் பிறருடைய உடல்களிலும் வீற்றுள்ள பரம புருஷ பகவானிடம் பொறாமை கொண்டு, உண்மை மதத்தினை நிந்திக்கின்றனர்.
Bg 16.19 — பொறாமையுடன் கருணையின்றி இருக்கும் இத்தகு கடைநிலை மனிதர்களை, ஜட வாழ்வு என்னும் கடலில் பல்வேறு அசுர இனங்களுக்குள் நான் நிரந்தரமாகத் தள்ளுகின்றேன்.
Bg 16.20 — குந்தியின் மகனே, அசுரத்தனமான வாழ்வினங்களில் மீண்டும் மீண்டும் பிறவியெடுக்கும் இத்தகையவர்கள், என்றுமே என்னை அடைய முடியாது. படிப்படியாக அவர்கள் மிகவும் வெறுக்கத்தக்க வாழ்வினங்களில் முழ்குகின்றனர்.
Bg 16.21 — காமம், கோபம், பேராசை ஆகியவை நரகத்திற்குக் கொண்டுச் செல்லும் மூன்று கதவுகளாகும். இவை ஆத்மாவை அழிவுப்பாதையில் நடத்துவதால், ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் இவற்றைத் துறக்க வேண்டும்.
Bg 16.22 — குந்தியின் மகனே, நரகத்தின் இந்த மூன்று கதவுகளிலிருந்து தப்பிய மனிதன், தன்னுணர்விற்கு அனுகூலமான செயல்களைச் செய்து படிப்படியாக பரம இலக்கை அடைகின்றான்.
Bg 16.23 — சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து தனது மனம்போன போக்கில் செயல்படுபவன், பக்குவத்தையோ சுகத்தையோ பரம இலக்கையோ அடைவதில்லை.
Bg 16.24 — எது கடமை என்றும் எது கடமையல்ல என்றும் சாஸ்திரங்களின் விதிகளால் ஒருவன் புரிந்துகொள்ள வேண்டும். படிப்படியாக ஏற்றம் பெறுவதற்கு இத்தகு சட்டதிட்டங்களை அறிந்து அவன் செயல்படவேண்டும்.