Friday, July 12

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 13 I Gita mahatmiya Chapter-13

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பதிமூன்றாம் அத்தியாயத்தின் மஹிமை

சிவபெருமான், பார்வதி தேவியிடம், ” எனதன்பு பார்வதியே, ஸ்ரீமத் பகவத் கீதையின் பதிமூன்றாம் அத்தியாயத்தின் எல்லையற்ற பெருமைகளை கேட்டு மகிழ்ச்சியடைவாயாக” என்று கூறினார். 

    தெற்கே, துங்கபத்திரா நதிக்கரையில் ஹரிஹரப்பூர் என்ற அழகிய நகரில் சிவபெருமான் “ஹரிஹரா” என்ற பெயரால் வழிபடப்பட்டார். அவரை வழிபடும் எவரும் நன்மைகளை பெறுவர். ஹரிஹரப்பூரில் ஹரி தீக்ஷித் என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் வேதங்களை கற்று தேர்ந்தவராக இருந்த போதும் எளிமையாக தவ வாழ்வு வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவியை அனைவரும் “துராச்சாரி” என்று அழைப்பர். இதற்கு காரணம் அவளுடைய தகாத செயல்களாகும். தன் கணவரை எப்பொழுதும் குறை கூறிக்கொண்டே இருப்பதும், அவருக்கு நல்ல மனைவியாக நடந்து கொள்ளாததும், கணவரது நண்பர்களிடத்தில் கடுமையாக நடந்து கொள்வதும், தனது ஆசையை தீர்த்துக்கொள்ள வேறு ஆண்களுடன் உறவு கொள்வதும், போதை பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதும் – இவ்வாறாக அவளது தீய செயல்கள் எல்லை மீறிக்கொண்டிருந்தன. நகரத்தில் மக்கள் தொகை அதிகமானதால், காட்டிற்குள் ஒரு சிறு குடில் அமைத்து அங்கு அவள் தன் காதலர்களை சந்தித்து வந்தாள்.

    ஒரு நாள் இரவு அவளுடைய காதலர்களும் எவரும் அவளை காண வரவில்லை. தன் காம இச்சை அதிகமாகி விட்டிருந்ததால், அவள் குடிலை விட்டு வெளியே வந்து, தன் ஆசையை தீர்க்க ஏதேனும் ஆண்மகன் இருக்கிறானா என்று காடு முழுவதும் தேடினாள். ஆனால் ஒருவரும் அங்கில்லை. தன் இச்சையை தீர்க்க ஒருவரும் இல்லாததை எண்ணி அவள் அழத்துவங்கினாள். அப்போது மிகுந்த பசியோடு உறங்கிக்கொண்டிருந்த புலி ஒன்று அவளது அழுகுரலை கேட்டு அங்கு வந்து அவள் மீது பாயத்துவங்கியது. இதை பார்த்து பயந்த அவள், புலியிடம், “நீ எப்படி இங்கு வந்தாய்? எதற்காக என்னை கொல்ல பார்க்கிறாய்? என்னுடைய இந்த கேள்விக்கு பதிலளித்து விட்டு பின்னர் என்னை கொல்வாயாக” என்று கூறினாள். புலி பாய்வதை நிறுத்திவிட்டு பலமாக சிரித்தது. பின் தன் கதையை கூற ஆரம்பித்தது.

