Thursday, March 28

ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் – 2

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

கீதையின் உட்பொருட் சுருக்கம்

Bg 2.1 — சஞ்ஜயன் கூறினான்: அர்ஜுனன், இரக்கத்தினால் மூழ்கி, மனம் பவவீனமடைந்து, கண்களில் கண்ணீர் மல்கிய நிலையில் இருப்பதைக் கண்ட மதுசூதனரான கிருஷ்ணர் பின்வருமாறு கூறினார்.

Bg 2.2 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எனதருமை அர்ஜுனனே, உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிருந்து வந்தன? வாழ்வின் மதிப்பை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்வதில்லை, அவமானத்தை கொடுக்கின்றன.

Bg 2.3 — பிருதாவின் மகனே, இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடுக்காதே. இஃது உனக்கு பொறுத்தமானதல்ல. இதுபோன்ற அற்பமான இதய பலவீனத்தை விட்டுவிட்டு, எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே, எழுவாயாக.

Bg 2.4 — அர்ஜுனன் கூறினான்: எதிரிகளைக் கொல்பவரே, மது எனும் அரக்கனை அழித்தவரே, எனது பூஜைக்கு உரியவர்களான பீஷ்மர், துரோணர் முதலியோரை போரில் எவ்வாறு என்னால் எதிர்த்து தாக்க முடியும்?

Bg 2.5 — மகாத்மாக்களான எனது ஆச்சாரியர்களின் வாழ்வை அழித்து நான் வாழ்வதை விட இவ்வுலகில் பிச்சையெடுத்து வாழ்வதே மேல், உலக இலாபங்களை விரும்பும்போதிலும், அவர்கள் பெரியோர்களே. அவர்கள் கொல்லப்பட்டால், நாம் அனுபவிப்பவை அனைத்திலும் இரத்தக் கறை படிந்திருக்கும்.

Bg 2.6 — அவர்களை நாம் வெல்வதா அல்லது அவர்களால் வெல்லப்படுவதா, எது சிறந்ததென்று நாம் அறியோம். யாரைக் கொன்றால் நாம் வாழ விரும்ப மாட்டோமோ, அந்த திருதராஷ்டிரரின் மகன்கள், இப்பொழுது நம் முன்பு போர்க்களத்தில் நிற்கின்றனர்.

Bg 2.7 — இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்ந்து எனக்கு அறிவுரை கூறுவீராக.

Bg 2.8 — என் புலன்களை வறட்டுகின்ற இந்த சோகத்தைப் போக்க ஒரு வழியையும் என்னால் காண முடிவில்லை. மேலுலகில் அதிபதியாக இருக்கும் தேவர்களைப் போல, எவ்வித எதிரியுமில்லாத வளமான ராஜ்ஜியத்தை இப்பூவுலகில் நான் அடையப்பெற்றாலும், இந்த சோக நிலையினை என்னால் அகற்ற முடியாது.

Bg 2.9 — சஞ்ஜயன் கூறினான்: இவ்வாறு கூறிய பின், எதிரிகளைத் தவிக்கச் செய்பவனான அர்ஜுனன், “கோவிந்தா, நான் போரிட மாட்டேன்” என்று கூறி அமைதியாகி விட்டான்.

Bg 2.10 — பரத குலத் தோன்றலே, அச்சமயத்தில், இரு தரப்புச் சேனைகளுக்கு மத்தியில், துயரத்தால் பாதிக்கப்பட்டிருந்த அர்ஜுனனிடம், கிருஷ்ணர் புன்சிரிப்புடன் பின்வருமாறு கூறினார்.

Bg 2.11 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: அறிவாளியைப் போல பேசும் அதே சமயத்தில் கவலைப்பட வேண்டாதவற்றிற்காக நீ கவலைப்படுகிறாய். அறிஞர் வாழ்பவர்களுக்காகவோ, மாண்டவர்களுக்காகவோ வருந்துவதில்லை.

Bg 2.12 — நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த காலம் எதுவுமில்லை. எதிர்காலத்திலும் நம்மில் எவரும் இல்லாமலிருக்கப் போவதுமில்லை.

