பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை பதினான்காம் அத்தியாயத்தின் மஹிமை
சிவபெருமான் கூறினார், ” எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினான்காம் அத்தியாயத்தின் மகிமைகளை பற்றி கூறப்போகிறேன். கவனமாக கேட்பாயாக”.
சிம்மளத்துவிப் என்ற ஊரில் விக்ரம்வேதாள என்ற அரசன் இருந்தார். ஒரு முறை அவர் காட்டிற்கு வேட்டைக்கு செல்லும்போது தன் மகனையும் தன்னுடன் இரண்டு வேட்டை நாய்களையும் அழைத்து சென்றார். காட்டை அடைந்ததும், ஒரு முயலை துரத்தி பிடிக்குமாறு உத்தரவிட்டு ஒரு வேட்டை நாயை அவிழ்த்துவிட்டார். தானும் பின் தொடர்ந்தார். நாய் துரத்துவதை கண்ட முயல் மிக வேகமாக ஓடியது. பார்ப்பதற்கு அது ஓடுகிறதா அல்லது பார்க்கிறதா என்ற சந்தேகம் எழுமளவிற்கு ஓடியது. வெகு தூரம் ஓடிய பிறகு முயல் ஒரு ஆசிரமத்தை அடைந்தது. அந்த இடம் மிகவும் அழகாகவும் அமைதியாகவும் இருந்தது. அங்கு ஒரு மான் மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. குரங்குகள் அந்த மரத்தின் பழங்களை சுவைத்துக்கொண்டிருந்தன. புலிக் குட்டிகள், யானை குட்டிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தன. பாம்புகள் மயில் மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்தன.அந்த ஆசிரமத்தில் வத்ஸர் என்ற மாமுனிவர் வசித்து வந்தார். அவர் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினான்காம் அத்தியாயத்தை படித்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபாடு செய்வார். அவருடைய சீடர்களில் ஒருவர் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினான்காம் அத்தியாயத்தை வாசித்தவாறே தன் கால்களை கழுவிவிட்டு சென்றார். அந்த இடம் ஈரமானது.
வேகமாக ஓடிவந்ததன் காரணமாக முயல் அந்த இடத்தில் வழுக்கி விழுந்தது. உடனடியாக அது தேவ ரூபத்தை அடைந்தது. சிறிது நேரத்திற்குள் முயலை தேடி வந்த வேட்டை நாயும் அந்த இடத்தில் கால் வைத்ததும் தன் உடலை விடுத்தது தேவ ரூபத்தை அடைந்தது. இரண்டும் தேவலோகத்தை நோக்கி சென்றன. இவையனைத்தையும் கண்ட அந்த சீடர் பலமாக சிரித்தார். அப்போது அங்கு வந்து அரசரும் நடந்த நிகழ்வுகளை கண்டு மிகவும் ஆச்சர்யமுற்று, “முயலும் நாயும் தேவலோகம் சென்றதை நான் கண்கூடாக பார்த்தேன். இது எவ்வாறு சாத்தியம்?” என்று வினவினார். அந்த சீடர், “இந்த ஆசிரமத்தில் மாமுனிவர் வத்ஸர் வசித்து வருகிறார். அவர் தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தியவர். தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினான்காம் அத்தியாயத்தை வாசிப்பவர். நான் அவருடைய சீடன். அவருடைய கருணையால் நானும் தினமும்
ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினான்காம் அத்தியாயத்தை வாசிக்கிறேன். எனது பாதங்களை கழுவிய நீர் முயல் மற்றும் நாயின் உடலில் பட்டதன் காரணமாகத்தான் அவை விடுதலை அடைந்து தேவலோகம் சென்றது” என்று கூறினார். மேலும், “நான் எதற்காக சிரித்தேன் தெரியுமா ? அதற்கான காரணத்தை இப்போது கூறுகிறேன். மகாராஷ்டிரா மாநிலத்தில், பிரத்துதுக் என்ற ஊரில் கேசவா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் கொடூரமானவர். அவருடைய மனைவியான விலோபனாவும் மிகவும் தவறான காரியங்கள் செய்பவள். வேறு ஆண்களுடன் தொடர்புடையவள். இதன் காரணமாக கேசவா அவளை கொன்று விட்டார். அவரும் இறந்து விட்டார். இந்த பிறவியில் அவள் உங்களுடைய வேட்டை நாயாகவும், கேசவா முயலாகவும் பிறந்தார்கள்”, என்று கூறினார்.
சிவபெருமான் கூறினார், “அந்த சீடரிடமிருந்து ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினான்காம் அத்தியாயத்தின் மகிமையை கேட்டறிந்த அரசரும் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினான்காம் அத்தியாயத்தை படிக்கத் துவங்கினார். உயிர் நீத்த பிறகு வைகுந்தம் சென்று பகவான் விஷ்ணுவின் பாதகமலங்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை பெற்றார்.”.