நம்பிக்கையின் பிரிவுகள்
Bg 17.1 — அர்ஜுனன் வினவினான்: கிருஷ்ணரே, சாஸ்திரங்களின் விதிகளைப் பின்பற்றாமல், தங்களது கற்பனைக்கேற்ப வழிபடுபவர்களின் நிலை என்ன? அவர்கள் இருப்பது ஸத்வ குணத்திலா, ரஜோ குணத்திலா, தமோ குணத்திலா?
Bg 17.2 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: ஊடல் பெற்ற ஆத்மாவின் சுபாவித்திற்கு ஏற்ப, அவனது நம்பிக்கை, ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்படலாம். இனி இவற்றைப் பற்றிக் கேட்பாயாக.
Bg 17.3 — பரதனின் மைந்தனே, பல்வேறு இயற்கை குணங்களுக்குக் கீழான இருப்பிற்கு ஏற்ப ஒருவன் குறிப்பிட்ட நம்பிக்கையை விருத்தி செய்கிறான். ஊயிர்வாழி அவனுடைய குணங்களுக்கு ஏற்பவே ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை உடையவனாகக் கூறப்படுகிறான்.
Bg 17.4 — ஸத்வ குணத்தில் இருக்கும் மனிதர்கள் தேவர்களை வழிபடுகின்றனர்; ரஜோ குணத்தில் இருப்பவர்கள் அசுரர்களை வழிபடுகின்றனர்; தமோ குணத்தில் இருப்பவர்களோ பேய்களையும் பூத கணங்களையும் வழிபடுகின்றனர்.
Bg 17.5-6 — காமம் மற்றும் பற்றுதலின் பலவந்தத்தால் சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்படாத கடுமையான தவங்களை தற்பெருமையுடனும் அஹங்காரத்துடனும் செய்பவர்கள், உடலின் ஜட மூலக்கூறுகளைத் துன்புறுத்துவது மட்டுமின்றி உள்ளே உறைந்துள்ள பரமாத்மாவையும் துன்புறுத்துகின்றனர். அத்தகு முட்டாள்கள் அசுரர்களாக அறியப்படுகின்றனர்.
Bg 17.7 — ஒவ்வொருவர் விரும்பும் உணவிலும்கூட ஜட இயற்கையின் முக்குணங்களுக்கு ஏற்ப மூன்று வகை உண்டு. இது யாகங்கள், தவங்கள், மற்றும் தானத்திற்கும் பொருந்தும். அவற்றிற்கு இடையிலான வேறுபாடுகளை தற்போது கேள்.
Bg 17.8 — ஆயுளை நீடித்து, வாழ்வைத் தூய்மைபடுத்தி, பலம், ஆரோக்கியம், சுகம், மற்றும் திருப்தியைக் கொடுக்கும் உணவுகள், ஸத்வ குணத்தில் இருப்போருக்குப் பிரியமானவை. இத்தகு உணவுகள் ரசமுள்ளவையாக, கொழுப்பு சத்தும் ஊட்டச் சத்தும் மிக்கவையாக, இதயத்திற்கு இதமளிப்பவையாக உள்ளன.
Bg 17.9 — மிகவும் கசப்பான, மிகவும் புளிப்பான, உப்பு நிறைந்த, சூடான, காரமான, உலர்ந்த, மற்றும் எரிகின்ற உணவுப் பொருள்கள் ரஜோ குணத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமானதாகும். இத்தகு உணவுகள் துன்பம், சோகம் மற்றும் நோயை உண்டாக்குகின்றன.
Bg 17.10 — உண்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே சமைக்கப்பட்ட, சுவையற்ற, பழைய, ஊசிப்போன, எச்சில்பட்ட, தீண்டத்தகாத பொருள்களைக் கொண்ட உணவுகள் தமோ குணத்தில் உள்ள மக்களால் விரும்பப்படுகின்றன.
Bg 17.11 — சாஸ்திர விதிகளின்படி, கடமையை நிறைவேற்றுவதற்காக, பலனை எதிர்பார்க்காத நபர்களால் செய்யப்படும் யாகம், ஸத்வ குணத்தைச் சார்ந்ததாகும்.
Bg 17.12 — ஆனால் ஏதேனும் பெளதிக நன்மையை அடைவதற்காக அல்லது தற்பெருமைக்காகச் செய்யப்படும் யாகம், பாரதர்களின் தலைவனே, ரஜோ குணத்தைச் சார்ந்தது என்பதை அறிவாயாக.
Bg 17.13 — சாஸ்திர விதிகளை மதிக்காமல், பிரசாத விநியோகம் இன்றி, வேத மந்திரங்களின் உச்சாடனம் இன்றி, புரோகிதர்களுக்கான தட்சணை இன்றி, நம்பிக்கையும் இன்றி செய்யப்படும் யாகம், தமோ குணத்தைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
Bg 17.14 — முழுமுதற் கடவுள், பிராமணர்கள், ஆன்மீக குரு, பெரியோர்களான தாய் தந்தையர் ஆகியோரை வழிபடுதல், மற்றும் தூய்மை, எளிமை, பிரம்மசர்யம், அகிம்சை முதலியவை உடலின் தவங்களாகும்.
