Thursday, November 7

ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் – 14

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஜட இயற்கையின் முக்குணங்கள்

Bg 14.1 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எல்லா ஞானங்களிலும் உயர்ந்ததான இந்த பரம ஞானத்தை நான் உனக்கு மீண்டும் கூறுகின்றேன். இதனை அறிந்த முனிவர்கள் அனைவரும் தெய்வீகமான பக்குவ நிலையை அடைந்துள்ளனர்.

Bg 14.2 — இந்த ஞானத்தில் நிலைபெறுவதால், ஒருவன் என்னைப் போன்ற தெய்வீக இயற்கையை அடைய முடியும். இவ்வாறு நிலைபெற்றபின், அவன் படைப்பின்போது பிறப்பதோ, பிரளயத்தின்போது தொல்லையுறுவதோ இல்லை.

Bg 14.3 — பரதனின் மைந்தனே, பிரம்மன் எனப்படும் மொத்த ஜட வஸ்துக்களும் ஒரு கருவறையாகும். அந்த பிரம்மனை கருவுறச் செய்து, அனைத்து ஜீவாத்மாக்களின் பிறப்பினையும் நானே சாத்தியமாக்குகின்றேன்.

Bg 14.4 — குந்தியின் மைந்தனே, எல்லா உயிரினங்களும் இவ்வுலகில் பிறப்பினால் சாத்தியமாக்கப்படுகின்றன. மேலும், நானே விதை அளிக்கும் தந்தை என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

Bg 14.5 — ஜட இயற்கை, ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகிய முக்குணங்களால் ஆனது. பலம் பொருந்திய புயங்களை உடைய அர்ஜுனா, நித்தியமான உயிர்வாழி, இயற்கையின் தொடர்பில் வரும்போது, இந்த குணங்களினால் கட்டுப்படுத்தப் படுகின்றான்.

Bg 14.6 — பாவமற்றவனே, மற்றவற்றைவிட தூய்மையானதான ஸத்வ குணம், பிரகாசப்படுத்துவதாகவும் எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிப்பதாகவும் அமைகின்றது. இந்த குணத்தில் நிலைபெற்றவர்கள் இன்பத்தின் தொடர்பினாலும் ஞானத்தின் தொடர்பினாலும் பந்தப்பட்டுள்ளனர்.

Bg 14.7 — குந்தியின் மகனே, எல்லையற்ற ஆசையாலும் ஏக்கத்தாலும் பிறந்த ரஜோ குணத்தின் காரணத்தினால், உடலையுடைய உயிர்வாழி, பௌதிக பலன்நோக்குச் செயல்களால் பந்தப்படுகின்றான்.

Bg 14.8 — பரதனின் மைந்தனே, அறியாமையினால் பிறந்த தமோ குணம் உடலையுடைய எல்லா உயிர்வாழிகளையும் மயக்குகின்றது. கட்டுண்ண ஆத்மாவை பந்தப்படுத்தப்கூடிய, பைத்தியக்காரத்தனம், சோம்பல், உறக்கம் ஆகியவை இந்த குணத்தின் விளைவுகளாகும்.

Bg 14.9 — பரதனின் மைந்தனே, ஸத்வ குணம் இன்பத்தினாலும், ரஜோ குணம் செயல்களின் பலன்களினாலும் கட்டுப்படுத்துகின்றன; ஞானத்தை மறைக்கும் தமோ குணம், பைத்தியக்காரத்தனத்தினால் பந்தப்படுத்துகின்றது.

Bg 14.10 — பரதனின் மைந்தனோ, ஸத்வ குணம், சில சமயஙகளில் ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் தோற்கடித்து மேலோங்குகின்றது. சில சமயங்களில் ரஜோ குணம், ஸத்வ குணத்தையும் தமோ குணத்தையும் தோற்றகடிக்கின்றது. மேலும் இதர சமயங்களில் தமோ குணம், ஸத்வ குணத்தையும் ரஜோ குணத்தையும் தோற்கடிக்கின்றது. இவ்வாறு உயர்நிலைக்கான போட்டி எப்போதும் நிலவுகின்றது.

Bg 14.11 — உடலின் எல்லாக் கதவுகளும் ஞானத்தால் பிரகாசிக்கும்போது ஸத்வ குணத்தின் தோற்றத்தை அனுபவிக்க முடியும்.

Bg 14.12 — பரத குலத் தலைவனே, ரஜோ குணம் அதிகரிக்கும்போது, பெரும் பற்றுதல், பலன்நோக்குச் செயல்கள், தீவிர முயற்சி, கட்டுப்பாடற்ற ஆசை, மற்றும் ஏக்கத்தின் அறிகுறிகள் வளர்கின்றன.

Bg 14.13 — குருவின் மைந்தனே, தமோ குணம் அதிகரிக்கும்போது, இருள், செயலற்ற தன்மை, பைத்தியக்காரத்தனம், மற்றும் மயக்கமும் தோன்றுகின்றன.