    “தெற்கே மஹாபஹா என்ற நதிக்கரையில் முனிபர்ணா என்ற நகர் உள்ளது. அங்கு பஞ்சலிங்க ரூபத்தில் சிவபெருமான் காட்சியளிக்கிறார். அந்த நகரத்தில் நான் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தேன். உயரிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எனக்கு புலன்களை கட்டுப்படுத்த தெரியவில்லை; நான் மிகவும் பேராசை கொண்டவனாக இருந்தேன். பணம் சம்பாதிப்பதற்காக தாழ்ந்த குலத்தினருக்காக நதிக்கரையில் யாகம் செய்தேன். அவர்களுடைய இல்லத்தில் உணவருந்தினேன். பூஜை செய்தல், யாகம் செய்தல் போன்றவற்றின் மூலம் தேவைக்கதிகமாக பணம் சம்பாதித்து அதை என்னுடைய புலனின்பத்திற்காக பயன்படுத்தினேன். வேத விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கும் பிராமணர்களை கேலி செய்வேன். யாருக்கும் தானம் வழங்க மாட்டேன். வயதானதும் என் முடியெல்லாம் நரைத்து விட்டது; என் பற்கள் விழுந்துவிட்டது; கண்கள் மங்கலாக தெரிய ஆரம்பித்தது; இருப்பினும் என் பேராசை என்னை விடவில்லை. ஒரு நாள் தவறுதலாக பிராமணர்களை போல் இருக்கும் ஏமாற்றுக்காரர்களிடம் உணவு தானமாக பெற சென்றேன். ஆனால் அவர்கள், தானம் வழங்கவில்லை. அதுமட்டுமல்லாது அவர்களது நாயை விட்டு என்னை விரட்டினார்கள். அதில் ஒரு நாய் என்னை காலில் கடித்தது. உடனே நான் இறந்து விட்டேன்”. அதன் பிறகு புலியின் உடல் எனக்கு கிடைத்தது. ஆகையால் நான் இந்த காட்டில் இருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக என் முந்தைய பிறவி என் நினைவில் உள்ளது. போன ஜென்மத்தில் செய்த தவறுகளுக்கு பரிகாரமாக இந்த ஜென்மத்தில் நான் ஒரு தீர்மானம் எடுத்துள்ளேன். புலியாக பிறந்தாலும், நான் எந்த ஒரு பக்தரையோ, சந்நியாசியையோ, பத்தினி பெண்ணையோ குழந்தைகளையோ கொன்று சாப்பிடமாட்டேன் என்று முடிவெடுத்தேன். ஆனால் நீயோ நடத்தை கெட்டவள். ஆகையால் இன்று மதிய உணவிற்கு நான் உன்னை இறையாகப்போகிறேன்” என்று புலி தன் கதையை கூறி முடித்தவுடன், அவளை கொன்று அவள் உடலை உண்டது.

    அவளது ஆத்மாவை யமதூதர்கள் எடுத்து சென்று தூயதா என்ற நரகத்தில் வீசியெறிந்தார்கள். அந்த நரகம் மலம், மூத்திரம், சளி மாற்றும் ரத்தத்தால் நிரம்பியிருக்கும். அவள் செய்த பாவங்களின் விளைவாக பத்து லட்சம் கல்பங்களுக்கு அந்த நரகத்திலே துன்புற்றாள். அதன் பின்னர் ரௌரவா என்ற நரகத்திற்கு தள்ளப்பட்டாள். அங்கும் தண்டனை அனுபவித்து விட்டு அடுத்த பிறவியில் ஒரு சண்டாளியாக பிறந்தாள். தன் பாவங்களின் பலனாக இந்த பிறவியில் தொழு நோயும் காச நோயும் பெற்றாள். ஆனால் ஏதோ புண்ணியத்தின் காரணமாக ஒரு முறை ஹரிஹரப்பூருக்கு வந்தாள். அப்போது அங்கு ஜாம்பாகாதேவி (பார்வதி தேவி ) ஆலயத்தில் வாசுதேவர் என்ற மாமுனிவர் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதிமூன்றாம் அத்தியாயத்தை படித்துக்கொண்டிருந்தார். அவர் வாசிப்பதை கேட்டு மிகவும் மகிழ்ந்த அவள், அதனை அப்போதே மனப்பாடம் செய்து பின்னர் திரும்ப திரும்ப கூறினாள். இதன் பலனாக சண்டாளியின் உடலிலிருந்து விடுதலை அடைந்து அனைத்து பாவங்களையும் தொலைத்தாள். பின்னர் நான்கு கரங்களுடைய விஷ்ணு ரூபத்தை அடைந்து, வைகுந்தம் சென்றாள்.

+8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question