ராமச்சந்திர கவிராஜர்
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் நித்திய சேவகரான ஸ்ரீ சிரஞ்சீவ சேனாவின் மகனான ராமச்சந்திர கவிராஜர், ஸ்ரீ கண்டா என்னும் திருத்தலத்தில் தோன்றினார். “ராமச்சந்திர கவிராஜர் குறிப்பாக மிகவும் தீவிரமானவர், அழகானவர், புத்திசாலி, ஆற்றல் மிக்கவர் மற்றும் உற்சாகம் நிறைந்தவர்,” என்று ஒரு வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
திருமணமாகியிருந்தாலும், ராமச்சந்திரரும் அவரது மனைவி ரத்னலாவும் லௌகீக பற்றுதல்கள் ஏதுமின்றி இருந்தனர். அவர்கள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அன்பான சேவையில் முழுமையாக ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அவர் தனது ஆன்மீக குருவான ஸ்ரீனிவாச ஆச்சாரியருக்கு உறுதியான பக்தியுடன் சேவை செய்தார். பிருந்தாவனத்தில், ஸ்ரீ ஜீவ கோஸ்வாமி அவருக்கு ‘கவிராஜர்’ (கவிஞர்களின் அரசன்) என்ற பட்டத்தை வழங்கினார்.
அவர் பின்வரும் அழகான பாடலை எழுதியுள்ளார்:
பிரகாசில மஹாபிரபு ஹரே கிருஷ்ண மந்த்ர பிரேமேர பாதர கரி பாரில சம்சர அந்த அவதி யத கரே பர்ச பிந்து நா பாடில முகே ராமச்சந்திர தாஸ
பொருள்: “ஸ்ரீமன் மஹாபிரபு மிகவும் கருணை வாய்ந்தவர்; அவர் ஹரே கிருஷ்ண மந்திரம் என்னும் அமுதத்தை வெளிப்படுத்தியுள்ளார். இத்திருநாமம் அனைத்து ஆன்மாக்களையும் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்தும், கீழ் லோகங்களிலிருந்தும், நரகத்திலிருந்தும் விடுவிக்கும். இத்திருநாமம் ராதா-மாதவரின் திவ்யமான அன்பின் சுவையை ஒருவருக்கு வழங்கும்.
குருடராக இருந்தாலும் சரி, ஊமையாக இருந்தாலும் சரி, யார் வேண்டுமானாலும் இந்த ‘பிரேமா’ (தெய்வீக அன்பு) வெள்ளத்தில் மூழ்கலாம். அந்த வகையில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அனைவரையும் இறை அன்பால் நிரப்பியுள்ளார். ஆனால் ராமச்சந்திர தாஸாகிய நான் மிகவும் துரதிர்ஷ்டவசமானவன், அந்த அமுதத்தின் ஒரு துளியைக் கூட என்னால் சுவைக்க முடியவில்லை.”
ஸ்ரீனிவாச ஆச்சாரியரின் சீடர்களான, புகழ் பெற்ற எட்டு கவிராஜர்களில் (கவிஞர்களில்) ராமச்சந்திர கவிராஜரும் ஒருவர். ராமச்சந்திரர் ஸ்மரண தர்பண, ஸ்மரண சமத்கார, சித்தாந்த சந்திரிகா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். அவர் பரவலாக பிரச்சாரம் செய்து பல சீடர்களுக்கு தீட்சை அளித்தார்.
நரோத்தம தாச தாகூரும் ராமச்சந்திரரும் நெருங்கிய நண்பர்களாக ஒன்றாக வாழ்ந்தனர். நரோத்தம தாசர் பின்வருமாறு எழுதியுள்ளார்: “தய கர ஸ்ரீ ஆசார்ய பிரபு ஸ்ரீனிவாச; ராமச்சந்திர சங்க மாகே நரோத்தம தாஸ” அதாவது, “ஓ ஸ்ரீனிவாச ஆச்சாரிய பிரபுவே, தயவுசெய்து எனக்கு உங்கள் கருணையை வழங்குங்கள். நரோத்தம தாசராகிய நான் எப்போதும் ராமச்சந்திர கவிராஜரின் கூட்டுறவை (சங்கம்) வேண்டுகிறேன்.”
இவர் ‘கர்ண மஞ்சரி’ என்னும் வடிவில், விரஜ லீலையில் ஸ்ரீமதி ராதாராணிக்கு சேவை செய்கிறார். இவரது சமாதி தீர சமீர குஞ்சாவில் (Dhira Samira Kunja), ஸ்ரீனிவாச ஆச்சாரியரின் சமாதிக்கு அருகில் அமைந்துள்ளது.

