Thursday, April 18

ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் – 1

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻
குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் படைகளை கவனித்தல்

 

Bg 1.1 — திருதராஷ்ட்டிரர் கூறினார்: புண்ணிய யாத்திரைத் தலமான குருக்ஷேத்திரத்தில் போர்ப் புரிய விருப்பம் கொண்டு ஒன்று கூடிய பிறகு, என் மகன்களும், பாண்டுவின் புதல்வரும் என்ன செய்தனர் சஞ்ஜயனே?

Bg 1.2 — சஞ்ஜயன் கூறினான்: மன்னரே, பாண்டுவின் மகன்களால் அணிவகுக்கப்பட்ட படையை மேற்பார்வையிட்ட பிறகு, மன்னன் துரியோதனன் தன் ஆச்சாரியரை அணுகிப் பின்வருமாறு கூறினான்.

Bg 1.3 — ஆச்சாரியரே, துருபத குமாரனான உங்கள் புத்திசாலி சீடனால் நேர்த்தியாக அணிவகுக்கப்பட்ட, பாண்டு புத்திரர்களின் மாபெரும் படையைப் பாருங்கள்.

Bg 1.4 — அந்தச் சேனையில் பீமனுக்கு அர்ஜுனனுக்கும் சமமான வில்லாளிகள் பலரும் இருக்கின்றனர். யுயுதானன், விராடன், துருபதன் போன்ற மாபெரும் வீரர்கள் உள்ளனர்.

Bg 1.5 — மேலும், திருஷ்டகேது, சேகிதானன், காசிராஜன், புருஜித், குந்திபோஜன், ஷைப்யன் போன்ற சிறந்த பலமிக்க போர் வீரர்கள் பலரும் உள்ளனர்.

Bg 1.6 — வீரனான யுதாமன்யு, பலமுள்ள உத்தமௌஜன், சுபத்ரையின் புதல்வன் மற்றும் திரௌபதியின் குமாரர்களும் இருக்கின்றனர். இப்படை வீரர்கள் அனைவரும் மாபெரும் ரத வீரர்கள்.

Bg 1.7 — ஆனால், பிராமணரில் சிறந்தவரே, தாங்கள் தெரிந்து கொள்வதற்காக எனது சேனையை வழிநடத்தும் தகுதி வாய்ந்த நாயகர்களைப் பற்றியும் தங்களிடம் கூறுகிறேன்.

Bg 1.8 — மரியாதைக்குரிய தாங்கள், பீஷ்மர், கர்ணன், கிருபாசாரியர், அஷ்வத்தாமன், விகர்ணன் மற்றும் சோமதத்தனின் குமாரனான பூரிஷ்ரவன் முதலியோர், போரில் எப்போதும் வெற்றி காண்பவர்களே.

Bg 1.9 — எனக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய எண்ணற்ற மாவீரர்கள் பலரும் உள்ளனர். யுத்ததில் வல்லுநர்களான அவர்கள் அனைவரும் பலவிதமான ஆயுதங்களுடன் தயாராக உள்ளனர்.

Bg 1.10 — பாட்டனார் பீஷ்மரால் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட நமது பலம் அளக்கவியலாதது. ஆனால் பீமனால் கவனமாக பாதுகாக்கப்பட்ட பாண்டவ சேனையோ அளவிடக்கூடியதே.

Bg 1.11 — படை அணிவகுப்பின் நுழைவாயில் தத்தமது போர் முனைகளில் இருந்தபடியே நீங்கள் அனைவரும் பாட்டனார் பீஷ்மருக்கு முழுப் பாதுகாப்பளிக்க வேண்டும்.

Bg 1.12 — பின்னர், குரு வம்சத்தின் மாபெரும் வீரரும் பாட்டனாருமான பீஷ்மர், தனது சங்கை சிங்க கர்ஜனை போன்று உரக்க ஊதி துரியோதனனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார்.

Bg 1.13 — அதன்பின், சங்குகள், மத்தளங்கள், முரசுகள், கொம்புகள், தாறைகள் என அனைத்தும் ஒரே சமயத்தில் முழங்க, அப்பேரொலி மிகவும் பயங்கரமாக இருந்தது.

Bg 1.14 — மறுதரப்பில், வெள்ளைக் குதிரைகள் பூட்டிய மிகச்சிறந்த ரதத்தில் அமர்ந்திருந்த பகவான் கிருஷ்ணரும் அர்ஜுனனும் தங்களது தெய்வீக சங்குகளை முழங்கினர்.

Bg 1.15 — பகவான் கிருஷ்ணர் பாஞ்சஜன்யம் எனும் தனது சங்கை முழங்கினார்; அர்ஜுனன் தேவதத்தம் எனும் சங்கையும், பெருந்தீனிக்காரனும் வீர தீர சாகசங்களைப் புரிபவனுமான பீமன் பௌண்ட்ரம் எனும் அச்சமூட்டும் சங்கையும் முழங்கினர்.

