Friday, April 19

ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் – 7

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பூரணத்தின் ஞானம்

Bg 7.1 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: பிருதாவின் மகனே, என்னிடம் பற்றுதல் கொண்ட மனுதுடன், என்னைப் பற்றிய முழு உணர்வில், யோகத்தைப் பயில்வதன் மூலம் என்னை நீ எவ்வாறு சந்தேகம் ஏதுமின்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம் என்பதை இனி கேட்பாயாக.

Bg 7.2 — தற்போது, சாதாரண அறிவையும் தெய்வீக அறிவையும் நான் உனக்கு முழுமையாக அறிவிக்கின்றேன். இதனை அறிந்த பின் நீ அறிய வேண்டியவை ஏதும் இருக்காது.

Bg 7.3 — ஆயிரமாயிரம் மனிதர்களில் யாரேனும் ஒருவன் பக்குவமடைய முயற்சி செய்யலாம். அவ்வாறு பக்குவமடைந்தவர்களில் கூட யாரேனும் ஒருவனே என்னை உண்மையாக அறிகிறான்.

Bg 7.4 — நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம்—இந்த எட்டும் சேர்ந்ததே எனது பிரிந்த ஜட சக்திகளாகும்.

Bg 7.5 — பலம் பொருந்திய புயங்களை உடைய அர்ஜுனா, இதற்கு அப்பால், என்னுடைய உயந்த சக்தி ஒன்று உள்ளது. இந்த தாழ்ந்த ஜட இயற்கையினை தனது சுயநலனிற்காக உபயோகிக்ககூடிய ஜீவாத்மாக்களை அஃது உள்ளடக்கியதாகும்.

Bg 7.6 — படைக்கப்பட்டவை அனைத்தும் இந்த இரண்டு இயற்கையைச் சேர்ந்தவையே. இவ்வுலகில் ஜடமாகவும் ஆன்மீகமாகவும் இருப்பவை அனைத்திற்கும், ஆதியும் அந்தமும் நானே என்பதை நிச்சயமாக அறிவாயாக.

Bg 7.7 — செல்வத்தை வெல்வோனே, என்னைவிட உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளதுபோல, அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன.

Bg 7.8 — குந்தியின் மகனே, நானே நீரின் சுவையும், சூரிய சந்திரர்களின் ஒளியும், வேத மந்திரங்களின் பிரணவ ஒலியுமாக (ஓம்) இருக்கின்றேன்; ஆகாயத்தில் சப்தமாகவும், மனிதரில் திறமையாகவும் இருப்பது நானே.

Bg 7.9 — நிலத்தின் மூல நறுமணமும், நெருப்பின் வெப்பமும் நானே. உயிரினங்களின் உயிரும், தவம் புரிவோரின் தவமும் நானே.

Bg 7.10 — பிருதாவின் மகனே, எல்லா உயிரினங்களின் மூல விதையும், புத்திசாலிகளின் புத்தியும், பலசாலிகளின் பலமும் நானே என்பதை அறிவாயாக.

Bg 7.11 — பரதர்களின் தலைவா (அர்ஜுனா), காமமும் பற்றுதலும் அறவே இல்லாத பலசாலிகளின் பலம் நானே. தர்மத்தின் கொள்கைகளுக்கு விரோதமில்லாத காமமும் நானே.

Bg 7.12 — ஸத்வம், ரஜஸ், தமஸ் இவற்றில் எந்த வாழ்க்கை நிலையானாலும், அவை எனது சக்தியால் படைக்கப்படுபவை என்பதை அறிவாயாக. ஒருவிதத்தில் நானே எல்லாம் என்றபோதிலும், நான் சுதந்திரமானவன். நான் ஜட இயற்கையின் குணங்களுக்கு உட்பட்டவனல்ல, மாறாக அவை எனக்குள் அடக்கம்.

Bg 7.13 — (ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும்) மூவகை குணங்களில் மங்கியிருப்பதால், குணங்களுக்கு அப்பாற்பட்ட அழிவற்ற என்னை முழு உலகமும் அறியாது.

Bg 7.14 — ஜட இயற்கையின் முக்குணங்களாலான எனது இந்த தெய்வீக சக்தி வெல்லுவதற்கரியது. ஆனால் என்னிடம் சரணடைந்தோர் இதனை எளிதில் கடக்கலாம்.

Bg 7.15 — சற்றும் அறிவற்ற மூடர்களும், மனிதரில் கடைநிலையோரும், மாயையால் அறிவு கவரப்பட்டவர்களும், அசுரரின் நாத்திகத் தன்மையை ஏற்றவர்களுமான துஷ்டர்கள் என்னிடம் சரணடையவதில்லை.

Bg 7.16 — பரதர்களில் சிறந்தவனே, நான்கு விதமான நல்லோர் எனக்குத் தொண்டு புரிகின்றனர்— துயருற்றோர், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவைத் தேடுவோர் என்பவர் அவர்கள்.

Bg 7.17 — இவர்களில், முழு ஞானத்துடன் எப்போதும் தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவனே சிறந்தவன்; ஏனெனில், நான் அவனுக்கு மிகவும் பிரியமானவன், அவனும் எனக்கு மிகவும் பிரியமானவன்.

