விஸ்வரூபம்
Bg 11.1 — அர்ஜுனன் கூறினான்: ஆன்மீகம் சம்பந்தமான பரம இரகசியங்களை அன்புடன் எனக்கு வழங்கியுள்ளீர். தங்களது இத்தகு அறிவுரைகளைக் கேட்டதால், இப்போது எனது மயக்கம் தெளிந்து விட்டது.
Bg 11.2 — தாமரைக் கண்களை உடையவரே, ஒவ்வோர் உயிர்வாழியின் தோற்றம் மற்றும் மறைவினைப் பற்றி உம்மிடமிருந்து விவரமாகக் கேட்ட நான், தற்போது உமது அழிவற்ற பெருமைகளை உணர்ந்துள்ளேன்.
Bg 11.3 — உத்தம புருஷரே, உன்னத உருவே, நான் தங்களை தங்களுடைய உண்மை நிலையில் என் முன் காண்கின்றேன் என்ற போதிலும், தங்களைப் பற்றி தாங்களே விளக்கியபடி, இந்த பிரபஞ்சத் தோற்றத்திற்குள் தாங்கள் எவ்வாறு உட்புகுந்து உள்ளீர் என்பதைக் காண நான் விரும்புகிறேன். உமது அந்த ஐஸ்வர்ய ரூபத்தினைக் காண நான் ஆவலுடன் உள்ளேன்.
Bg 11.4 — உமது விஸ்வரூபத்தை என்னால் பார்க்க முடியும் என்று தாங்கள் நினைத்தால், எம்பெருமானே, எல்லா யோக சக்திகளின் இறைவனே, அந்த எல்லையற்ற விஸ்வரூபத்தை எனக்குக் காட்டியருளம்.
Bg 11.5 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: பிருதாவின் மகனே, எனதன்பு அர்ஜுனா, இலட்சக்கணக்கான வடியில் பலதரப்பட்ட நிறத்துடன் தோன்றும் எனது பலவகையான திவ்ய ரூபத்தினை, எனது வைபவத்தினை இப்போது காண்பாயாக.
Bg 11.6 — பாரதர்களில் சிறந்தவனே, ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், அஸ்வினி குமாரர்கள் மற்றும் இதர தேவர்கள் அனைவரையும் இங்கே பார். இதற்கு முன்பு யாரும் கண்டிராத, கேட்டிராத பல ஆச்சரியமான விஷயங்களையும் பார்.
Bg 11.7 — அர்ஜுனா, நீ பார்க்க விரும்புபவை அனைத்தையும், எனது இந்த உடலில் உடனடியாகப் பார்! இப்போது நீ விரும்புபவை மட்டுமின்றி, எதிர்காலத்தில் நீ எதையெல்லாம் காண விரும்புவாயோ, அவை அனைத்தையும் இந்த விஸ்வரூபம் உனக்குக் காட்டும். அசைகின்றவை, அசையாதவை—அனைத்தும் ஒரே இடத்தில் இங்கே முழுமையாக உள்ளன.
Bg 11.8 — ஆனால் உன்னுடைய தற்போதைய கண்களால் என்னை நீ காண முடியாது. எனவே, நான் உனக்கு திவ்யமான கண்களைத் தருகிறேன். எனது யோகத்தின் ஐஸ்வர்யத்தைப் பார்.
Bg 11.9 — ஸஞ்ஜயன் கூறினான்: மன்னா, இவ்வாறு கூறிய பின்னர், எல்லா யோக சக்திகளுக்கும் இறைவனாக விளங்கும் முழுமுதற் கடவுள், தமது விஸ்வரூபத்தை அர்ஜுனனுக்குக் காட்டினார்.
Bg 11.10-11 — அந்த விஸ்வரூபத்தில், அனேக கண்களையும் அனேக வாய்களையும் அனேக அற்புதமான தரிசனங்களையும் அர்ஜுனன் கண்டான். பற்பல தெய்வீகமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த ரூபம், திவ்யமான ஆயுதங்கள் பலவற்றை தாங்கியிருந்தது. தெய்வீகமான மாலைகளையும் ஆடைகளையும் அணிந்திருந்த அவரது உடலில், பல்வேறு திவ்யமான வாசனைப் பொருள்கள் பூசப்பட்டிருந்தது. அவையனைத்தும் அற்புதமாக, பிரகாசமாக, எல்லையற்றதாக, எங்கும் பரவிக் காணப்பட்டது.