Bg 1.16-18 — குந்தியின் புதல்வரான மன்னர் யுதிஷ்டிரர் அனந்த விஜயம் எனும் சங்கையும், நகுலனும் சகாதேவனும் சுகோஷம், மணிபுஷ்பகம் எனும் சங்குகளையும் முழங்கினர். பெரும் வில்லாளியான காசிராஜன், பெரும் வீரரான சிகண்டி, திருஷ்டத்யும்னன், விராடன், வெல்லவியாத சாத்யகி, துருபதன், திரௌபதியின் புதல்வர்கள் மற்றும் மாவீரனான சுபத்ரையின் மகனைப் போன்ற பலரும் தத்தமது சங்குகளை முழ்கினார்கள், மன்னரே.

Bg 1.19 — பல்வேறு சங்கொலிகளின் முழக்கம் பேரொலியாக எழுந்து பூமியும் வானமும் நடுங்குமாறு எதிரொலிக்க, திருதராஷ்டிரரின் மகன்களுடைய இதயங்கள் சிதறிப் போயின.

Bg 1.20 — அச்சமயத்தில், அனுமானின் கொடியைத் தாங்கிய தேரில் அமர்ந்திருந்த பாண்டுவின் மகன் அர்ஜுனன், தனது வில்லை ஏந்தி அம்புகள் எய்யத் தயாரானான். மன்னரே அணிவகுக்கப்பட்ட படையில் திருதராஷ்டிரரின் மைந்தர்களைக் கண்டவுடன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அர்ஜுனன் பின்வருமாறு கூறினான்.

Bg 1.21-22 — அர்ஜுனன் கூறினான்: வீழ்ச்சியடையாதவரே, போர் புரியும் ஆவலுடன் இங்கே கூடியுள்ளவர்களில், எவர்களோடு நான் இந்த மாபெரும் போரில் ஈடுபட வேண்டும் என்பதைப் பார்க்கும்படி, தயவுசெய்து எனது ரதத்தை இரு சேனைகளுக்கு மத்தியில் நிறுத்தவும்.

Bg 1.23 — கெட்ட புத்தியுடைய, திருதராஷ்டிரரின் மகனை மகிழ்விக்கும் விருப்பத்தோடு, இங்கு போர் புரிய வந்திருப்பவர்களை நான் பார்க்க வேண்டும்.

Bg 1.24 — சஞ்ஜயன் கூறினான்: பரத குலத்தவரே, அர்ஜுனன் இவ்வாறு கூறியவுடன், பகவான் கிருஷ்ணர் அவனது உத்தம ரதத்தை இருதரப்பு சேனைகளுக்கு மத்தியில் கொண்டு நிறுத்தினார்.

Bg 1.25 — பீஷ்மர், துரோணர், மற்றும் உலகத் தலைவர்களின் முன்னிலையில் “பார்த்தா, இங்கு கூடியிருக்கும் குரு வம்சத்தினரைப் பார்” என்று பகவான் கூறினார்.

Bg 1.26 — போர்க்களத்தில் இருதரப்புச் சேனைகளின் நடுவே நின்றபடி, தந்தைமார்கள், பாட்டனார்கள், ஆச்சாரியர்கள், மாமன்கள், சகோதரர்கள், மகன்கள், பேரன்கள், நண்பர்கள், மாமனார்கள், மற்றும் பல நலன் விரும்பிகளும் கூடியிருப்பதை அர்ஜுனனால் பார்க்க முடிந்தது.

Bg 1.27 — குந்தி மகனான அர்ஜுனன் பலதரப்பட்ட நண்பர்களையும் உறவினர்களையும் பார்வையிட்டபோது, கருணையில் மூழ்கி இவ்வாறு கூறினான்.

Bg 1.28 — அர்ஜுனன் கூறினான்: எனதன்பு கிருஷ்ணரே, போரிடும் உணர்வுடன் என் முன் கூடியுள்ள எனது நண்பர்களையும் உறவினர்களையும் கண்டு என் உடல் அங்கங்கள் நடுங்கி, வாய் உலர்வதை உணர்கிறேன்.

Bg 1.29 — என் உடல் முழுவதும் நடுங்குகின்றது, மயிர்க்கூச்செறி கின்றது, என் வில்லான காண்டீபம் கையிலிருந்து நழுவுகின்றது, தோல் எரிகின்றது.

Bg 1.30 — இனியும் என்னால் இங்கு நிற்க முடியாது. என் மனம் குழம்பி என்னையே மறக்கின்றேன். கேசி என்ற அரக்கனை அழித்தவரே, கிருஷ்ணரே, கெட்ட சகுனங்களை நான் காண்கிறேன்.

Bg 1.31 — சொந்த உறவினரை இப்போரில் கொல்வதால் என்ன நன்மை வருமென்பதை என்னால் காண முடியவில்லை. எனதன்பு கிருஷ்ணரே, இதில் பெறக்கூடிய வெற்றியையோ இராஜ்யத்தையோ இன்பத்தையோ நான் விரும்பவில்லை.