Bg 2.13 — தேகத்தை உடையவனின் உடல், சிறுவயது, இளமை, முதுமை என்று கடந்துசெல்வதைப் போல, ஆத்மா, மரணத்தின் போது வேறு உடலுக்கு மாற்றம் பெறுகின்றது. நிதான புத்தியுடையவர் இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.

Bg 2.14 — குந்தியின் மகனே, இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும் காலப் போக்கில் ஏற்படும் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவதைப் போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன; எனவே, பரத குலத் தோன்றலே, இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்.

Bg 2.15 — மனிதரில் சிறந்தோனே (அர்ஜுனனே), இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதவனும் இவ்விரண்டு நிலைகளிலும் தன்னிலை மாறாது இருப்பவனுமே, நிச்சயமாக விடுதலைக்குத் தகுதி பெற்றவனாக இருக்கிறான்.

Bg 2.16 — உண்மையைக் கண்டவர்கள், நிலையற்றதற்கு (உடலுக்கு) நீடிப்பும், நித்தியமானதற்கு (ஆத்மாவிற்கு) மாற்றமும் இல்லை என்று முடிவு செய்துள்ளனர். இவை இரண்டின் இயற்கையையும் ஆராய்ந்தே அவர்கள் இதைத் தீர்மானித்துள்ளனர்.

Bg 2.17 — உடல் முழுவதும் பரவியிருப்பதை அழிவற்றதென்று நீ அறிய வேண்டும். அந்த அழிவற்ற ஆத்மாவைக் கொல்லக்கூடியவர் எவருமில்லை.

Bg 2.18 — அழிவற்ற, அளக்கமுடியாத, நித்தியமான உயிர்வாழியின் இந்த ஜடவுடல் அழியப்போவது உறுதி. எனவே, பரத குலத் தோன்றலே போரிடுவாயாக.

Bg 2.19 — ஜீவாத்மாவை, கொல்பவனாக நினைப்பவனும் கொல்லப்படுபவனாக நினைப்பவனும், அறிவில்லாதவன் ஆவான்; ஏனெனில், ஆத்மா கொலை செய்வதோ கொல்லப்படுவதோ இல்லை.

Bg 2.20 — ஆத்மாவிற்கு எக்காலத்திலும் பிறப்போ இறப்போ கிடையாது. அவன் தோன்றியவனும் அல்ல, தோன்றுபவனும் அல்ல, தோன்றக்கூடியவனும் அல்ல. அவன் பிறப்பற்றவன், நித்தியமானவன், என்றும் நிலைத்திருப்பவன், மிகப் பழமையானவன், உடல் கொல்லப்படும்போது அவன் கொல்லப்படுவதில்லை.

Bg 2.21 — பார்த்தனே, ஆத்மா அழிவற்றவன், நித்தயமானவன், பிறப்பற்றவன், மாற்றமில்லாதவன் என்பதை எவனொருவன் அறிந்துள்ளானோ, அவன் கொல்வதோ, கொலை செய்ய காரணமாவதோ எப்படி?

Bg 2.22 — பழைய ஆடைகளைப் புறக்கணித்து, புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே, பழைய உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கிறது.

Bg 2.23 — ஆத்மா எந்த ஆயுதத்தாலும் துண்டிக்கப்பட முடியாததும், நெருப்பால் எரிக்கப்பட முடியாததும், நீரால் நனைக்கப்பட முடியாததும், வீசும் காற்றால் உலர்த்தப்பட முடியாததுமாகும்.

Bg 2.24 — ஜீவாத்மா வெட்ட முடியாதவன், கரைக்க முடியாதவன், எரிக்கவோ, உலர்த்தவோ முடியாதவன். அவன் நித்தியமானவன், எங்கும் நிறைந்தவன், மாற்ற இயலாதவன், அசைக்க முடியாதவன், நித்தியமாக மாற்றமின்றி இருப்பவன்.

Bg 2.25 — ஆத்மா பார்வைக்கு புலப்படாதவன், சிந்தனைக்கு அப்பாற்பட்டவன்; மேலும், மாற்ற முடியாதவன் என்று கூறப்படுகிறது. இதனை நன்கறிந்து, நீ உடலுக்காக வருத்தப்படக் கூடாது.