Bg 7.18 — இந்த பக்தர்கள் அனைவருமே சந்தேகமின்றி உத்தமர்கள்தான்; ஆயினும், என்னைப் பற்றிய ஞானத்தில் நிலைபெற்றுள்ளவனை, நான் என்னைப் போலவே கருதுகிறேன். அவன் எனது உன்னத தொண்டில் ஈடுபட்டிருப்பதால், மிகவுயர்ந்த, பக்குவ இலக்கான என்னை அவன் அடைவது உறுதி.

Bg 7.19 — பற்பல பிறவிகளுக்குப் பின், உண்மையான அறிவுடையவன், எல்லாக் காரணங்களுக்கும் காரணமாக, எல்லாமாக என்னை அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அத்தகைய மகாத்மா மிகவும் அரிதானவன்.

Bg 7.20 — ஜட ஆசைகளால் அறிவை இழந்தவர்கள், தேவர்களிடம் சரணடைந்து, தங்களது இயற்கைக்கு ஏற்ற வழிபாட்டு முறைகளையும் நியமங்களையும் பின்பற்றுகின்றனர்.

Bg 7.21 — எல்லோரது இதயத்திலும் நான் பரமாத்மாவாக இருக்கிறேன். தேவர்களை வழிபட வேண்டுமென ஒருவன் விரும்பும்போது, அந்த குறிப்பிட்ட தேவனிடம் பக்தி செய்வதற்கான அவனது நம்பிக்கையை நானே பலப்படுத்துகிறேன்.

Bg 7.22 — இத்தகைய நம்பிக்கையுடன் இணைந்து, அவன் ஒரு குறிப்பிட்ட தேவரை வழிபட்டு, தனது ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறான். ஆனால் உண்மையில் இந்த நன்மைகளெல்லாம் என்னால் மட்டுமே அளிக்கப்படுபவையாகும்.

Bg 7.23 — தேவர்களை வழிபடும் சிற்றறிவு படைத்த மக்களது பலன்கள், தற்காலிகமானதும் ஓர் எல்லைக்கு உட்பட்டதுமாகும். தேவர்களை வழிபடுவோர் தேவர்களின் உலகங்களுக்குச் செல்வர், ஆனால் எனது பக்தர்கள் இறுதியில் எனது உன்னத உலகை அடைகின்றனர்.

Bg 7.24 — என்னை பக்குவமாக அறியாத அறிவற்ற மனிதர்கள், கிருஷ்ணர் எனப்படும் பரம புருஷ பகவானாகிய நான், முன்னர் அருவமாக இருந்ததாகவும் தற்போது உருவத்தை ஏற்றிருப்பதாகவும் எண்ணுகின்றனர். அவர்களது சிற்றறிவினால், அழிவற்றதும் மிகவுயர்ந்ததுமான எனது பரம இயற்கையைப் பற்றி அவர்கள் அறியார்.

Bg 7.25 — சிற்றறிவுடையோருக்கும் முட்டாளுக்கும் நான் ஒருபோதும் தோன்றுவதில்லை. நான் எனது அந்தரங்க சக்தியால் கவரப்பட்டுள்ளேன், எனவே நான் பிறப்பற்றவன், அழிவற்றவன் என்பதை இவர்கள் அறிவதில்லை.

Bg 7.26 — அர்ஜுனா, முழுமுதற் கடவுளான நான், கடந்த காலத்தில் நடந்தவை, தற்போது நடப்பவை, இனி நடக்க போகின்றவை அனைத்தையும் அறிவேன். நான் எல்லா ஜீவாத்மாக்களையும் நன்கறிவேன், ஆனால் என்னை அறிந்தவர் யாருமில்லை.

Bg 7.27 — பரத குலத் தோன்றலே, எதிரிகளை வெல்வோனே, விருப்பு வெறுப்பினால் உண்டான இருமைகளில் மயங்கியுள்ள எல்லா உயிர்வாழிகளும், மிகுந்த குழப்பதுடன் பிறந்துள்ளனர்

Bg 7.28 — முற்பிறவியிலும் இப்பிறவியிலும் புண்ணிய செயல்களில் ஈடுபட்டு, எவர்களது பாவ விளைவுகள் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டதோ, எவர்கள் மயக்கத்தின் இருமையிலிருந்து பூரணமாக விடுபட்டுள்ளார்களோ, அவர்களே எனது பக்தித் தொண்டில் மனவுறுதியுடன் ஈடுபடுவர்.

Bg 7.29 — முதுமையிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுபட முயலும் அறிவுடையோர், பக்தித் தொண்டின் மூலம் என்னிடம் அடைக்கலம் புகுகின்றனர். திவ்யமானச் செயல்களைப் பற்றிய அனைத்தையும் அறிவதால், அவர்கள் உண்மையில் பிரம்மனே.

Bg 7.30 — பௌதிகத் தோற்றம், தேவர்கள் மற்றும எல்லாவித யாகங்களை ஆள்பவனாகவும், பரம புருஷனாகவும், என்னை அறிந்து, என்னைப் பற்றிய உணர்வுடன் இருப்பவர்கள், மரண நேரத்திலும்கூட பரம புருஷ பகவானான என்னைஅறிய முடியும்.

+18
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question