Bg 1.32-35 — கோவிந்தனே, ஆட்சி, மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கையையே கூட யாருக்காக நாம் விரும்புகிறோமோ, அவர்களே இப்போர்க்களத்தில் அணிவகுத்திருக்க, அவற்றை அடைவதால் என்ன பலன் வரப் போகின்றது? மதுசூதனரே, ஆச்சாரியர்கள், தந்தையர், பிள்ளைகள், பாட்டனார்கள், மாமன்கள், மாமனார்கள், பேரன்கள், மைத்துனர்கள், மற்றும் இதர உறவினர்கள் அனைவரும் தங்கள் வாழ்வையும் செல்வத்தையும் இழக்கத் தயாராக என்முன் நின்றிருக்க, அவர்கள் என்னைக் கொல்லலாம் என்ற பட்சத்திலும் நான் ஏன் அவர்களைக் கொல்ல விரும்ப வேண்டும்? உயிர்களையெல்லாம் காப்பவரே, இந்த பூமி ஒருபுறமிருக்கட்டும், மூவுலகம் கிடைப்பதாயினும், நான் இவர்களுடன் போர் செய்யத் தயாராக இல்லை. திருதராஷ்டிரரின் மகன்களைக் கொல்வதால் நாம் எவ்வித ஆனந்தத்தை அனுபவிக்கப் போகிறோம்?

Bg 1.36 — இத்தகைய அக்கிரமக்காரர்களைக் கொல்வதால் நமக்கு பாவமே வந்து சேரும். எனவே, திருதராஷ்டிரர் மகன்களையும் நமது நண்பர்களையும் கொல்லுதல் நமக்குச் சரியானதல்ல. அதிர்ஷ்ட தேவதையின் கணவரே, கிருஷ்ணரே, நமது சொந்த உறவினரைக் கொலை செய்துவிட்டு நாம் எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும்? இதனால் நமக்கென்ன லாபம்?

Bg 1.37-38 — ஜனார்தனரே, பேராசையால் இதயத்தை இழந்த இம்மனிதர்கள், நண்பர்களுக்கு துரோகம் செய்வதையும் குலநாசம் செய்வதையும் பாவம் என்று அறியவில்லை. ஆனால் அவற்றைக் குற்றம் என்று அறிந்த நாம், ஏன் இப்பாவச் செயல்களில் ஈடுபட வேண்டும்?

Bg 1.39 — குலம் அழிவடைவதால் நித்தியமான குல தர்மம் கெடுகின்றது. இதனால் வம்சத்தில் மீந்திருப்பவர்கள் அதர்மங்களில் ஈடுபடுவார்கள்.

Bg 1.40 — கிருஷ்ணரே, குலத்தில் அதர்மம் தலையெடுக்கும்போது, குடும்பப் பெண்கள் களங்கமடைகின்றனர்; பெண்மையின் சீரழிவால், விருஷ்ணி குலத்தவரே, தேவையற்ற சந்ததி உண்டாகிறது.

Bg 1.41 — தேவையற்ற ஜனத்தொகைப் பெருக்கம், குடும்பத்திற்கும் குடும்பப் பண்பாட்டை அழிப்போருக்கும் நிச்சயமாக நரக நிலையை ஏற்படுத்துகிறது. அதுபோன்ற சீர்குலைந்த குலங்களின் முன்னோர்கள் வீழ்ச்சியடைகின்றனர்; ஏனெனில், அவர்களுக்கு பிண்டமும் நீரும் அளிக்கக்கூடிய நிகழ்ச்சிகள் நடப்பதில்லை.

Bg 1.42 — குடும்பப் பண்பாட்டை அழித்து, தேவையற்ற குழந்தைகளைத் தோற்றுவிக்கும் தீயவர்களின் செயல்களால், அனைத்து வித ஜாதி தர்மங்களும் அழிவுறுகின்றன.

Bg 1.43 — மக்களைக் காக்கும் கிருஷ்ணரே, குல தர்மத்தைக் கெடுப்பவர் எப்போதும் நரகத்தில் வாழ்வதாக நான் சீடப் பரம்பரை வாயிலாகக் கேட்டுள்ளேன்.

Bg 1.44 — ஐயகோ! மாபெரும் பாவங்களைச் செய்ய நாம் துணிந்துள்ளோமே, ராஜ்ஜிய சுகத்தை அனுபவிக்கும் ஆசையால் உந்தப்பட்டு, சொந்த உறவினர்களையும் கொல்ல முனைந்து விட்டோம்.

Bg 1.45 — ஆயுதமின்றியும் எதிர்த்துப் போரிடாமலும் இருக்கின்ற என்னை, ஆயுதம் தாங்கிய திருதராஷ்டிரரின் மகன்கள் போரில் கொன்றால், அது எனக்கு அதிக நன்மையைக் கொடுக்கும்.

Bg 1.46 — சஞ்ஜயன் கூறினான்: போர்க்களத்தில் இவ்வாறு பேசிய அர்ஜுனன், தனது வில்லையும் அம்புகளையும் ஒருபுறம் எறிந்து விட்டு ரதத்தில் அமர்ந்துவிட்டான். அவனது மனம் சோகத்தால் மூழ்கியுள்ளது.

+21
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question