Bg 14.14 — ஸத்வ குணத்தில் மரணமடையும்போது, ஒருவன் உன்னத சாதுக்கள் வசிக்கும் தூய்மையான உயர் லோகங்களை அடைகின்றான்.

Bg 14.15 — ரஜோ குணத்தில் மரணமடையும் போது, ஒருவன் பலன்நோக்குச் செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களின் மத்தியில் பிறக்கின்றான். தமோ குணத்தில் மரணமடையும் போதோ, அவன் மிருக இனத்தில் பிறவியெடுக்கின்றான்.

Bg 14.16 — புண்ணியச் செயல்களின் விளைவுகள் தூய்மையானவை, அவை ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் ரஜோ குணத்தில் செய்யப்படும் செயல்கள் துக்கத்திலும், தமோ குணத்தில் செய்யப்படும் செயல்கள் முட்டாள்தனத்திலும் முடிகின்றன.

Bg 14.17 — ஸத்வ குணத்திலிருந்து உண்மை ஞானம் விருத்தியாகின்றது; ரஜோ குணத்திலிருந்து பேராசை விருத்தியாகின்றது; மேலும் தமோ குணத்திருந்தோ முட்டாள்தனம், பைத்தியக்காரத் தனம், மற்றும் மயக்கமும் விருத்தியாகின்றன.

Bg 14.18 — ஸத்வ குணத்தில் நிலைபெற்றவர்கள் படிப்படியாக உயர் லோகங்களுக்கு மேல்நோக்கிச் செல்கின்றனர்; ரஜோ குணத்தில் இருப்பவர்கள் பூவுலகங்களில் வாழ்கின்றனர்; மேலும், வெறுக்கத்தக்கதான தமோ குணத்தில் இருப்பவர்கள் நரக லோகங்களுக்குக் கீழ்நோக்கிச் செல்கின்றனர்.

Bg 14.19 — எல்லாச் செயல்களிலும், இயற்கையின் குணங்களைத் தவிர வேறு கர்த்தா யாரும் இல்லை என்பதையும், பரம புருஷர் இந்த இயற்கை குணங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதையும் அறிந்து முறையாகக் காண்பவன், எனது ஆன்மீக இயற்கையை அடைகின்றான்.

Bg 14.20 — உடலை உடையவன், ஜடவுடலுடன் தொடர்புடைய இந்த மூன்று குணங்களிலிரந்து உயர்வு பெற முயலும்போது, பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் இவற்றின் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று, இந்த வாழ்விலேயே அமிர்தத்தை சுவைக்க முடியும்.

Bg 14.21 — அர்ஜுனன் வினவினான்: எம்பெருமானே, இந்த மூன்று குணங்களைக் கடந்தவனை அறிவதற்கான அறிகுறிகள் யாவை? அவனது நடத்தைகள் யாவை? இயற்கை குணங்களிலிருந்து அவன் உயர்வு பெறுவது எவ்வாறு?

Bg 14.22-25 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: பாண்டுவின் மைந்தனே, பிரகாசம், பற்றுதல், மயக்கம் ஆகியவை தோன்றியிருக்கும்போது அவற்றை வெறுக்காதவனும், அவை மறைந்திருக்கும்போது அவற்றிற்காக ஏக்கமடையாதவனும்; இயற்கை குணங்களின் விளைவுகளுக்கு மத்தியில் ஸ்திரமாக, சஞ்சலமின்றி, நடுநிலையில், அப்பாற்பட்டு இருப்பவனும், குணங்களே செயல்படுகின்றன என்பதை அறிபவனும்; தன்னில் நிலைபெற்று இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதுபவனும்; மண்ணையும் கல்லையும் பொன்னையும் சமமாகக் காண்பவனும்; பிரியமானவற்றிலும் பிரியமற்றவற்றிலும் சமநிலை உடையவனம்; திடமானவனும், புகழ்ச்சி இகழ்ச்சி, மானம் அவமானம் ஆகியவற்றில் சமமாக நிலை பெற்றவனும், நண்பனையும் எதிரியையும் சமமாக நடத்துபவனும்; எல்லா பலன்நோக்குச் செயல்களையும் துறந்தவனுமான மனிதன் இயற்கை குணங்களைக் கடந்தவனாகக் கூறப்படுகின்றான்.

Bg 14.26 — எந்தச் சூழ்நிலையிலும் தவறாமல், எனது பூரண பக்தித் தொண்டில் ஈடுபடுபவன், ஜட இயற்கையின் குணங்களை உடனடியாகக் கடந்து, பிரம்மன் நிலைக்கு வந்தடைகின்றான்.

Bg 14.27 — மேலும், மரணமற்றதும், அழிவற்றதும், நித்தியமானதும், இறுதி இன்பத்தின் தர்மமுமான அருவ பிரம்மனின் ஆதாரம் நானே.

 

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question