ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவிற்கு அடிப்படையில் இரண்டு வகையான சகாக்கள் உள்ளனர். 1. துவாதச கோபாலர்கள் (அபிராம கோபாலர், கௌரிதாச பண்டிதர், தனஞ்சயர் மற்றும் பலர்) அடங்கிய முதல் குழுவினர், சக்ய ரசம் (நட்புணர்வு) எனும் பாவத்தில் ஸ்ரீ நித்தியானந்த பிரபுவிற்குச் சேவை செய்கின்றனர். 2. இரண்டாவது குழுவினர் எப்போதும் மாதுர்ய ரசத்தில் (தெய்வீகக் காதல் பாவத்தில்) ஆழ்ந்திருப்பவர்கள். ஸ்ரீ கதாதர கோஸ்வாமி என்பவர் சந்திரகாந்தி கோபி (ஸ்ரீமதி ராதாராணியின் தேஜஸின் விரிவாக்கம்) மற்றும் பூர்ணானந்தா (பகவான் பலராமரின் அன்புத் தோழியின் விரிவாக்கம்) ஆகியோரின் ஒன்றிணைந்த வடிவமாவார். எனவே, கதாதர தாசர் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு மற்றும் ஸ்ரீ நித்தியானந்த பிரபு ஆகிய இருவருக்கும் சகாவாக விளங்கினார். கிருஷ்ணதாச கவிராஜ கோஸ்வாமி, பகவான் சைதன்யரை ‘ராதா-பாவ-த்யுதி சுவலிதம்’ (ஸ்ரீமதி ராதாராணியின் உணர்வுகள் மற்றும் திருமேனி ஒளியால் அலங்கரிக்கப்பட்டவர்) என்று வர்ணிக்கிறார். இந்த ‘த்யுதி’ எனப்படும் தெய்வீக ஒளியே கதாதர தாசர் ஆவார். கதாதர தாசர் சில சமயங்களில் “ஸ்ரீ ராதிகாவின் தெய்வீக ஒளியின் உருவகம்” என்றும் அழைக்கப்படுகிறார்.
பகவான் நித்தியானந்தருடன் பயணம் செய்யும்போது, கதாதரர் சில சமயங்களில் மாதுர்ய பிரேமையில் (தெய்வீகக் காதலில்) ஆழ்ந்து, விரஜபூமியின் கோபியரைப் போலச் செயல்படவும் பேசவும் தொடங்கிவிடுவார். ஒரு கோபியைப் போலத் தன் தலையில் கங்கை நீர் நிரம்பிய மண் பானையைச் சுமந்துகொண்டு, “பால் வேண்டுமா? தயிர் வேண்டுமா?” என்று கூவி அழைப்பார்.
வங்காளத்தில் பகவான் நித்தியானந்தரின் முதன்மைப் பிரச்சாரகர்களில் ஒருவராக இருந்த கதாதர தாசர், எண்ணற்ற பாவிகளையும் யவனர்களையும் (அந்நியர்களையும்) கடைத்தேற்றினார். ஒருமுறை கிருஷ்ண பிரேமையைச் சுவைத்தபடி, காஜியின் (நீதிபதி) மாளிகைக்கு வெளியே கிருஷ்ணரின் திருநாமங்களைப் பாடிக்கொண்டு பரவசத்துடன் நடனமாடத் தொடங்கினார். “அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதாகக்” கூறி அவரைக் கண்டிப்பதற்காகக் கோபத்துடன் அந்த முஸ்லிம் நீதிபதி தன் வீட்டிலிருந்து வெளியே வந்தார். ஆனால், கதாதர தாசரின் கண்கவர் தெய்வீகத் திருமேனியைக் கண்டதும், காஜி திகைத்துப் போய் தனது கோபத்தைத் துறந்தார்.
கதாதரர் அன்புடன் காஜியைத் தழுவிக்கொண்டு, “ஹரியின் திருநாமமாகிய இனிய அமுதத்தை விநியோகித்து, தெய்வீக அன்பின் மூலம் அனைவரையும் கடைத்தேற்றுவதற்காகவே கௌர-நித்தியானந்தர் அவதரித்துள்ளனர். நீங்களும் ஏன் இந்த இனிய ஹரி நாமத்தை உச்சரிக்கக் கூடாது?” என்று கேட்டார்.
அதற்கு காஜி, “நான் நாளை ஹரியின் நாமத்தை உச்சரிக்கிறேன்” என்று பதிலளித்தார். காஜி தன்னை அறியாமலேயே ஹரியின் திருநாமத்தை உச்சரித்ததைக் கேட்ட கதாதரர் பெருமகிழ்ச்சி அடைந்தார். அவர், “நாளை எதற்கு? நீங்கள் இன்றே உச்சரித்துவிட்டீர்களே! சக்திவாய்ந்த இந்த ஹரி நாமம் உங்கள் பாவங்களை அழித்து, உங்கள் இருப்பைப் புனிதப்படுத்தும்” என்றார். அன்றிலிருந்து அந்த காஜி ஸ்ரீ கதாதர தாச கோஸ்வாமியின் திருவடிகளில் சரணடைந்தார்.
இவரது சமாதி 64 சமாதிகள் பகுதியில் அமைந்துள்ளது.