Bg 17.15 — உண்மையானதும் இனிமையானதும் நன்மையளிப்பதுமான பேச்சு, பிறரது மனதை துன்புறுத்தாத பேச்சு, வேத இலக்கியங்களை முறையாக உச்சரித்தல் ஆகியவை வாக்கின் தவங்களாகும்.
Bg 17.16 — திருப்தி, எளிமை, மெளனம், சுயக் கட்டுப்பாடு, தனது இருப்பின் தூய்மை ஆகியவை மனதின் தவங்களாகும்.
Bg 17.17 — இந்த மூன்று வகையான தவங்கள், ஜட இலாபங்களை எதிர்பார்க்காமல், பரமனைத் திருப்தி செய்வதில் ஈடுபட்டுள்ள மனிதர்களால். உன்னத நம்பிக்கையுடன் செய்யப்படும்போது, ஸத்வ குணத்தின் தவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
Bg 17.18 — மானம், மரியாதை, மற்றும் வழிபாட்டைப் பெறுவதற்காக, தற்பெருமையுடன் செய்யப்படும் தவங்கள் ரஜோ குணத்தில் இருப்பவையாகக் கூறப்படுகின்றன. இவை சஞ்சலமானதும் தற்காலிகமானதும் ஆகும்.
Bg 17.19 — பிறரை அழிப்பதற்காகவோ துன்புறுத்துவதற்காகவோ, அல்லது தன்னையே வருத்திக் கொண்டு முட்டாள்தனமாக முறையில் செய்யப்படும் தவங்கள், தமோ குணத்தில் இருப்பவையாகக் கருதப்படுகின்றன.
Bg 17.20 — பலனை எதிர்பார்க்காமல், கடமையை நிறைவேற்றுவதற்காக, தகுந்த நபருக்கு, முறையான இடத்தில், முறையான காலத்தில் கொடுக்கப்படும் தானம், ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கருதப்படுகின்றது.
Bg 17.21 — பிரதி உபகாரத்தை எதிர்பார்த்து, ஏதேனும் பலனை விரும்பி, அல்லது விருப்பமின்றி கொடுக்கப்படும் தானம், ரஜோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
Bg 17.22 — தூய்மையற்ற இடத்தில், முறையற்ற காலத்தில், தகுதியற்ற நபர்களுக்கு, அல்லது தக்க கவனமும் மரியாதையும் இன்றி வழங்கப்படும் தானம், தமோ குணத்தைச் சேர்ந்ததாக கூறப்படுகின்றது.
Bg 17.23 — படைப்பின் ஆரம்பித்திலிருந்தே, ஓம் தத் ஸத் என்னும் மூன்று சொற்கள் பரம பூரண உண்மையைக் குறிப்பிடுவதற்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மூன்று குறியீட்டுச் சொற்களும், வேத மந்திரங்களை உச்சரிக்கும்போதும் யாகங்களின்போதும் பரமனின் திருப்திக்காக பிராமணர்களால் உச்சரிக்கப்பட்டன.
Bg 17.24 — எனவே, பரமனை அடைவதற்காக, சாஸ்திர விதிகளின்படி, யாகம், தானம், தவம் ஆகியவற்றை மேற்கொள்ளும் ஆன்மீகவாதிகள், அவற்றை ஓம் என்பதுடன் தொடங்குகின்றனர்.
Bg 17.25 — பலனை எதிர்பார்க்காமல், பல்வேறு வகையான யாகம், தவம் மற்றும் தானத்தினை தத் என்னும் சப்தத்துடன் மேற்கொள்ள வேண்டும். அத்தகு உன்னத செயல்களின் நோக்கம் பெளதிக பந்தத்திலிருந்து விடுபடுவதாகும்.
Bg 17.26-27 — பக்திமயமான யாகத்தின் நோக்கம், பூரண உண்மையே. இது ஸத் என்னும் சொல்லினால் குறிப்பிடப்படுகின்றது. பிருதாவின் மைந்தனே, அத்தகு யாகத்தை செய்பவரும் ஸத் எனப்படுகிறார். மேலும், பரம புருஷரைத் திருப்திப்படுத்ததுவதற்காகச் செய்யப்படும் யாகம், தவம், மற்றம் தானத்தின் செயல்களும் ஸத் என்று அழைக்கப்படுகின்றன.
Bg 17.28 — பிருதாவின் மைந்தனே, பரமனின் மீது நம்பிக்கையின்றி செய்யப்படும் யாகங்களும் தவங்களும் தானங்களும் நிலையற்றவை. அஸத் என்று அழைக்கப்படும் இவை இப்பிறவியில் மட்டுமின்றி அடுத்த பிறவியிலும் பயனற்றறவை.