Translation:
இரண்டு வழிகளை ஒன்று போலக் கூறும் உமது அறிவுரையால், எனது புத்தி பேதலிக்கின்றது. எனவே, எனக்கு மிகவும் நன்மையானது எது என்பதை முடிவாகக் கூறுவீராக.
Purport:
பகவத் கீதைக்கு ஒரு முன்னுரையைப் போன்ற முந்தைய அத்தியாயத்தில், ஸாங்கிய யோகம், புத்தியோகம், புத்தியைக் கொண்டு புலன்களை அடக்குதல், பலன் கருதாது செயல்படுதல், புதியவரின் நிலை முதலிய பல்வேறு பாதைகள் விளக்கப்பட்டன. இவையனைத்தும் எவ்விதத் தெளிவான வரைமுறையுமின்றி கூறப்பட்டன. புரிந்து கொள்வதற்கும் செயல்படுத்துவதற்கும், முறைப்படுத்தப்பட்ட ஒரு வழிமுறை அவசியமாகும். எனவே, குழப்புவதைப் போலத் தெரியும் இவ்விஷயங்களை, பிழைகள் ஏதுமின்றி சாதாரண மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக தெளிவுபடுத்த விரும்புகிறான் அர்ஜுனன். வார்த்தை ஜாலத்தால் அர்ஜுனனை குழப்பவேண்டுமென்ற எண்ணம் கிருஷ்ணருக்குக் கிடையாது என்ற போதிலும், கிருஷ்ண உணர்வை ஏவ்வாறு பின்பற்றுவது (செயல்களைத் துறப்பதா அல்லது உற்சாகத்துடன் செயலாற்றுவதா) என்பதை அர்ஜுனனால் புரிந்து கொள்ள முடியவில்லை. வேறு விதமாகக் கூறினால், தனது கேள்விகளின் மூலம், பகவத் கீதையின் இரகசியத்தைப் புரிந்து கொள்ள விரும்பும் எல்லா மாணவர்களுக்கும், கிருஷ்ண உணர்வின் பாதையைச் சீரமைத்துக் கொடுக்கிறான் அர்ஜுனன்.