து: கேஷ்வ் அனுத்விக்ன-மனா:
ஸுகேஷு விகத-ஸ்ப்ருஹ:
வீத-ராக-பய-க்ரோத:
ஸ்தித-தீர் முனிர் உச்யதே
Synonyms:
து: க்கேஷு — மூவகைத் துன்பங்களில்; அனுத்விக்ன-மனா — மனதில் பாதிப்படையாமல்; ஸுகேஷு — இன்பத்தில்; விகத-ஸ்ப்ருஹ: — விருப்பமின்றி; வீத — விடுபட்டு; ராக — பற்று; பய — பயம்; க்ரோத: — கோபம்; ஸ்தித-தீர் — மனம் நிலைபெற்றவன்; முனி — முனிவன்; உச்யதே — அழைக்கப்படுகின்றான்.
Translation:
மூவகைத் துன்பங்களால் பாதிக்கப்படாத மனம் உடையவனும், இன்பத்தில் மிக்க மகிழாதவனும், பற்றுதல், பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டவனுமான ஒருவன் ‘நிஆலைத்த மனமுடைய முனிவன் ‘ என்று அழைக்கப்படுகிறான்.
Purport:
முனி என்னும் சொல், எந்தவொரு முடிவுக்கும் வராமல் பற்பல மனக் கற்பனைகளில் மனதை ஈடுபடுத்துபவன் என்று பொருள்படும். ஒவ்வொரு முனிக்கும் வேறுபட்ட கண்ணோட்டம் உண்டு, ஒரு முனி மற்ற முனிகளிடமிருந்து வேறுபடாவிட்டால், அவரை முனி என்று அழைப்பதில் அர்த்தமில்லை என்று சொல்லப்படுகிறது. நாஸாவ் ருஷிர் யஸ்ய மதம் நபின்னம் (மஹாபாரதம், வன-பர்வம் 313.117). ஆனால் ஸ்தித-தீர் முனி என்று பகவானால் இங்கே கூறப்படுவோர். சாதாரண முனிவரிடமிருந்து வேறுபட்டவர். கற்பனைக் கருத்துக்களை உருவாக்கும் தொழிலைக் கைவிட்டுவிடுவதால், ஸ்தித-தீர் முனி எப்போதும் கிருஷ்ண உணர்வில் இருக்கின்றார். அவர் ப்ரஷாந்த-நிஹ்ஷேஷ-மனோ-ரதாந்தர (ஸ்தோத்ர–ரத்னம் 43) என்று அழைக்கப்படுகிறார். அதாவது மனக் கற்பனையின் நிலைகளைக் கடந்து, வாஸுதேவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே எல்லாம் (வாஸுதேவ: ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு-துர்லப:) என்ற முடிவுக்கு வந்துவிட்டவர் என்று பொருள். இத்தகையவரே நிலைத்த மனமுடைய முனிவராவார். கிருஷ்ண உணர்வில் முழுமையாக இருக்கும் இத்தகையோன், மூவகைத் துன்பங்களின் கொடூரத் தாக்குதலுக்கு மத்தியிலும் சஞ்லமடைவதில்லை; ஏனெனில், அவன் எல்லாத் துன்பங்களையும் கடவுளின் கருணையாக எண்ணி ஏற்றுக்கொள்கிறான். மேலும், தன்னுடைய முந்தைய பாவங்களுக்காக தான் இன்னும் அதிக துன்பப்படவேண்டும் என்றும், கடவுளின் கருணையால் தனது துயரங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டதென்றும் எண்ணுகிறான். அதுபோலவே, அவன் மகிழ்ச்சியாக இருக்கும்போது, மகிழ்ச்சியை அனுபவிக்க தன்னைத் தகுதியற்றவனாகக் கருதி, அதற்கான பெருமைகள் அனைத்தையும் கடவுளுக்கு அளிக்கின்றான். மேலும், கடவுளின் கருணையினாலேயே இத்தகைய வசதியான சூழ்நிலையில் அவருக்கு சிறப்பான சேவைத் தன்னால் செய்ய முடிகின்றது என்று உணர்கிறான். இறைவனின் தொண்டில் எப்போதும் துணிவுடனும் விழிப்புணர்ச்சியுடனும் செயலாற்றுகிறான், பற்றினாலும் துறவினாலும் அவன் பாதிக்கப்படுவதில்லை. தனது புலனுகர்ச்சிக்காக பொருள்களை ஏற்றுக்கொள்வது ‘பற்றுதல் ‘ எனப்படும். அத்தகு புலனிச்சையின் பற்றிலிருந்து விலகுதல் ‘துறவு ‘ எனப்படும். ஆனால் கிருஷ்ண உணர்வில் நிலைபெற்றவனுக்கு பற்றுதலும் இல்லை, துறவும் இல்லை; ஏனெனில், அவனது வாழ்க்கை இறைவனின் தொண்டில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எனவே, தனது முயற்சிகள் வெற்றி பெறாதபோது, அவன் கொஞ்சம்கூட கோபமடைவதில்லை. வெற்றியோ தோல்வியோ, கிருஷ்ண உணர்விலுள்ளவன் தனது உறுதியில் எப்போதும் நிலையாக உள்ளான்.