Bg 11.12 — ஆகாயத்தில் பல்லாயிரக்கணக்கான சூரியன்கள் ஒரே சமயத்தில் உதயமானால், அந்த பரம புருஷருடைய விஸ்வரூப ஜோதிக்கு ஒருவேளை சமமாகலாம்.
Bg 11.13 — அச்சமயத்தில், இறைவனுடைய விஸ்வரூபத்தில், பற்பல ஆயிரங்களாகப் பிரிந்திருந்த அகிலத்தின் பல்வேறு விஸ்தாரங்களையேல்லாம் ஒரே இடத்தில் அர்ஜுனனால் காண முடிந்தது.
Bg 11.14 — பின்னர், வியப்பினாலும் குழப்பத்தினாலும் மூழ்கிய அர்ஜுனன், தனது உடலில் மயிர்க்கூச்செறிய, சிரம்தாழ்த்தி வணங்கியபடி, கூப்பிய கரங்களுடன் முழுமுதற் கடவுளிடம் பிரார்த்தனை செய்யத்தொடங்கினான்.
Bg 11.15 — அர்ஜுனன் கூறினான்: எனது அன்பிற்குரிய இறைவனே, கிருஷ்ணா! எல்லா தேவர்களும், பற்பல இதர உயிரினங்களும் உமது உடலில் சிறப்பாக வீற்றிருப்பதை நான் காண்கிறேன். தாமரை மலரில் அமர்ந்துள்ள பிரம்மதேவர், சிவபெருமான், பல்வேறு ரிஷிகள் மற்றும் திவ்யமான நாகங்களையும் நான் காண்கின்றேன்.
Bg 11.16 — உலகத்தின் இறைவனே, விஸ்வரூபமே, நான் உமது உடலில் பற்பல கைகளும் வயிறுகளும் வாய்களும் கண்களும் எல்லையற்று எங்கும் பரவியிருப்பதைக் காண்கிறேன். உம்மில் நான் ஆதியையோ, நடுவையோ, முடிவையோ காணவில்லை.
Bg 11.17 — அளக்க முடியாத சூரிய ஒளி அல்லது கொழுந்துவிட்டு எரியும் நெருப்பினைப் போன்று, எல்லா திசைகளிலும் பிரகாசமாக விளங்கும் ஜோதியினால், உமது உருவத்தை பார்ப்பதற்குக் கடினமாக உள்ளது. இருப்பினும், பற்பல மகுடங்கள், கதைகள் மற்றும் சக்கரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள உமது உருவம் எல்லா இடங்களிலும் பிரகாசமாக விளங்குகின்றது.
Bg 11.18 — அறிய வேண்டியவைகளில் முதன்மையானவர் நீரே; எல்லா அகிலங்களுக்கும் இறுதி ஆதாரம் நீரே. நீர் அழிவற்றவர், மிகப் பழமையானவர், தர்மத்தின் நித்திய பாதுகாவலர் மற்றும் புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள். இதுவே எனது அபிப்பிராயம்.
Bg 11.19 — நீர் ஆரம்பமும் நடுவும் இறுதியும் இல்லாதவர். உமது பெருமை அளவிட முடியாதது, தங்களது கைகள் அளவிட முடியாதவை, சூரியனும் சந்திரனும் உமது கண்கள். உமது வாயிலிருந்து வெளிவரும் நெருப்பு ஜூவாலையையும், உமது சுய தேஜஸால் இந்த அகிலம் முழுவதையும் தாங்கள் எரிப்பதையும் நான் காண்கின்றேன்.
Bg 11.20 — தாங்கள், ஒருவரே என்றபோதிலும், வானம், பூமி, மற்றும் இரண்டிற்கும் இடைப்பட்ட இடம் என எல்லா திசைகளிலும் வியாபித்துள்ளீர். மஹாத்மாவே, இந்த அற்புதமான உக்கிர ரூபத்தைக் கண்டு, மூவுலகமும் குழம்பியுள்ளது.