Bg 2.26 — இருப்பினும், ஆத்மா (அல்லது வாழ்வின் அறிகுறிகள்) எப்போதும் பிறந்து இறந்து கொண்டிருப்பதாக நீ எண்ணினாலும், பலம் பொருந்திய புயங்களை உடையோனே, நீ கவலைப்படுவதற்குக் காரணம் ஏதுமில்லை.

Bg 2.27 — பிறந்தவன் எவனுக்கும் மரணம் நிச்சயம், மரணமடைந்தவன் மீண்டும் பிறப்பதும் நிச்சயமே. எனவே, தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில், நீ கவலைப்படக் கூடாது.

Bg 2.28 — படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும் ஆரம்பத்தில் தோன்றாமல் இருந்தன, இடையில் தோன்றுகின்றன, இறுதியில் அழிக்கப்படும்போது மீண்டும் மறைகின்றன. எனவே, ஏன் கவலைப்பட வேண்டும்?

Bg 2.29 — சிலர் ஆத்மாவை ஆச்சரியமாகப் பார்க்கின்றனர், சிலர் அவனை ஆச்சரியமானவனாக வர்ணிக்கின்றனர், மேலும் சிலர் அவனை ஆச்சரியமானவனாகக் கேட்கின்றனர். வேறு சிலரோ, அவனைப் பற்றிக் கேட்ட பின்னும், அவனைப் புரிந்துகொள்ள இயலாதவராக உள்ளனர்.

Bg 2.30 — பரத குலத் தோன்றலே, உடலில் உறைபவன் ஒருபோதும் அழிக்கப்பட முடியாதவன், எனவே, எந்த உயிர்வாழிக்காகவும் நீ வருந்த வேண்டிய தேவையில்லை.

Bg 2.31 — சத்திரியன் என்ற முறையில் உனக்கென்று உரிய கடமையைப் பற்றிக் கருதும்போது, தர்மத்தின் கொள்கைகளுக்காகப் போர் புரிவதைக் காட்டிலும் வேறு சிறந்த கடமை உனக்கில்லை. எனவே, தயங்கத் தேவையில்லை.

Bg 2.32 — பார்த்தனே, வலியவரும் போர் வாய்ப்புகள் ஸ்வர்க லோகத்தின் கதவுகளைத் திறந்து விடுவதால், அவற்றைப் பெறும் அரச குலத்தோர் மகிழ்கின்றனர்.

Bg 2.33 — எனவே, போரிடுதல் என்னும் இந்த தர்மத்தின் கடமையில் நீ ஈடுபடாவிட்டால், உன்னுடைய கடமையிலிருந்து தவறியதற்கான பாவ விளைவுகளை நிச்சயமாகப் பெறுவதோடு, சிறந்த போர் வீரனெனும் புகழையும் இழப்பாய்.

Bg 2.34 — மக்கள் உன்னை எப்போதும் இகழ்ந்து பேசிக் கொண்டிருப்பர். மதிக்கத்தக்க ஒருவனுக்கு அவமானம் மரணத்தை விட மோசமானது.

Bg 2.35 — உன்னுடைய பெயரிலும் புகழிலும் பெருமதிப்பு கொண்டிருக்கும் மிகச்சிறந்த போர்த்தலைவர்கள், நீ பயத்தால் போர்க்களத்தை விட்டு விலகிவிட்டதாக எண்ணி, உன்னை முக்கியத்துவமற்றவனாகக் கருதுவர்.

Bg 2.36 — அன்பில்லாத வார்த்தைகள் பலவற்றைக் கூறி உனது எதிரிகள் உனது திறமையை நிந்திப்பர். அதைவிட மிகுந்த துன்பம் தரக்கூடியது வேறு என்ன இருக்க முடியும்?

Bg 2.37 — குந்தியின் மகனே, போர்க்களத்தில் நீ கொல்லப்பட்டால் ஸ்வர்கத்தை அடையலாம், வெற்றி பெற்றால் இவ்வுலகினை அனுபவிக்கலாம். எனவே, உறுதியுடன் எழுந்து போர் புரிவாயாக.

Bg 2.38 — இன்ப துன்பம், இலாப நஷ்டம், வெற்றி தோல்வி, இவற்றைக் கருதாது போருக்காகப் போர் புரிவாயாக—அவ்வாறு செயலாற்றினால், என்றும் நீ பாவ விளைவுகளை அடைய மாட்டாய்.

