Monday, November 18

ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் – 15

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

புருஷோத்தம யோகம்

Bg 15.1 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: மேல்நோக்கிய வேர்களையும் கீழ்நோக்கிய கிளைகளையும், வேத பதங்களை இலைகளாகவும் கொண்ட ஓர் ஆலமரம் உள்ளது என்று கூறப்படுகின்றது. இம்மரத்தை அறிந்தவன் வேதங்களை அறிந்தவன்.

Bg 15.2 — இம்மரத்தின் கிளைகள், ஜட இயற்கையின் முக்குணங்களால் வளப்படுத்தப்பட்டு, மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் விரிகின்றன. உபகிளைகள் புலனின்ப விஷயங்களாகும். இம்மரத்திலுள்ள கீழ்நோக்கிச் செல்லும் வேர்கள், பலன் நோக்குச் செயல்களால் பந்தப்படுத்தப்பட்டுள்ளன.

Bg 15.3-4 — இம்மரத்தின் உண்மை உருவம் இவ்வுலகில் காணப்படக் கூடியதல்ல. இஃது எங்கே முடிகின்றது, எங்கே தொடங்குகின்றது, அல்லது இதன் அஸ்திவாரம் எங்கே இருக்கின்றது என்பதை யாராலும் புரிந்கொள்ள முடியாது. ஆனால் பலமாக வேரூன்றியுள்ள இந்த மரத்தை பற்றின்மை எனும் ஆயுதத்தால் உறுதியுடன் வெட்டிச் சாய்க்க வேண்டும். அதன் பின்னர், எங்கே செல்வதால் மீண்டும் திரும்பி வருவதில்லையோ, அந்த இடத்தை நாடி, அங்கே, யாரிடமிருந்து எல்லாம் தொடங்குகின்றதோ, யாரிடமிருந்து எல்லாம் விரிவடைகின்றதோ, அந்த பரம புருஷ பகவானிடம் சரணடைய வேண்டும்.

Bg 15.5 — பொய் கெளரவம், மயக்கம் மற்றும் தவறான சங்கத்திலிருந்து விடுபட்டு, நித்தியத்தைப் புரிந்து கொண்டு, பெளதிக காமத்தை நிறுத்திவிட்டு, இன்ப துன்பம் என்னும் இருமையை ஒழித்து, மயக்கமுறாமல் இருப்பவர்கள், பரம புருஷரிடம் சரணடைவது எவ்வாறு என்பதை அறிந்து, அந்த நித்திய ராஜ்ஜியத்தை அடைகின்றனர்.

Bg 15.6 — எனது அந்த பரம வாசஸ்தலம் சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ, மின்சாரத்தினாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜட உலகிற்குத் திரும்புவதில்லை.

Bg 15.7 — இந்தக் கட்டுண்ட உலகில் இருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாரும் எனது நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணத்தால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடினமாக சிரமப்படுகின்றனர்.

Bg 15.8 — காற்று நறுமணத்தைத் தாங்கிச் செல்வதைப் போல, ஜடவுலகில் இருக்கும் உயிர்வாழி, ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு வாழ்வின் பல்வேறு உணர்வுகளைச் சுமந்து செல்கிறான். இவ்வாறு, ஒருவகையான உடலைப் பெற்று, பின்னர் மீண்டும் வேறொரு உடலை ஏற்பதற்காக இதனைக் கைவிடுகிறான்.

Bg 15.9 — இவ்வாறு வேறொரு ஸ்தூல உடலைப் பெறும் உயிர்வாழி, மனதை மையமாகக் கொண்டுள்ள ஒரு குறிப்பிட்ட விதமான காது, கண், நாக்கு, மூக்கு, தொடு புலன் ஆகியவற்றை அடைகிறான். இதன் மூலம் குறிப்பிட்ட புலனின்ப விஷயங்களை அவன் அனுபவிக்கின்றான்.