Bg 11.21 — தேவர்கள் அனைவரும் உம்மிடம் சரணடைந்து, உம்மில் புகுந்து கொண்டுள்ளனர். அவர்களில் சிலர் மிகவும் அச்சமுற்று, கூப்பிய கரங்களுடன் பிரார்த்தனை செய்கின்றனர். மகா ரிஷிகளும் சித்தர்களும் “அமைதி!” என்று கதறியபடி, வேத மந்திரங்களைப் பாடி உம்மிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
Bg 11.22 — சிவபெருமானின் பல்வேறு தோற்றங்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், ஸாத்தியர்கள், விஷ்வதேவர்கள், இரு அஸ்வினிகள், மருத்துக்கள், முன்னோர்கள், கந்தவர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், சித்தர்கள் என அனைவரும் உம்மை வியப்புடன் பார்த்துக் கொண்டுள்ளனர்.
Bg 11.23 — வலிமையான புயங்களை உடையவரே, உமது பற்பல முகங்கள், கண்கள், கைகள், வயிறுகள், கால்கள், மற்றும் உமது பற்பல பயங்கரமான பற்களைக் கண்டு, தேவர்கள் உட்பட உலகிலுள்ள அனைவரும் குழம்பியுள்ளனர். அவர்களைப் போலவே நானும் குழம்பியுள்ளேன்.
Bg 11.24 — எங்கும் நிறைந்த விஷ்ணுவே, வானத்தைத் தொடும் உமது பற்பல ஒளிரும் நிறங்கள், திறந்த வாய்கள், மற்றும் பிரகாசிக்கக் கூடிய விசாலமான கண்களுடன் உம்மை நான் காணும்போது, எனது மனம் பயத்தினால் குழம்புகின்றது. எனது மனதின் சமநிலையை தக்கவைப்பது இனிமேல் என்னால் இயலாது.
Bg 11.25 — தேவர்களின் இறைவனே, உலகங்களில் அடைக்கலமே, என்னிடம் கருணை கொள்ளும். கால நெருப்பினைப் போன்ற உமது முகங்களையும், பயங்கரமான பற்களையும், கண்டபின் எனது மனதை நிலைநிறுத்த முடியவில்லை. எல்லா திசைகளிலும் நான் குழம்பியுள்ளேன்.
Bg 11.26-27 — தனது கூட்டத்தைச் சேர்ந்த மன்னர்களுடன் திருதராஷ்டிரரின் எல்லாப் புத்திரர்கள், பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் நமது முக்கிய வீரர்களும் உம்முடைய வாய்களுக்குள்ளே விரைந்து நுழைகின்றனர். அவர்களில் சிலர் உமது பற்களுக்கிடையே நசுக்கப்படுவதையும் நான் காண்கிறேன்.
Bg 11.28 — நதிகளின் பல்வேறு அலைகள் கடலை நோக்கிச் செல்வது போல, இந்த மாவீரர்கள் அனைவரும் எரிகின்ற உமது வாயினுள் நுழைகின்றனர்.
Bg 11.29 — கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் அழிவை நோக்கி நுழையும் விட்டில் பூச்சிகளைப் போல, எல்லா மக்களும் உமது வாய்களில் முழு வேகத்துடன் நுழைவதை நான் காண்கிறேன்.
Bg 11.30 — விஷ்ணுவே, கொழுந்து விட்டெரியும் உமது வாய்களின் மூலம் எல்லா திசைகளிலும் உள்ள மக்கள் அனைவரையும் தாங்கள் விழுங்கிக் கொண்டுள்ளதை நான் காண்கிறேன். உமது தேஜஸினால் அகிலம் முழுவதையும் நிறைத்துக் கொண்டு, உக்கிரமான தகிக்கக்கூடிய கதிர்களுடன் தாங்கள் வீற்றுள்ளீர்.