Bg 2.39 — ஸாங்கிய தத்துவத்தின் ஆய்வறிவை உனக்கு இதுவரை விளக்கினேன். பலனே எதிர்பாராமல் ஒருவன் செய்யும் யோகத்தைப் பற்றிய அறிவை, இப்போது கேள். பிருதாவின் மகனே, இந்த அறிவோடு செயல்பட்டால், கர்ம பந்தத்திலிருந்து நீயே உன்னை விலக்கிக்கொள்ள முடியும்.

Bg 2.40 — இம்முயற்சியில் குறைவோ இழப்போ இல்லை. இவ்வழியில் சிறிது முன்னேற்றமும், மிகப் பயங்கரமான பயத்திலிருந்து ஒருவனைக் காக்கும்.

Bg 2.41 — இவ்வழியிலுள்ளோர் தங்களது குறிக்கோளில் திடமான உறுதியுடன் இருப்பர், இவர்களது இலட்சியம் ஒன்றே. குரு வம்சத்தின் செல்வனே, உறுதியற்றவரது அறிவோ பல கிளைகளைக் கொண்டது.

Bg 2.42-43 — சிற்றறிவுடைய மனிதர்கள் வேதங்களின் மலர்ச் சொற்களால் கவரப்படுகிறார்கள். இவ்வாக்கியங்கள், ஸ்வர்க லோகங்களுக்கு ஏற்றம் பெறுதல், நற்பிறவி அடைதல், பதவி பெறுதல் போன்ற பலன்களை வழங்கும் பற்பல செயல்களைப் பரிந்துரைக்கின்றன. புலனுகர்ச்சியையும் செல்வமிகு வாழ்வையும் விரும்புவர், இதைவிட உயர்ந்தது ஏதுமில்லை என்று கூறுகின்றனர்.

Bg 2.44 — புலனின்பத்திலும் பௌதிகச் செல்வத்திலும் மிகுந்த பற்றுதல் கொண்டு, அதனால் மயங்கி உள்ளவர்களின் மனதில், முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டிற்கான திடமான உறுதி உண்டாவதில்லை.

Bg 2.45 — வேதங்கள், பொதுவாக பௌதிக இயற்கையின் முக்குணங்களைப் பற்றியவை. அர்ஜுனா, இம்மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்டவனாக ஆவாயாக. எல்லா இருமைகளிலிருந்தும் விடுபட்டு, பொருள்களை அடைதல், பாதுகாத்தல் ஆகிய கவலைகளிலிருந்தும் விடுபட்டு, தன்னில் நிலைபெறுவாயாக.

Bg 2.46 — சிறு கிணற்றால் பூர்த்தி செய்யப்படும் தேவைகள் அனைத்தும், பெரும் நீர்த்தேக்கத்தால் உடனே பூர்த்தி செய்யப்படும். அதுபோலவே வேதங்களின் நோக்கங்களெல்லாம் அவற்றிற்குப் பின்னால் உள்ள நோக்கங்களை அறிந்தவனால் அடையப் பெறும்.

Bg 2.47 — உனக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்ய மட்டுமே உனக்கு அதிகாரம் உண்டு, ஆனால் செயல்களின் பலன்களில் உனக்கு அதிகாரமில்லை. உனது செயல்களின் விளைவுகளுக்கு உன்னையே காரணமாக ஒருபோதும் எண்ணாதே. கடமையைச் செய்யாமலிருக்க ஒருபோதும் பற்றுதல் கொள்ளாதே.

Bg 2.48 — அர்ஜுனா, வெற்றி தோல்வியில் பற்றுதல் கொள்ளாமல், உனது கடமையை சமநிலையுடன் செய்வாயாக. இதுபோன்ற சமத்துவமே யோகம் என்று அழைக்கப்படுகிறது.

Bg 2.49 — தனஞ்ஜயா, அனைத்து மோசமான செயல்களையும் பக்தித் தொண்டின் உதவியினால் தூரமாக வைத்து விட்டு, சரணடைவாயாக. தமது செயல்களின் பலனை அனுபவிக்க விரும்புபவர் கஞ்சர்களேயாவார்கள்.

