பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பதினெட்டாம் அத்தியாயத்தின் மஹிமை
பார்வதி தேவி, சிவபெருமானிடம், “அன்பான கணவரே ! தாங்கள் இதுவரை ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினேழாம் அத்தியாயத்தின் மகிமைகளை பற்றி கூறினீர்கள். இப்பொழுது தயை கூர்ந்து பதினெட்டாம் அத்தியாயத்தின் மகத்துவத்தை பற்றி எடுத்துரைப்பீர்களாக” என்று கூறினார்.
சிவபெருமான் கூறினார், “இமையத்தின் புதல்வியே (பார்வதி) ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தின் மகிமைகளை கேட்பாயாக. இது அணைத்து வேதங்களை காட்டிலும் சிறந்ததாகும்; நித்தியமான ஆனந்தத்தை அளிக்கக்கூடியதாகும்; இந்த மகிமைகளை கேட்கும் எவரும் பௌதிக ஆசைகளை துறப்பர்; தூய்மையான ஒரு பக்தருக்கு இது அமிர்தமாகும்; பகவான் விஷ்ணுவின் உயிராகும்; தேவேந்திரருக்கும் மற்றும் அணைத்து தேவர்களுக்கும், சனகர் மற்றும் சனந்தர் போன்ற யோகிகளுக்கும் இது ஆறுதலாகும்; இதை படிப்பவர்கள் யமதூதர்களை விலக செய்கின்றனர்; பௌதிக உலகத்தின் துன்பங்களிலிருந்தும் அணைத்து விதமான பாவங்களிலிருந்தும் ஒருவர் விடுபடவேண்டுமென்றால் இதை படிப்பதை தவிர வேறேதுவும் செய்யவேண்டியதில்லை; இப்போது கவனமாக கேட்பாயாக”.
மேரு பர்வதத்தின் சிகரத்தில் விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்ட “அமராவதி” என்ற தேவலோகம் உள்ளது. அதற்குள் தேவேந்திரரும் அவரது மனைவியும் அனைத்து தேவர்களின் சேவையை ஏற்று வருகின்றனர். ஒரு நாள் தேவேந்திரர் தன் அரியணையில் மிகவும் அமைதியாக அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மிக அழகாக ஒரு மனிதன் வருவதை கவனித்தார். அந்த மனிதனுக்கு விஷ்ணுதூதர்கள் சேவை செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்துக்கொண்டிருந்த தேவேந்திரர், நிலை தடுமாறி அறியணையிலிருந்து கிழே விழுந்தார். அப்போது அவர் தலையில் அணிந்திருந்த மகுடமும் கிழே விழுந்தது. தேவேந்திரருக்கு சேவை செய்து கொண்டிருந்த தேவர்கள், இதை கவனித்தவுடன், அந்த மகுடத்தை எடுத்து அந்த அழகான மனிதனுக்கு சூட்டினார்கள். அந்த மனிதனை புதிய இந்திரராக ஏற்று அனைத்து தேவர்களும் அவருக்கு ஆரத்தி செய்து கீர்த்தனங்கள் பாடி அவரை வணங்கினார்கள். பல ரிஷிகள் அங்கு வருகை தந்து அவரை ஆசிர்வதித்து வேத பாராயணங்கள் செய்தனர். அப்சரஸ்களும் கந்தர்வர்களும் அங்கு வருகை தந்து மிகவும் மகிழ்ச்சியாக ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தனர். இவ்வாறாக, புதிய இந்திரன் எந்த விதமான அஸ்வமேத யாகங்களையும் செய்யாமலேயே தேவர்களின் சேவையை அனுபவித்துக்கொண்டிருந்தார். இதை பார்த்துக்கொண்டிருந்த உண்மையான இந்திரருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.
அவர் தனக்குத்தானே நினைத்துக்கொண்டார், “இந்த புதிய மனிதன் இதுவரை கிணறுகளோ, ஆறோ, குளமோ, அமைக்கவில்லை; மரக்கன்றுகள் கூட நட்டதில்லை;பஞ்சம் வந்தபோது யாருக்கும் தானம் கூட வழங்கவில்லை; எந்த விதமான யாகங்களையும் செய்ததில்லை; புனித தாமத்திற்கு எந்த தானமும் செய்ததில்லை. இவ்வாறிருக்க என்னுடைய பதவியை இவன் எவ்வாறு அடைய முடியும்?”. மனதில் இத்தனை சந்தேகங்களுடன், தேவேந்திரர் பகவான் விஷ்ணுவை தரிசிக்க பாற்கடலுக்கு சென்றார். ஒரு வழியாக பகவான் விஷ்ணுவின் தரிசனம் கிடைத்த பிறகு, தேவேந்திரர் விஷ்ணுவிடம், “பகவான் விஷ்ணுவே! முன்னொரு காலத்தில் நான் பல யாகங்களையும், பல புண்ணிய காரியங்களையும் செய்ததன் பலனாக தேவேந்திரராக பொறுப்பேற்கும் வாய்ப்பினை பெற்றேன். ஆனால் இந்த முறை இந்திரராக பொறுப்பேற்றிருக்கும் அந்த மனிதன் தன் வாழ்வில் எந்த விதமான யாகங்களோ, புண்ணிய காரியங்களோ செய்ததாக தெரியவில்லை. அப்படியிருக்கையில் எவ்வாறு என் பதவியை அடைந்தான்?” என்று வினவினார்.
பகவான் விஷ்ணு கூறினார், “அந்த தூய ஆத்மா, தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தின் ஐந்து ஸ்லோகங்களை படித்து வந்ததன் காரணமாகவே, இவ்வளவு யாகங்கள் மற்றும் புண்ணிய காரியங்கள் செய்த பலன்களை அனுபவிக்க முடிந்தது. சொர்கத்தின் அதிபதியாக பல ஆண்டுகள் அனுபவித்து விட்டு அந்த ஆத்மா என்னை வந்தடையும். தாங்களும் இவ்வாறு தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தை படித்து வந்தால் வெகு விரைவாக என்னுடைய தாமத்தை வந்தடையலாம்”.
பகவான் விஷ்ணு கூறியதை கேட்ட தேவேந்திரர், ஒரு பிராமணருடைய தோற்றத்தில், கோதாவரி நதிக்கரைக்கு வந்தார். அங்கு கலெக்ரானி என்ற புனித கிராமம் இருந்தது. அந்த இடத்தில் பகவான் “காலேஷ்வர் ” என்ற பெயரால் வழிபடப்படுகிறார். அந்த நதிக்கரையில் ஒரு தூய்மையான பிராமணர் வசித்து வந்தார். அவருக்கு அணைத்து வேத சாஸ்திரங்களின் குறிக்கோள் மற்றும் இரகசியம் மிக தெளிவாக தெரிந்திருந்தது. ஆகையால் தினமும் அவர் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தை அங்கு அமர்ந்து படிப்பார். இதை கண்ட தேவேந்திரர், மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். சிறிதும் தாமதிக்காமல், அந்த பிராமணரின் பாதங்களில் விழுந்து வணங்கி ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தை தனக்கு கற்றுத்தருமாறு வேண்டினார். அதை கற்றறிந்த பிறகு, சிறிது காலத்திற்கு அதை தினமும் வாசித்தார். அதன் பலனாக ஒரு வழியாக விஷ்ணுலோகத்தை சென்றடைந்தார். அங்கு சென்றபிறகுதான் அவருக்கு தெரிந்தது, விஷ்ணுலோகத்தில் அனுபவிக்கும் பேரானந்தத்தை ஒப்பிடுகையில், தான் தேவேந்திரனாக இருந்த போது அனுபவித்தது ஒன்றுமில்லை என்று.
எனதன்பு பார்வதியே, இதனால் தான் பல மாமுனிவர்கள் குறிப்பாக ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தை தினமும் வாசிக்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் பகவான் விஷ்ணுவின் திருப்பாதங்களை வெகு விரைவாக சென்றடைய முடியும்.
I need to read the 18th chapter
You want to read Bhagavad Gita, Click here – http://bhaktiyogam.com/பகவத்-கீதை-அத்தியாயம்-18
How to read the 18th chapter