Bg 11.31 — தேவர்களின் இறைவனே, உக்கிரமான ரூபமே, தாங்கள் யார் என்பதை தயவு செய்து எனக்குக் கூறும். உமக்கு எனது வணக்கங்கள்; என்னிடம் கருணை காட்டும். தாங்களே ஆதி புருஷர். உங்களது நோக்கம் என்ன என்பதை அறியாததால், அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்புகிறேன்.
Bg 11.32 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: காலம் நான், உலகங்களை அழிப்பவற்றில் மிகப்பெரியவன், எல்லா மக்களையும் அழிப்பதற்காக நான் வந்துள்ளேன். உங்களைத் தவிர (பாண்டவர்களைத் தவிர) இரு தரப்பிலும் உள்ள எல்லா வீரர்களும் அழிக்கப்படுவர்.
Bg 11.33 — எனவே, எழுந்து போரிடத் தயாராகு. உனது எதிரிகளை வென்று, புகழுடன் வளமாக அரசினை அனுபவிப்பாயாக. எனது ஏற்பாட்டால் இவர்கள் அனைவரும் ஏற்கனவே மரணத்தைக் கண்டுவிட்டனர். எனவே, ஸவ்யஸாசியே, போரில் ஒரு கருவியாக மட்டும் செயல்படுவாயாக.
Bg 11.34 — துரோணர், பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் மற்றும் இதர மாவீரர்கள் அனைவரும் ஏற்கனவே என்னால் அழிக்கப்பட்டு விட்டனர். எனவே, அவர்களைக் கொல்வதால் கவலைப்பட வேண்டாம். வெறுமனே போரிடுவாயாக, உனது எதிரிகளை நீ போரில் வீழ்த்திடுவாய்.
Bg 11.35 — திருதராஷ்டிரரிடம் சஞ்சயன் கூறினான்: மன்னா, முழுமுதற் கடவுளிடமிருந்து இத்தகு உரையைக் கேட்ட அர்ஜுனன், கூப்பிய கரங்களுடன் நடுங்கியபடி மீண்டும் மீண்டும் அவரை வணங்கினான். மிகுந்த பயத்துடனும் குரல் தழுதழுத்த வண்ணம் அவன் கிருஷ்ணரிடம் பின்வருமாறு கூறத் தொடங்கினான்.
Bg 11.36 — அர்ஜுனன் கூறினான்: புலன்களின் அதிபதியே, உமது திருநாமத்தைக் கேட்பதால் உலகம் ஆனந்தம் அடைகின்றது, அதன் மூலம் அனைவரும் உம்மிடம் பற்றுதல் கொள்கின்றனர். சித்தர்கள் மரியாதையுடன் உம்மை வணங்கும் அதேசமயத்தில், அசுரர்கள் அச்சமுற்று இங்குமங்கும் ஓடுகின்றனர். இவையனைத்தும் சிறப்பாக நடைபெறுகின்றன.
Bg 11.37 — மஹாத்மாவே, பிரம்மாவை விடச் சிறந்தவரே, நீங்களே ஆதி படைப்பாளர். எனவே, அவர்கள் மரியாதை கலந்த வணக்கங்களை ஏன் உங்களுக்கு செலுத்தக் கூடாது? எல்லையற்றவரே, தேவர்களின் தேவனே, அகிலத்தின் அடைக்கலமே, தாங்கள் அழிவற்றவர், எல்லா காரணங்களுக்கும் காரணம், இந்த ஜடத் தோற்றத்திற்கு அப்பாற்பட்டவர்.
Bg 11.38 — நீரே ஆதி தேவர், புருஷர், மிகவும் பழமையானவர், படைக்கப்பட்ட இந்த உலகத்தின் இறுதி அடைக்கலம், அனைத்தையும் அறிந்தவரும், அறியப்பட வேண்டியவரும் நீரே. பௌதிக குணங்களுக்கு அப்பாற்பட்ட உன்னத அடைக்கலம் நீரே. எல்லையற்ற ரூபமே, பிரபஞ்சத் தோற்றம் முழுவதும் தாங்கள் பரவியுள்ளீர்.