Bg 2.50 — பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவன், இந்த வாழ்விலேயே, நல்ல, தீய செயல்களின் விளைவுகளிலிருந்து தப்புகின்றான். எனவே, எல்லாச் செயல்களிலும் சிறந்ததான யோகத்திற்காகப் பாடுபடுவாயாக.

Bg 2.51 — இவ்விதமான பக்தித் தொண்டில் ஈடுபட்டு, சிறந்த முனிவர்கள் (பக்தர்கள்), பௌதிக உலகின் செயல்களின் வினைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டுள்ளனர். இவ்வழியில் அவர்கள் பிறப்பு இறப்பின் பந்தத்திலிருந்து விடுபட்டு எல்லா துன்பங்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை (முழுமுதற் கடவுளிடம் திரும்பிச் செல்வதன் மூலம் ) அடைகின்றனர்.

Bg 2.52 — எப்போதும் உன் அறிவு, மயக்கம் எனும் இவ்வடர்ந்த காட்டை தாண்டி விடுகிறதோ, அப்போது, இதுவரை கேட்டவை, இனி கேட்க வேண்டியவை இவற்றின் மீது நீ சமநிலையுடையவனாகி விடுவாய்.

Bg 2.53 — எப்போது உன் மனம் வேதங்களின் மலர்சொற்களால் கவரப்படாத நிலையை அடைகிறதோ, எப்போது அது தன்னுணர்வின் ஸமாதியில் நிலைத்திருக்கின்றதோ, அப்போது நீ தெய்வீக உணர்வை அடைந்து விட்டவனாவாய்.

Bg 2.54 — அர்ஜுனன் வினவினான்: தெய்வீக உணர்வில் இவ்வாறு நிலை பெற்றவனின் அறிகுறிகள் யாவை? அவனது மொழி என்ன? எவ்வாறு பேசுவான்? எப்படி அமருவான், எப்படி நடப்பான்?

Bg 2.55 — புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் கூறினார்: பார்த்தனே, எப்போது ஒருவன் தமது மனக் கற்பனையினால் எழும் புலனுகர்ச்சிக்கான எல்லா ஆசைகளையும் துறந்து, தூய்மையடைந்த மனதுடன் தன்னில் திருப்தியடைகின்றானோ, அப்போது அவன் தெய்வீக உணர்வில் நிலைபெற்றவனாக அறியப்படுகிறான்.

Bg 2.56 — மூவகைத் துன்பங்களால் பாதிக்கப்படாத மனம் உடையவனும், இன்பத்தில் மிக்க மகிழாதவனும், பற்றுதல், பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டவனுமான ஒருவன் ‘நிலைத்த மனமுடைய முனிவன் ‘ என்று அழைக்கப்படுகிறான்.

Bg 2.57 — இப்பௌதிக உலகில், எவனொருவன் நன்மை தீமைகளை அடையும்போது அவற்றால் பாதிக்கப்படாமல், அவற்றை புகழாமலும் இகழாமலும் இருக்கின்றானோ, அவன் பக்குவ அறிவில் நிலைபெற்றவனாவான்.

Bg 2.58 — ஆமை தன் அங்கங்களைக் கூட்டிற்குள் இழுத்துக் கொள்வதைப் போல, எவனொருவன் தன் புலன்களைப் புலனுகர்ச்சிப் பொருள்களிலிருந்து விலகிக் கொள்கிறானோ, அவன் பக்குவ உணர்வில் நிலைபெற்றவனாவான்.

Bg 2.59 — உடல் பெற்ற ஆத்மாவை புலனின்பத்திலிருந்து கட்டுப்படுத்தினாலும், புலனுகர்ச்சிப் பொருள்களுக்கான சுவை அப்படியே இருக்கும். ஆனால் புலனின்ப ஈடுபாடுகளை உயர்ந்த சுவையினால் ஒழிப்பவன், தனது உணர்வில் நிலைபெற்றுள்ளான்.

Bg 2.60 — அர்ஜுனா, கட்டுப்படுத்த முயலும் பகுத்தறிவுடைய மனிதனின் மனதையும், பலவந்தமாக இழுத்துச் செல்லுமளவிற்குப் புலன்கள் சக்தி வாய்ந்ததும் அடங்காததுமாகும்.

Bg 2.61 — புலன்களை அடக்கி, அவற்றை முழுக் கட்டுப்பாட்டில் வைத்து, தனது உணர்வை என்னில் நிறுத்துபவன், நிலைத்த அறிவுடையவன் என்று அறியப்படுகிறான்.

