Tuesday, January 28

கீதா மஹாத்மியம் அத்தியாயம் – 8 I Gita mahatmiya Chapter-8

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பத்ம புராணத்திலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதை எட்டாம் அத்தியாயத்தின் மஹிமை

சிவபெருமான் கூறினார், “எனதன்பு பார்வதியே, ஸ்ரீமத் பகவத்கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி இப்போது கேட்டு ஆனந்தம் அடைவாயாக”. 

    தெற்கே, அமர்த்கபூர் என்ற ஊரில், பவஷர்மா என்ற பிராமணன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு விலைமாதுவை திருமணம் செய்தான். அதோடு, மது அருந்துவது, மாமிசம் உண்பது, திருடுவது, வேட்டையாடுவது, பிறர் மனைவியரை அனுபவிப்பது போன்ற அனைத்து பாவகாரியங்களிலும் ஈடுபட்டான். ஒரு முறை விருந்திற்கு சென்ற பவஷர்மா மிகவும் அதிகமாக மது அருந்தினான். அதன் விளைவாக வயிற்றுக்கடுப்பால் மிகவும் அவதிப்பட்டான். மிகவும் துன்புற்ற அவன் ஒரு நாள் இறந்து போனான். அடுத்த பிறவியில் ஒரு பேரீச்ச மரமானான்.

    ஒரு நாள் இரண்டு பிரம்மராட்சசர்கள் அந்த மரத்தடியில் ஓய்வெடுக்க வந்தனர். அந்த பிரம்மராட்சசர்களுடைய முந்தைய ஜென்மத்தின் கதை இதோ:

    குசீலன் என்ற பிராமணன், வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத்தேர்ந்தவராக இருந்தான். அவனுடைய மனைவி குமதி, தீய எண்ணம் கொண்டவள். தன் மனைவியுடன் பல இடங்களுக்கு சென்று தானம் வாங்கும் பிராமணன், பேராசையின் காரணமாக தான் பெற்ற தானத்தை வேறு எந்த ப்ராமணனுடனும் பகிர்ந்து கொள்ளமாட்டான். இக்காரணத்தினால் இறப்பிற்கு பின்னர் இருவரும் ப்ரஹ்மராக்ஷசர்களாக மாறினர். இருவரும் பசியாலும் தாகத்தாலும் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தனர்.

    அப்போது இந்த பேரீச்ச மரத்தின் அடியில் ஓய்வெடுக்க வந்தனர். அப்போது குமதி, தன் கணவரிடம், “பிரம்மராட்சசர்களின் ரூபத்திலிருந்து நாம் எவ்வாறு வெளியே வர முடியும்?” என்று வினவினாள்.அதற்கு குசீலன், “தன்னை பற்றி அறிந்து, பிரமனை பற்றி அறிந்து, பலனளிக்கும் செயல்களை பற்றி அறிந்தால் மட்டுமே நாம் விடுதலை அடைய முடியும். அந்த ஞானம் இல்லாவிட்டால் நமது பாவங்களிலிருந்து நாம் விடுபட முடியாது” என்று பதிலளித்தார்.இதை கேட்ட மனைவி, “ஹிம் தத் ப்ரஹ்ம கிம் அத்யாத்மம் கிம் கர்மா புருஷோத்தமா?” என்று வினவினாள் . [இதற்கு அர்த்தம் பிரம்மன் என்றால் என்ன? தான் என்றால் என்ன? பலனளிக்கும் செயல்கள் என்றால் என்ன?]

    எதிர்பாராத விதமாக, அவள் வினவியது ஸ்ரீமத் பகவத் கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் ஒரு ஸ்லோகத்தின் வரிகளாகும். அப்போது அந்த ஸ்லோகத்தை கேட்டுக்கொண்டிருந்த மரத்தின் வடிவிலிருந்த பவசர்மா, மரத்தின் வடிவிலிருந்து விடுதலை அடைந்து மீண்டும் பிராமணரின் உடலை பெற்றார். அதே சமயம் அங்கு வந்த புஷ்பக விமானம், குசீலன் பிராமணரையும் அவரது மனைவியையும் ஏற்றிக்கொண்டு வைகுந்ததை நோக்கி சென்றது.

    இக்காட்சியை கண்ட பவசர்மா, தான் கேட்ட அந்த பாதி ஸ்லோகத்தை குறித்துவைத்து கொண்டார். காசீபுரிக்கு திரும்பி வந்து, பகவான் கிருஷ்ணரை வழிபாடு செய்து விட்டு, தினமும் மிகுந்த பக்தியுடன், இந்த பாதி ஸ்லோகத்தை படித்து வந்தார்.

    அச்சமயம், வைகுந்தத்தில் பகவான் விஷ்ணு திடீரென்று எழுந்தார். இதைக்கண்ட லட்சுமி தேவி, “பகவானே, எதற்காக உறக்கத்திலிருந்து திடீரென்று எழுந்தீர்கள்?”என்று வினவினார். பகவான், “எனதன்பு லட்சுமியே, காசீபுரியில் கங்கை நதிக்கரையில் என்னுடைய பக்தன் ஒருவன் கடும் தவம் புரிந்து ஸ்ரீமத் பகவத் கீதையின் எட்டாம் அத்தியாயத்திலிருந்து பாதி ஸ்லோகத்தை தினமும் படித்து வருகிறான். இவனுடைய பக்திக்கு என்ன ஆசி வழங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தார். பார்வதி தேவி சிவபெருமானிடம் வினவினார், “பகவான் விஷ்ணு அந்த பிராமணருக்கு என்ன ஆசி வழங்கினார்?”

    சிவபெருமான், “பகவான் விஷ்ணு பவஷர்மாவை வைகுந்தத்திற்கு அழைத்து வந்ததோடல்லாமல் நிரந்தரமாக தனக்கு சேவை செய்யும் வாய்ப்பையும் அளித்தார். அதுமட்டுமல்லாமல், பாவஷர்மாவின் அனைத்து முன்னோர்களும் விடுதலை பெற்று பகவானின் பாத கமலங்களை அடைந்தனர். எனதன்பு பார்வதியே, நான் ஸ்ரீமத் பகவத் கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் சில சிறப்புகளை மட்டுமே கூறியிருக்கிறேன்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question