Bg 11.39 — நீரே வாயு, நீரே எமன்! நீரே அக்னி, நீரே வருணன், நீரே சந்திரன். முதல் உயிர்வாழியான பிரம்மாவும் நீரே, அந்த பிதாமகனின் தந்தையும் நீரே. எனவே, எனது மரியாதை கலந்த வணக்கங்களை உமக்கு ஆயிரமாயிரம் முறைகள் மீண்டும் மீண்டும் நான் சமர்ப்பிக்கின்றேன்.
Bg 11.40 — முன்னிருந்தும் பின்னிருந்தும் எல்லாத் திக்குகளில் இருந்தும் உமக்கு வணக்கங்கள்! எல்லையற்ற சக்தியே, எல்லையற்ற வலிமையின் இறைவன் நீரே! தாங்கள் எங்கும் பரவியிருப்பதால் நீரே எல்லாம்!
Bg 11.41-42 — உம்மை எனது நண்பன் என்று எண்ணிக்கொண்டு, உமது பெருமைகளை அறியாமல் “கிருஷ்ணா,” “யாதவா,” “நண்பனே” என்றெல்லாம் நான் உம்மை அகந்தையுடன் அழைத்துள்ளேன். பித்தத்தினாலோ பிரேமையினாலோ நான் செய்தவை அனைத்தையும் தயவுசெய்து மன்னிக்கவும். பொழுது போக்கான கேளிக்கையின் போதும், ஒரே படுக்கையில் படுத்திருந்த போதும், அல்லது உடன் அமர்ந்து உணவருந்திய போதும், நான் தங்களை சில சமயங்களில் தனியாகவும் சில சமயங்களில் நண்பர்களுக்கு மத்தியிலும் அவமரியாதை செய்துள்ளேன். இழிவடையாதவரே, இத்தகைய குற்றங்களுக்காக தயவுசெய்து என்னை மன்னிப்பீராக.
Bg 11.43 — இந்த பிரபஞ்சத் தோற்றத்திலுள்ள அசைகின்ற, அசையாத அனைத்திற்கும் தாங்களே தந்தை. வழிபாட்டிற்கு உரியவர்களில் முதன்மையானவரும், பரம ஆன்மீக குருவும் நீரே. உமக்கு சமமாகவோ, உம்முடன் ஒன்றாகவோ யாரும் ஆக முடியாது. அவ்வாறு இருக்கையில், அளவற்ற சக்தியின் இறைவனே, இந்த மூவுலகில் உம்மைவிட உயர்ந்தவர் யார் இருக்க முடியும்?
Bg 11.44 — ஒவ்வோர் உயிர்வாழியாலும் வணங்கப்பட வேண்டிய பரம புருஷர் நீரே. எனவே, நான் எனது மரியாதைக்குரிய வணக்கங்களை கீழே விழுந்து சமர்ப்பித்து உமது கருணையை வேண்டுகிறேன். எவ்வாறு தந்தை தனது மகனுடைய குற்றங்களையும், நண்பன் நண்பனுடைய குற்றங்களையும், கணவன் மனையினுடைய குற்றங்களையும் பொறுத்துக் கொள்கிறார்களோ, அதுபோல, என்னுடைய தவறுகள் அனைத்தையும் தாங்கள் பொறுத்து அருள்வீராக.
Bg 11.45 — இதுவரை நான் என்றுமே கண்டிராத விஸ்வரூபத்தைப் பார்த்த பிறகு, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் அதே சமயத்தில் பயத்தினால் எனது மனம் குழம்புகின்றது. எனவே, தேவர்களின் இறைவனே, அகிலத்தின் அடைக்கலமே, ஏன் மீது கருணைக் காட்டி மீண்டும் தங்களது தெய்வீக ரூபத்தைக் காட்டி அருள்புரிவீராக.
Bg 11.46 — விஸ்வரூபமே, ஆயிரம் கரங்களுடைய இறைவனே, தலையில் மகுடத்துடனும் கைகளில் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை மலருடனும் விளங்கும் உமது நான்கு கை உருவில் உம்மைக் காண நான் விரும்புகிறேன். உம்மை அந்த ரூபத்தில் காண நான் பேராவல் கொண்டுள்ளேன்.