Bg 2.62 — புலன்நோக்குப் பொருள்களை சிந்திப்பதால், மனிதன் அதன் மேல் பற்றுதலை வளர்த்துக் கொள்கிறான். அந்தப் பற்றுதலில் இருந்து காமமும் காமத்திலிருந்து கோபமும் தோன்றுகின்றன.

Bg 2.63 — கோபத்திலிருந்து பூரண மயக்கமும், மயக்கத்தினால் நினைவு நிலை இழப்பும் ஏற்படுகின்றன. நுனைவு குழம்புவதால் அறிவு இழக்கப்படுகிறது, அறிவு இழக்கப்பட்டவுடன், ஒருவன் மீண்டும் ஜட வாழ்க்கையில் வீழ்கிறான்.

Bg 2.64 — எல்லாவிதமான விருப்பு வெறுப்புகளிலிருந்தும் விடுபட்டு, விடுதலைக்கான விதிகளால் புலன்களைக் கட்டுப்படுத்துபவன், கடவுளின் முழுக் கருணையை அடைய முடியும்.

Bg 2.65 — இவ்வாறு (கிருஷ்ண உணர்வில்) திருப்தியுற்றவனுக்கு, ஜட உலகின் மூவகைத் துன்பங்களால் பாதிப்பு ஏற்படுவதில்லை. இத்தகைய திருப்தியுற்ற உணர்வில் அவனது புத்தி வெகு விரைவில் நிலைபெறுகின்றது.

Bg 2.66 — பரமனுடன் (கிருஷ்ண உணர்வின் மூலமாக) தொடர்பு கொள்ளாமல், திவ்யமான அறிவையோ கட்டுப்பாடான மனதையோ அடைய முடியாது. இவையின்றி அமைதிக்கு வழியில்லை. அமைதி இல்லாவிடில் ஆனந்தம் எவ்வாறு உண்டாகும்?

Bg 2.67 — நீரின் மீதுள்ள படகை கடுங்காற்று அடித்துச் செல்வதைப் போல, அலைபாயும் புலன்களில் ஏதேனும் ஒன்றின் மீது மனம் ஈர்க்கப்பட்டு விட்டால், அந்த ஒரே ஒரு புலன் கூட மனிதனின் அறிவை இழுத்துச் சென்றுவிடும்.

Bg 2.68 — எனவே, பலம் பொருந்திய புயங்களை உடையவனே, எவனுடைய புலன்கள் புலனுகர்ச்சிப் பொருள்களிலிருந்து முற்றிமாக விலக்கப்பட்டுள்ளதோ, அவன் நிச்சயமாக நிலைத்த அறிவுடையவனாகிறான்.

Bg 2.69 — எல்லா உயிர்களுக்கும் எது இரவோ, அது சுயக் கட்டுப்பாடு உள்ளவனுக்கு விழித்தெழும் நேரமாகும். எல்லா உயிர்களுக்கும் எது விழித்தெழும் நேரமோ, அது ஆய்வறிவு கொண்ட முனிவனுக்கு இரவாகின்றது.

Bg 2.70 — நதிகள் கடலில் வந்து கலந்தாலும், கடல் மாறுவதில்லை. அது போல தடையின்றி வரும் ஆசைகளால் பாதிக்கப்படாதவன் மட்டுமே அமைதியை அடைய முடியும். அத்தகு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்புபவனல்ல.

Bg 2.71 — புலனுகர்ச்சிக்கான எல்லா விருப்பங்களைத் துறந்தவனும், ஆசைகள் இல்லாதவனும், உரிமையாளன் என்னும் எல்லா உணர்வுகளைத் துறந்திருப்பவனும், அஹங்காரம் இல்லாதவனுமான ஒருவனே உண்மை அமைதியை அடைய முடியும்.

Bg 2.72 — இதுவே ஆன்மீகமான தெய்வீக வாழ்விற்கு வழி. இதனை அடைந்த மனிதன் குழப்பமடைவதில்லை. இந்த நிலையை தனது மரணத் தருவாயில் அடைபவனும்கூட, இறைவனின் திருநாட்டிற்குள் நுழைகிறான்.

 

+16
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question