Sunday, December 22

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 15 I Gita mahatmiya Chapter-15

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பதினைந்தாம் அத்தியாயத்தின் மஹிமை

  சிவபெருமான் கூறினார், “எனதன்பு பார்வதியே, இப்போது நான் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி கூறப்போகிறேன். கவனமாக கேட்பாயாக”. 

    கௌடதேசத்தில், நரசிம்ஹா என்ற ஒரு அரசர் இருந்தார். அவர் தேவர்களையே தோற்கடிக்கும் அளவிற்கு மிகவும் சக்தி கொண்டிருந்தார். அவருடைய படைத்தளபதியின் பெயர், ஸரப்மெரூன். அவன் மிகவும் பேராசை கொண்டவனாக இருந்தான். அவனும் இளவரசனும் சேர்ந்து அரசரை கொள்ள திட்டமிட்டனர். ஆனால் அவன் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பே, காலரா நோய் வந்து இறந்து போனான். அடுத்த பிறவியில் அவன் சிந்து தேசத்தில் ஒரு குதிரையாக பிறந்தான். அந்த குதிரை மிக அழகாகவும், வேகமாக ஓடக்கூடியதாகவும் இருந்தது. ஒரு முறை கௌடதேசத்தில் இருந்து சிந்து தேசத்திற்கு வந்த ஒரு வணிகர், இந்த குதிரையை பார்த்தவுடன், மிகவும் கவரப்பட்டு அதை வாங்கி தன் அரசரிடம் விற்கலாம் என்று முடிவு செய்தார். குதிரையை வாங்கிய கையுடன், கௌடதேசத்திற்கு வந்து உடனடியாக அரண்மனைக்கு அரசரை காண விரைந்தார். காவலர்களிடம் அனுமதி பெற்று அரண்மனைக்குள் நுழைந்த வணிகர், அரசரை காண சென்றார். அரசர் அவரிடம், “தாங்கள் எதற்காக இங்கு வந்துளீர்கள் ?” என்று வினவினார். அதற்கு வணிகர், “அரசே! நான் ஒரு வியாபார விஷயமாக சிந்து தேசத்திற்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு உயர்ரக அழகிய குதிரையை பார்த்தேன். அந்த குதிரைக்கு நிகர் இந்த உலகில் வேறெதுவும் இல்லை. மிக அதிக விலை கொடுத்து அதை வாங்கி வந்தேன்” என்று கூறினார். இதை கேட்ட அரசர், “அப்படியா! உடனடியாக அந்த குதிரையை கொண்டு வாருங்கள். நான் காண வேண்டும்” என்று உத்தரவிட்டார். குதிரை அரசர் முன்பு கொண்டுவரப்பட்டது. அதை பார்த்த அரசர், மிகவும் கவரப்பட்டு அதை பரிசோதித்த பிறகு, வாங்க முடிவு செய்து, வணிகரிடம் அவர் வேண்டிய பணத்தை தாராளமாக கொடுத்தனுப்பினார்.

    சிறிது நாட்களுக்கு பிறகு, வேட்டைக்கு செல்ல நினைத்த அரசர், அந்த குதிரையில் சென்றார். காட்டிற்குள் ஒரு அழகிய மானை கண்டா அரசர், அதனை துரத்த ஆரம்பித்தார். மானும் உயிருக்கு பயந்து மிகவும் வேகமாக ஓடியது. மானை துரத்தி சென்ற அரசர், தன் உடன் வந்த வீரர்களை விட்டு வெகு தூரம் வந்திருந்தார். களைப்பினாலும் தாகத்தினாலும், அரசர் சிறிது நேரம் ஓய்வெடுக்க நினைத்தார். குதிரையை அருகிலிருந்த மரத்தில் கட்டிவிட்டு தானும் ஒரு பாறையின் மேல் அமர்ந்தார். அப்போது காற்றில் அடித்துவரப்பட்ட ஒரு காகிதத்தோல் அவர் அமர்ந்திருந்த பாறையின் அருகில் வந்து விழுந்தது. அதில், ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாயத்தின் பாதி ஸ்லோகம் எழுதப்பட்டிருந்தது. அரசர் அதை கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தார். அவர் வாயிலிருந்து ஸ்லோகத்தின் முதல் சப்தம் வந்தவுடனேயே, குதிரை தரையில் விழுந்து தன் உயிரை விட்டது. நித்தியமான நான்கு கரங்கள் கொண்ட நாராயண ரூபத்தை அடைந்து வைகுந்தத்திலிருந்து வந்த புஷ்பக விமானத்தில் அமர்ந்து வைகுந்தத்தை நோக்கி சென்றது.

    நடந்தவைகளை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டிருந்த அரசர், இதை பற்றி யாரிடம் விளக்கம் கேட்பது என்று யோசித்தார். அப்போது அருகில் ஒரு அழகிய ஆசிரமம் இருப்பதை அறிந்து அங்கு விரைந்தார். அங்கு தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்திய ஒரு பிராமணர் இருப்பதை கண்டா அரசர், அவரை வணங்கி விட்டு, அவரிடம், “எவ்வாறு எனது குதிரை வைகுந்தத்தை அடையும் பாக்கியதை பெற்றது?” என்று பணிவோடு வினவினார். விஷ்ணுஷர்மா என்ற பெயருடைய அந்த பிராமணர், அரசரிடம், “அரசே! சிறிது காலத்திற்கு முன் உங்கள் படைத்தளபதியாக இருந்த ஸரப்மெரூன், இளவரசனுடன் சேர்ந்து உங்களை கொல்ல திட்டமிட்டான். ஆனால் அவன் காலரா நோய்வாய்ப்பட்டு இறந்துபோனான். அடுத்த பிறவியில் குதிரையாக பிறந்த அவன் விதிவசத்தால் தங்களிடம் மீண்டும் வந்து சேர்ந்தான். இப்போது நீங்கள் வாசித்த ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாயத்தை அவன் கேட்டதன் வாயிலாக, அவன் வைகுந்தத்தை சென்றடைந்தான்” என்று விளக்கினார்.

    பிராமணரை வணங்கி விடைபெற்ற அரசர், நாட்டிற்கு திரும்பி தினமும் அந்த காகிதத்தில் எழுதப்பட்டிருந்த ஸ்லோகங்களை படிக்க ஆரம்பித்தார். சிறிது காலத்திற்கு பிறகு, தன் மகனை கௌடதேசத்தின் அரசராக அறிவித்து விட்டு, தான் வனத்திற்கு புறப்பட்டார். அங்கு தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாயத்தினை படித்தார். அதன் மூலம் விரைவாக பகவானின் திருப்பாதங்களை அடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question