Tuesday, November 19

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 3 (ஜடா வின் கதை) Gita mahatmiya Chapter-3 (Story of Jada)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻


பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை மூன்றாவது அத்தியாயத்தின் மஹிமை

பகவான் விஷ்ணு கூறினார், ” எனதன்பு லட்சுமியே, ஜனஸ்தான் என்ற ஊரில் ஜடா என்ற கௌஷிக்க வம்சத்தில் பிறந்த பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் பிராமணர்களுக்கு என்று சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட எந்த செயலையும் செய்யாமல் பல அதர்ம காரியங்களை செய்து வந்தார். மது அருந்துவது, சூதாடுவது, பெண்கள் மற்றும் மிருகங்களை வேட்டையாடுவது என அனைத்திலும் ஈடுபட்டு, தன் செல்வத்தை வீணாக்கினார். ஆகையால் வட நாட்டிற்கு சென்று செல்வம் ஈட்டி வரலாம் என்று எண்ணி அவ்வாறே செய்தார். சில காலம் கழித்து தான் ஈட்டிய செல்வத்துடன் ஜனஸ்தான் திரும்ப எண்ணினார். 

 

    வெகு தூரம் பயணம் செய்ததால் மிகவும் களைப்படைந்த ஜடா சிறிது ஓய்வெடுக்க எண்ணினார். சூரியன் அஸ்தமிக்கும் வேளையில், பாலைவனம் போல் இருந்த அந்த இடத்திலிருந்த ஒரு மரத்தடியில் உறங்கினார். அப்போது சில திருடர்கள் அங்கு வந்து ஜடாவை அடித்து கொன்று அவரிடமிருந்த செல்வம் அனைத்தையும் திருடி சென்றுவிட்டனர்.தன் வாழ்நாள் அனைத்திலும் ஒரு நல்ல காரியம் கூட செய்யாமல் பாவச்செயல்களையே செய்து வந்த ஜடா, இறப்பிற்கு பின் ஆவி ஆனார்.

    ஜடாவின் மகன் வேத சாஸ்திரங்கள் அறிந்தவராகவும் இறைபக்தி உள்ளவராகவும் இருந்தார். வடநாடு சென்ற தன் தந்தை இன்னும் ஊர் திரும்பாததால், அவரை தேடி அவர் மகன் சென்றார். நாள்கணக்கில் தன் தந்தையை தேடி இங்கும் அங்கும் அலைந்த அவர், பார்ப்பவர்கள் அனைவரிடமும் தன் தந்தையை பற்றி விசாரிக்கவும் செய்தார்.

    ஒரு நாள் அவர் தன் தந்தையின் நண்பரை சந்திக்க நேர்ந்தது. அவர் ஜடா எவ்வாறு இறந்தார் என்று இவருக்கு விளக்கினார். தன் தந்தையின் மரணத்தை பற்றி கேட்ட அவர், பெனாரஸில் உள்ள காசிக்கு சென்று தன் தந்தைக்கு பிண்டம் அளித்து அவரை நரகத்திலிருந்து விடுவிக்க முடிவெடுத்தார். எனவே காசி நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தார். அவரது பயணத்தின் ஒன்பதாவது நாளில் தன் தந்தை கொல்லப்பட்ட அதே மரத்தின் கீழ் ஓய்வெடுத்தார்.

    மாலை வேளையில் பகவான் கிருஷ்ணரை வணங்கிவிட்டு ஸ்ரீமத் பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயத்தை படித்தார். அவர் படித்து முடித்ததும் ஒரு பெரும் சத்தம் வானிலிருந்து கேட்டது. உடனே மேலே பார்த்த அவர் ஆச்சரியப்பட்டார். மேலே அவரது தந்தை நான்கு கரங்களுடன் கார்மேக வண்ணத்தில் மஞ்சள் நிற ஆடை அணிந்து மிகவும் அழகாக இருந்தார். அவருடைய உடலிலிருந்து வந்த தேஜஸ் அந்த இடத்தையே ப்ரகாசப்படுத்தியது. அவர் தன் மகனுக்கு ஆசிகளை வழங்கினார். நடக்கும் நிகழ்வுகள் பற்றி புரியாமல் மகன் தன் தந்தையிடம் குழப்பத்துடன் வினவினார். அதற்கு தந்தை, “என் அன்பு மகனே, நீ ஸ்ரீமத் பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயத்தை படித்ததால், பல பாவ காரியங்களை செய்ததன் விளைவாக நான் அடைந்த இந்த ஆவி ரூபத்திலிருந்து நான் விடுதலை பெற்றேன். எனவே நீ இப்போது வீட்டிற்கு செல்லலாம். ஏனெனில் காசிக்கு சென்று நீ செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தும், நீ ஸ்ரீமத் பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயத்தை படித்ததன் மூலமாக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

    மிகவும் மகிழ்ந்த மகன், தன் தந்தையிடம் வேறு ஏதாவது செய்ய வேண்டுமா என்று வினவினான். அதற்கு தந்தை, “என்னுடைய சகோதரனும் என்னை போலவே பாவ காரியங்களை செய்தவன். இறப்பிற்கு பின்னர் அவன் இப்போது நரகத்தில் துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறான். அவனையும் மேலும் நரகத்தில் இருக்கும் நம்முடைய மற்ற மூதாதையர்களையும் நீ விடுவிக்க எண்ணினால் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயத்தை படித்து வா. இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் அனைவரும் பகவான் விஷ்ணுவை போல ரூபம் அடைந்து வைகுந்தத்திற்கு திரும்புவர்” என்று தன் மகனிடம் வேண்டினார்.

    தந்தையுடைய வேண்டுதலை கேட்ட மகன், “ஸ்ரீமத் பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயத்தை படித்தால் நரகத்தில் இருக்கும் ஆத்மாக்களை விடுவிக்க முடியும் என்றால், இன்றிலிருந்து நரகத்தில் உள்ள அனைவரும் விடுதலை ஆகும் வரை நான் தொடர்ந்து படிப்பேன்” என்று தந்தைக்கு வாக்களித்தார். தந்தையும் “அவ்வாறே ஆகட்டும்” என்று ஆசிர்வதித்தார். அதன் பிறகு ஆன்மிக லோகத்திலிருந்து வந்த விமானம் மூலம் தந்தை பகவானிடம் சென்றார்.

    தந்தையின் கட்டளையை ஏற்ற மகன் ஜனஸ்தானுக்கு திரும்பி, பகவான் கிருஷ்ணரின் முன்பு அமர்ந்து, நரகத்தில் துன்பப்படும் அனைவரையும் விடுவிக்கும் நோக்கத்துடன் ஸ்ரீமத் பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்தார். இவர் படிப்பதை பார்த்த பகவான் விஷ்ணு, தனது விஷ்ணு தூதர்களை, நரகத்தின் அதிபதியான யமதர்மராஜாவை சந்திக்க அனுப்பினார். யமலோகம் அடைந்த விஷ்ணு தூதர்கள், யமராஜாவிடம், “பிரபு, பாற்கடல் வாசியான பகவான் விஷ்ணு, தங்கள் நலனை மிகவும் விசாரித்தார். அதோடல்லாமல், நரகத்தில் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் அனைத்து ஆத்மாக்களையும் உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டார்” என்று கூறினர்.

    பகவான் விஷ்ணுவின் ஆணையை கேட்ட யமதர்மராஜன், உடனடியாக நரகத்திலிருந்து அனைவரையும் விடுவித்தார். அதோடு, விஷ்ணுதூதர்களுடன் அவரும் சுவேததீபம் என்னும் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பகவான் விஷ்ணுவை தரிசிக்க சென்றார்.

    அங்கு பகவான் ஸ்ரீ விஷ்ணு, அனந்த சேஷன் மீது சயனித்திருந்தார். அவருடைய உடல் சூரியனை காட்டிலும் மிகுந்த தேஜஸுடன் இருந்தது. அதிர்ஷ்ட தேவதையான மஹாலக்ஷ்மி தேவியார், அவருடைய பாதங்களை பிடித்துக்கொண்டிருந்தார். அவரை சுற்றிலும் ரிஷிகள், முனிவர்கள், முப்பத்துமுக்கோடி தேவர்கள், அவர்களின் தலைவரான தேவேந்திரர் அனைவரும் பகவானுடைய புகழை பாடிக்கொண்டிருந்தனர். ப்ரம்மதேவரும் அங்கு வேத பாராயணம் செய்து கொண்டிருந்தார். இவையனைத்தையும் கண்ட எமதர்மராஜா, பகவானை வணங்கி விட்டு பின்வருமாறு போற்றினார், “பகவான் விஷ்ணுவே, தாங்கள் அனைத்து கட்டுண்ட ஆத்மாக்களின் நலம்விரும்பி ஆவீர்கள். தங்களுடைய புகழுக்கு எல்லையே இல்லை. தாங்களே காலம் ஆவீர்கள்; தங்களிலிருந்தே வேதங்கள் தோன்றின; குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் தாங்களே இவையனைத்தையும் அழித்து விடுவீர்கள்; மூவுலகங்களையும் காப்பவர் தாங்களே; ஒவ்வொருவரின் இதயத்திலும் பரமாத்மாவாக தாங்கள் வீற்றிருந்து அவர்களை வழி நடத்துகிறீர்கள்; முழு பிரபஞ்சத்திற்கும் தாங்களே குரு; அனைத்து பக்தர்களின் இறுதி லட்சியம் தாங்கள்; தாமரை கண்ணனே, என்னுடைய பணிவான வணக்கங்களை ஏற்பீராக”.

    கைகளை கூப்பியவாறு பகவானை போற்றிய எமதர்மராஜா, மேலும் தொடர்ந்தார், “தங்களின் விருப்பப்படி, அனைவரையும் நரகத்திலிருந்து விடுவித்துவிட்டேன். நான் மேலும் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுங்கள்” என்று கூறினார். பகவான் விஷ்ணு இனிய குரலில், “அன்பு யமதர்மா, நீ பாரபட்சம் பார்க்காதவன்; உனது கடமைமைகளை தவறாமல் செய்பவன். ஆகையால் நான் உனக்கு உத்தரவளிக்க வேண்டியதில்லை; யமலோகம் திரும்பி சென்று, எனது ஆசிகளுடன் உனது பணியினை தொடர்வாயாக” என்று பதிலளித்தார்.

    பகவான் விஷ்ணு யமதர்மராஜாவின் பார்வையிலிருந்து மறைந்ததும் எமதர்மராஜா யமலோகம் திரும்பி சென்றார். பூலோகத்தில் அந்த பிராமணரும் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் மூன்றாம் அத்தியாயத்தை படித்து கொண்டே இருந்தார். ஆகையால் அணைத்து துன்பப்படும் ஆத்மாக்களும் நரகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கொண்டேயிருந்தனர். பின்னர் ஒரு நாள், விஷ்ணு தூதர்கள் வந்து பிராமணரையும் விஷ்ணுலோகம் அழைத்துச்சென்றனர். அங்கு அவர் நித்தியமாக பகவானுடைய பாத கமலங்களை சேவை செய்யும் பாகியத்தை பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question