Bg 15.10 — முட்டாள்கள், உயிர்வாழி எவ்வாறு தனது உடலைக் கைவிடுகிறான் என்பதையோ, இயற்கை குணங்களின் மயக்கத்தின் கீழ் எத்தகு உடலை அவன் அனுபவித்துக் கொண்டுள்ளான் என்பதையோ புரிந்து கொள்ள முடியாது. ஆனால் யாருடைய கண்கள் ஞானத்தில் பயிற்சி பெற்றுள்ளதோ அவரால் இவை யனைத்தையும் காண முடியும்.

Bg 15.11 — தன்னுணர்வில் நிலைபெற்று முயற்சி செய்யும் ஆன்மீகவாதிகள் இவற்றையெல்லாம் தெளிவாகக் காண முடியும். ஆனால் வளர்ச்சி பெறாத மனமுடையவர்களும் தன்னுணர்வில் நிலை பெறாதவர்களும், முயற்சி செய்தாலும் கூட என்ன நடக்கின்றது என்பதைக் காண இயலாது.

Bg 15.12 — உலகம் முழுவதிலும் இருளை விலக்குகின்ற சூரியனின் பிரகாசம் என்னிடமிருந்தே வருகின்றது. மேலும், சந்திரனின் பிரகாசமும் நெருப்பின் பிரகாசமும் கூட என்னிடமிருந்தே வருகின்றன.

Bg 15.13 — நான் ஒவ்வொரு கிரகத்திற்குள்ளும் நுழைகின்றேன், எனது சக்தியினால் அவை பாதையில் நிலைபெற்றுள்ளன. நான் சந்திரனாகி எல்லாக் காய்கறிகளுக்கும் வாழ்வு ரஸத்தை வழங்குகின்றேன்.

Bg 15.14 — எல்லா உயிர்வாழிகளின் உடலிலும் ஜீரண நெருப்பாக இருக்கும் நான், உட்சுவாசக் காற்றுடனும் வெளிச்சுவாசக் காற்றுடனும் இணைந்து, நான்கு விதமான உணவைச் செரிக்கச் செய்கிறேன்.

Bg 15.15 — நான் எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன், என்னிடமிருந்தே ஞாபகசக்தியும் அறிவும் மறதியும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. உண்மையில், வேதாந்தத்தை தொகுத்தவனும் வேதங்களை அறிபவனும் நானே.

Bg 15.16 — தவறக்கூடியவர்கள், தவறாதவர்கள் என இரண்டு விதமான ஜீவன்கள் உள்ளனர். ஜடவுலகில் உள்ள ஜீவன்கள் தவறக்கூடியவர்கள் என்றும், ஆன்மீக உலகில் உள்ளவர்கள் தவறாதவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

Bg 15.17 — இந்த இருவருக்கும் அப்பாற்பட்டு உத்தம புருஷரான பரமாத்மா இருக்கின்றார்., அழிவற்ற இறைவனான அவர், மூன்று உலகங்களுக்குள் நுழைந்து அவற்றைக் காக்கின்றார்.

Bg 15.18 — தவறக்கூடியவர்கள், தவறாதவர்கள் ஆகிய இருவருக்கும் அப்பாற்பட்டு நான் திவ்யமானவனாக இருப்பதாலும், நானே உத்தமமானவன் என்பதாலும், உலகிலும் வேதங்களிலும் நான் அந்த புருஷோத்தமனாகக் கொண்டாடப்படுகின்றேன்.

Bg 15.19 — எவனொருவன் என்னை பரம புருஷ பகவானாக ஐயமின்றி அறிகின்றானோ, அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாவான். எனவே, பரதனின் மைந்தனே, அவன் எனது பக்தித் தொண்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றான்.

Bg 15.20 — வேத சாஸ்திரங்களின் மிகமிக இரகிசயமான பகுதி இதுவே, பாவமற்றவனே, தற்போது என்னால் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் புரிந்துகொள்பவன் அறிஞனாவான், அவனது முயற்சிகள் பக்குவத்தை அறியும்.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question