பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் இரண்டாம் அத்தியாயத்தின் மஹிமை
பகவான் விஷ்ணு, ” எனதன்பு லட்சுமியே, இதுவரை ஸ்ரீமத் பகவத் கீதையின் முதல் அத்தியாயம் பற்றிய சிறப்புகளை கேட்டறிந்தாய். இப்பொழுது, நான் பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயத்தின் சிறப்புகளை பற்றி வர்ணிக்கப்போகிறேன். இதையும் கவனமாக கேட்பாயாக”, என்று கூறினார்.
தென்னிந்தியாவிலுள்ள பந்தர்பூர் என்னும் ஊரில், தேவாஷ்யாமா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் அனைத்து விதமான யாகங்களை செய்யக்கூடியவராகவும், தன் இல்லத்திற்கு வரும் அனைவரையும் நன்கு உபசரிக்க தெரிந்தவராகவும் இருந்தார். இதனால் அனைத்து தேவர்களையும் திருப்திப்படுத்தவும் செய்தார். ஆனால் தன் மனதளவில் நிம்மதியும் சந்தோஷமும்
இல்லாமல் இருந்தார். அவருக்கு தன் ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையே உள்ள உறவை பற்றிய ஞானத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்று மிகவும் விருப்பமுண்டு. இந்த ஞானத்தை பெறுவதற்காக அவர், தன் இல்லத்திற்கு பெரும் யோகிகளையும் முனிவர்களையும் அழைத்து வந்து நன்கு உபசரித்து அவர்களுக்கு சேவை செய்து அதன் பின்னர் அவர்களிடம் பரம்பொருளை பற்றிய ஞானத்தை கேட்டறிவார். இவ்வாறாக அவர் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை கழித்தார்.
ஒரு நாள் அவர் ஒரு யோகியை சந்திக்க நேர்ந்தது. அந்த யோகி, தன் பார்வையை மூக்கின் நுனியில் நிறுத்தியவாறு முற்றிலும் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த யோகியை பார்த்தவுடன் தேவஷ்யாமாவுக்கு, இவர் எந்த விதமான பௌதிக ஆசைகள் இல்லாதவராகவும், முற்றிலும் மன நிறைவு பெற்றவராகவும் தோன்றியது. உடனே தேவஷ்யாமா மிகுந்த மரியாதையுடன் அவர் பாதங்களில் விழுந்து வணங்கி, அவரிடம் முழு மனநிறைவை எவ்வாறு அடைவது என்று கேட்டார். முழு முதற்கடவுளான பகவான் கிருஷ்ணரை பற்றிய ஞானத்தை பெற்றிருந்த யோகி, தேவஷ்யாமாவை உடனடியாக சௌபுர் என்னும் கிராமத்திற்கு சென்று மித்ரவான் என்ற ஆடு மேய்க்கும் நபரை சந்தித்து, அவரிடமிருந்து கடவுளை உணர்வதற்கான ஞானத்தை பெற்றுவருமாறு கூறினார்.
யோகி கூறியதை கவனமாக கேட்ட தேவஷ்யாமா மீண்டும் அவரை வணங்கி விட்டு உடனடியாக சௌபுர் கிராமத்திற்கு புறப்பட்டார். சௌபுரை அடைந்த அவர், மித்ரவான் வடக்கு பகுதியிலிருக்கும் காட்டில் வசிக்கிறார் என்று அறிந்துகொண்டு, அங்கு சென்றார். அங்கு அவர் பார்த்த காட்சி மிகவும் அற்புதமானதாக இருந்தது. காட்டின் நடுவில் ஒரு சிறிய ஆற்றங்கரையில் உள்ள பாறைகளின் மீது மித்ரவான் மிகவும் அழகாகவும் அமைதியாகவும் அமர்ந்து கொண்டிருந்தார். மிகுந்த நறுமணம் கொண்ட தென்றல் காற்று காடு முழுவதும் அனைத்து திசைகளிலும் வீசிக்கொண்டிருந்தது. எந்த விதமான பயமுமின்றி ஆடுகள் அனைத்தும் அமைதியாக மேய்ந்துகொண்டிருந்தன. ஒரு சில ஆடுகள் புலி மற்றும் வேறு சில கொடிய விலங்குகளின் அருகில் கூட பயமின்றி அமர்ந்து கொண்டிருந்தது.
இந்த அற்புத காட்சியை கண்ட தேவஷ்யாமா மிகுந்த மன அமைதியோடு மித்ரவானை நெருங்கி அவர் அருகில் அமர்ந்தார். அவரிடம், “எவ்வாறு கிருஷ்ண பக்தியை அடைய முடியும்?” என்று ஆர்வத்தோடு வினவினார். மித்ரவான் இந்த கேள்வியை கேட்டதும், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். பின்னர், “எனதன்பு தேவஷ்யாமரே, சில காலம் முன்பு, நான் ஒரு நாள் காட்டிற்குள் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும்போது, ஒரு பயங்கரமான புலி எங்களை தாக்க வந்தது. நானும் எனது ஆடுகளும் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்க்காக அங்கும் இங்கும் ஓடி ஒளிந்தோம். ஆனாலும் ஒரு ஆடு அந்த புலியிடம் மாட்டிக்கொண்டது. அந்த புலி ஆட்டை இந்த ஆற்றங்கரைக்கு இழுத்து வந்து தன் பசியை தீர்த்துக்கொள்ள எண்ணியது. ஆனால் அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. புலி ஆட்டை அடித்து கொல்லாமல் அமைதியாக இருந்தது. உடனே என் ஆடு புலியிடம், ” புலியே ஏன் என்னை அடித்து கொன்று உண்ண மறுக்கிறாய்? உன் உணவு தான் கிடைத்து விட்டதல்லவா? பின்னர் என்ன தயக்கம்?” என்று கேட்டது.