Bg 11.47 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எனதன்பு அர்ஜுனா, எனது அந்தரங்க சக்தியின் மூலம் இந்த தெய்வீகமான விஸ்வரூபத்தை நான் இந்த உலகத்தினுள் மகிழ்வுடன் காண்பித்தேன். எல்லையற்றதும் பிரகாசம் மிக்கதுமான இந்த ஆதி ரூபத்தை, இதற்குமுன் உன்னைத் தவிர வேறு யாரும் கண்டதில்லை.
Bg 11.48 — குரு வம்ச வீரர்களில் சிறந்தவனே, எனது இந்த விஸ்வரூபத்தை உனக்குமுன் யாரும் என்றும் கண்டதில்லை. ஏனெனில், வேதங்களைப் படிப்பதாலோ, யாகங்களைச் செய்வதாலோ, தானங்களாலோ, புண்ணியச் செயல்களாலோ, கடும் தவங்களாலோ, எனது இந்த உருவத்தை ஜடவுலகில் காண்பது என்பது இயலாததாகும்.
Bg 11.49 — எனது இந்த கோரமான உருவத்தைக் கண்டு நீ மிகவும் பாதிக்கப்பட்டு குழம்பியுள்ளாய். இனி இது முடிவு பெறட்டும். என் பக்தனே, எல்லாக் குழப்பங்களிலிருந்தும் விடுபடுவாயாக. அமைதியான மனதுடன் நீ விரும்பும் உருவத்தை தற்போது நீ காணலாம்.
Bg 11.50 — திருதராஷ்டிரரிடம் சஞ்ஜயன் கூறினான்: புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணர், அர்ஜுனனிடம் இவ்வாறு பேசிய பிறகு, நான்கு கரங்களை உடைய தனது சுய உருவையும் இறுதியில் இரண்டு கரங்களுடனான உருவையும் காட்டி, அச்சமுற்று இருந்த அர்ஜுனனை உற்சாகப்படுத்தினார்.
Bg 11.51 — கிருஷ்ணரை அவரது உண்மையான உருவில் கண்டபோது, அர்ஜுனன் கூறினான்: ஓ ஜனார்தனா, மனிதனைப் போன்று தோன்றக்கூடிய மிகவும் அழகான இந்த உருவத்தைக் கண்டு, எனது மனம் தற்போது அமைதியடைந்துள்ளது, நான் எனது சுய இயல்பினை மீண்டும் அடைந்துள்ளேன்.
Bg 11.52 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எனதன்பு அர்ஜுனா, இப்போது நீ பார்க்கும் எனது இந்த உருவம் காண்பதற்கு மிகவும் அரியதானது. பிரியமான இந்த உருவத்தை தரிசிப்பதற்கான வாய்ப்பை தேவர்களும் எப்போதும் நாடுகின்றனர்.
Bg 11.53 — உனது தெய்வீக கண்களால் நீ காண்கின்ற இந்த உருவம், வேதங்களைக் கற்பதாலோ, கடுந்தவங்களைச் செய்வதாலோ, தானங்களைக் கொடுப்பதாலோ, வழிபாடு செய்வதாலோ புரிந்துகொள்ளப்படக் கூடியது அல்ல. என்னை உள்ளபடி உணர்வதற்கு இந்த வழிகள் உதவாது.
Bg 11.54 — எனதன்பு அர்ஜுனா, உன் முன் நிற்கும் என்னை, கலப்பற்ற பக்தித் தொண்டினால் மட்டுமே இதுபோன்று நேரடியாகக் காணவும் புரிந்து கொள்ளவும் முடியும். இவ்வழியில் மட்டுமே என்னைப் பற்றிய உண்மையின் இரகசியங்களிலே உன்னால் நுழைய முடியும்.
Bg 11.55 — எனதன்பு அர்ஜுனா, எவனொருவன், எனது தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளானோ, பலன்நோக்குச் செயல்கள் மற்றும் மனக்கற்பனைகளின் களங்கங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளானோ, எனக்காக செயல்படுகிறானோ, என்னை தனது வாழ்வின் பரம இலக்காக வைத்துல்லானோ, மற்றும் எல்லா உயிர்களிடத்திலும் நண்பனாக உள்ளானோ, அவன் நிச்சயமாக என்னை வந்தடைகின்றான்.