புலி ஆட்டிடம், “மிகவும் பிரியமான ஆடே, இந்த ஆற்றங்கரைக்கு வந்ததும் என் கோபம், பசி, தாகம் அனைத்தும் அடங்கி விட்டது” என்று பதிலளித்தது. அதற்கு ஆடு, ” ஆமாம், எனக்கு கூட பயம் நீங்கி விட்டது. மரணத்தின் விளிம்பில் கூட நான் மிகவும் அமைதியாக இருக்கிறேன். இதற்கான கரணம் என்ன? உனக்கு தெரிந்தால் கூறு ” என்று புலியிடம் கேட்டது.
புலி, “எனக்கும் தெரியவில்லை. உன் முதலாளியிடமே கேட்போம்” என்று கூறி ஆடும் புலியும் என்னை நோக்கி வந்தன. எனக்கும் விடை தெரியாததால், அந்த ஆற்றங்கரையில் உள்ள ஒரு மரத்தில் இருந்த குரங்கிடம் கேட்டோம். உடனே குரங்கு ராஜன், “கவனமாக கேளுங்கள், இது மிகவும் புராணமான கதை. இந்த ஆற்றங்கரையில் உள்ள கோவிலில் பகவான் பலராமர் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். அப்போது பல நற்காரியங்களை செய்யும் ஸுகர்மா என்ற சாது இருந்தார். அவர் தினமும் காட்டிலிருந்து மலர்களையும் ஆற்றிலிருந்து நீரையும் எடுத்து வந்து சிவ பெருமானை வணங்கி வந்தார்.
இவ்வாறாக அவர் காலத்தை கழித்து வந்தார். அப்போது அங்கு ஒரு முனிவர் வந்தார். அவருக்கும் ஸுகர்மா காய் கனிகளையும் நீரும் தந்து உபசரித்தார். பின்னர் அவரிடம், “அறிவில் சிறந்தவரே, பகவான் கிருஷ்ணர் பற்றிய ஞானத்தை பெறுவதற்காக மட்டுமே நான் இங்கு வசித்து புண்ணிய காரியங்களை செய்து வருகிறேன். அதன் பலனாக இன்று தங்களை சந்திக்கும் பாக்கியம் பெற்றேன்” என்று கூறினார்.
மிகுந்த பணிவுடன் ஸுகர்மா கூறியதை கேட்ட முனிவர் ஸுகர்மா மீது இரக்கம் கொண்டு, அருகில் இருந்த பாறையில் ஸ்ரீமத் பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயத்தை எழுதினார். பின்னர் ஸுகர்மாவிடம் தினமும் இதனை முழுவதுமாக படிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், “இதை படித்தால் உனது இலட்சியத்தை விரைவில் அடைய முடியும்” என்று கூறினார். இவ்வாறு பேசியதும் அந்த முனிவர் அவ்விடத்தை விட்டு மறைந்தார். அவர் கூறியவாறு ஸுகர்மா தினமும் அந்த சுலோகங்களை படித்து வந்தார். வெகு விரைவில் அவர் பகவான் கிருஷ்ணரை பற்றிய முழு ஞானத்தையும் அடைந்தார். அதோடு அவருக்கு பசியும் தாகமும் இல்லாமலே போனது. இதன் காரணமாகவே இங்கு வரும் எவருக்கும் பசியோ தாகமோ எடுப்பதில்லை. அவர்கள் மிகவும் அமைதி அடைந்து விடுவார்கள்.
மித்ரவான் தொடர்ந்தார், “எனதன்பு தேவஷ்யாமா, குரங்கு ராஜன் எங்களுக்கு இந்த அற்புத நிகழ்வை விளக்கியதும், நானும் எனது அனைத்து ஆடுகளும் மேலும் புலியுடன் அந்த கோவிலுக்கு சென்றோம். அங்கு பாறையில் எழுதப்பட்டிருந்த ஸ்ரீமத் பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயத்தை படித்தோம். அன்றிலிருந்து தினமும் அனைவரும் தினமும் படிக்கிறோம். இந்த மூலமாகவே கிருஷ்ண பக்தியை வெகு விரைவாக எங்களால் அடைய முடிந்தது. எனவே நீயும் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயத்தை படித்து வந்தால் பகவான் கிருஷ்ணரின் கருணையை வெகு விரைவில் அடையலாம்”.
பகவான் விஷ்ணு, “எனதன்பு லட்சுமியே, இவ்வாறு ஞானத்தை மித்ரவானிடமிருந்து பெற்ற தேவஷ்யாமா மித்ரவானை வணங்கி விட்டு பந்தர்பூருக்கு திரும்பி, தினமும் இரண்டாம் அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்தார். அதோடு பந்தர்பூர் வருபவர்கள் அனைவருக்கும் இரண்டாம் அத்தியாயத்தை படித்து காண்பித்தார். இவ்வாறு தேவ ஷ்யாமா பகவான் கிருஷ்ணரின் பாத கமலங்களை சென்றடைந்தார். இதுவே ஸ்ரீமத் பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயத்தின் சிறப்பு” என்று கூறினார்.
Hare Krishna
🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் ஹரே கிருஷ்ணா
அருமையான குரல் வளம் வாசித்து காண்பித்தமைக்காக தங்களுக்கு மிக்க நன்றி
ராதே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா